தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நீட் தேர்வு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்..- ஜனாதிபதியிடம் முதலமைச்சர் நேரில் கோரிக்கை

01:55 PM Oct 27, 2023 IST | admin
Advertisement

டாக்டர் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் எனும் இந்திய அளவிலான பொது நுழைவு தேர்வு என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நீட் நுழைவு தேர்வு முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு 2 முறை நீட் விலக்கு குறித்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. முதலில் 2021இல் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதன் பிறகு, மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது. நீட் தேர்வு தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக பயன்பாட்டில் இருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து இளங்கலை பொது மற்றும் பல் மருத்துவம் சேரும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தமிழகம் வந்திருந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் , இந்த மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மாணவர்களின் நலன் காக்க நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

Advertisement

சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, டெல்லி புறப்பட்டுச் செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இன்று (27-10-2023) சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021-க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேரில் வலியுறுத்திய தமிழக முதலமைச்சர் அவர்கள், இதுதொடர்பாக மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு, இன்று (27-10-2023) தான் எழுதியுள்ள கடிதத்தையும் வழங்கினார்.

அக்கடிதத்தில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகவும், இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதாலும், அதைத் தொடர்ந்து ஒன்றிய சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்டஓ நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021 (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021) நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் அவர்கள்,மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டி மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், மேற்படி சட்டமுன்வடிவு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர்கல்வித் துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளதாக தேதிவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, 14-8-2023 அன்று தான் கடிதம் எழுதியிருந்ததாகவும், அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் மேற்படி சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தான் கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது என்றும் முதலமைச்சர் அவர்கள் கவலைபடத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார் என அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags :
chief ministerDoctor degreeExamination BillM K Stalinneetpersonal requestpresident
Advertisement
Next Article