மருத்துவப் படிப்பு எனும் மாயத் தோற்றம்...!
17 வயதில் மருத்துவக்கல்லூரியில் நுழைந்து இளநிலை முடிக்கும் போது வயது 24 ஆகியிருக்கும்.பிறகு குறைந்தபட்சம் ஒரு வருடம் NEET preparation. 25 வயதில் முதுநிலை சேர்ந்தால் முடிக்கும் போது 28. அதன் பின்னர் பிறகு ஒன்று அல்லது இரண்டு வருட super speciality தயாரிப்பு. முடிக்கும் போது 32 அல்லது 33. வெகு சிலர் 30-31ல் முடிக்கின்றனர். இந்த கணக்கு எந்த வருடமுமே தவறாமல் மிகச் சரியாக நடந்தால் வரும் Result. சூப்பர் ஸ்பெசாலிட்டி முடிக்கும் வரை கடிவாளமிட்ட குதிரை போல அதை மட்டுமே நோக்கமாக கொண்டு பயணிக்கின்றனர். சீனியர் ஜூனியர் முதல் ரிடையர்ட் ஆன புரபசர் வரை எப்போ PG என்பதே கேள்வி. ஒட்டு மொத்த மருத்துவ சமூகமும் டாக்டரின் வெற்றி PGபடிப்பதில் தான் என நம்ப வைக்கப்பட்டுள்ளது.
நிற்க. இப்போது ஒரு Real scenario...!
கணக்கிட வசதியாக மதுரை எனும் நகரத்தை எடுத்துக் கொள்கிறேன். காரணம் மதுரையில் எனது குடும்ப உறுப்பினருள் ஒருவர் மருத்துவராய் இருக்கிறார். மதுரையின் மக்கள் தொகை தோராயமாக 15 லட்சம். அதில் prevalence விகிதத்தின் படி 12000 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களில் சரி பாதி அதாவது 6000 பேர் பின்வரும் வகைப்பாட்டில் அடங்குவர்.
1. தனியார் மருத்துவமனையில் செலவளிக்க இயலாமல் அரசு மருத்துவமணையை நம்பியுள்ளோர்.
2. நோய் கண்டறியப்படாதோர்.
3. நோய் அறியப்பட்டும் சிகிச்சை எடுக்காதவர்.
4. மாற்றுமுறைகளுக்கு செல்பவர். 5. சுய மருத்துவம் செய்பவர்.
மீதி உள்ள 6000 பேர் தான் மதுரையில் உள்ள அனைத்து தனியார் Nephrologistsகளின் நோயாளிகள். மார்க்கெட் சைஸ் இவ்வளவு தான். இவர்கள் அனைவரும் சராசரியாக மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது மாதம் 6000 நோயாளிகள். தினமும் 200 நோயாளிகள். இந்த 200 பேரைத் தான் மதுரையில் உள்ள மொத்த நெப்ராலஜிஸ்ட்களும் பிரித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மதுரையில் அப்பலோ, மீனாட்சி மிஷன், வேலம்மாள், ப்ரித்தி, வடமலையான், தேவதாஸ், விக்ரம் போன்ற பத்து பெரிய மருத்துவமணைகளும் இருபது Nephrology clinicsஅல்லது சிறிய ஹாஸ்பிடல்களும் உள்ளன.
கிட்டத்தட்ட 20-25 நெப்ராலஜிஸ்டகள் எனக்குத் தெரிந்தே உள்ளனர். கணக்கெடுத்துப் பார்த்தால் 40 பேராவது வருவர்.தற்போது ஆக்டிவ் 25 பேர் என வைப்போம். 25 பேருக்கும் சேர்த்து அந்த 200 நோயாளிகள் தான். 15 வருடங்களுக்கு முன் பிராக்டிஸ் ஆரம்பித்தவர்களுக்கு 20 நோயாளிகள் வரை தினசரி வருகிறார்கள். அதாவது நான்கு - ஐந்து மருத்துவர்கள் 100 நோயாளிகளை எடுத்துக் கொள்கின்றனர். மீதி 100 நோயாளிகளைத்தான் மீதமுள்ள 20 பேர் பகிர்கின்றனர்.
குறிப்பாக புதிதாக படித்து முடித்து பணிக்கு வந்தவர்கள். தினசரி ஐந்து நோயாளிகளைப் பார்த்தாலே பெரிய விசயம். கட்டணம் ரூ500. ஐந்து பேருக்கு ரூ2500. இதில் வாடகை, சம்பளம் வேறு. லேப், மெடிக்கல்ஸ் டயாலிஸிஸ் போன்றவை தான் காப்பாற்றுகிறது. எப்படிப் பார்த்தாலும் மாதம் ஒருலட்சம் கூட தேறுவது இல்லை என்பதே எதார்த்தம்.இதில் ஒவ்வொரு வருடமும் புதிதாக 4-5 மருத்துவர்கள் ஜோதியில் ஐக்கியமாகிறார்கள்.
பேரு பெத்த பேரு என்பதைப் போல கடிவாளம் கட்டிய குதிரை போல மாங்கு மாங்கென்று 33 வயது வரை படித்துவிட்டு ஒரு லட்சத்திற்கு குட்டிக்கரணம் போடுவதே தற்போதைய நிலை. 500 ரூபாய் ஒப்பீனியன் கொடுக்க முன்னூறு ரூபாய் செலவளித்து காரில் செல்லும் பெருமைக்கு எருமை மேய்க்கும் நிலையே இங்குள்ளது. இந்த நிலைமை வருங்காலத்தில் இன்னமும் மோசமாகும் என்பதே என் கணிப்பு.
எக்கச்சக்க பிரைவேட் காலேஜ்கள், பிஜி முடித்தே ஆகவேண்டும் என்ற வெறி இவற்றால் வருங்காலத்தில் நோயாளிகளின் பெருக்கத்தைவிட மருத்துவர்களின் பெருக்கம் அதிகமாகும் என்பதே உண்மை. பழைய காலத்தில் அனைவரும் எம்பிபிஎஸ் ஆக இருந்த போது பிஜி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது உண்மை. இப்போது நிலைமை அப்படியே தலைகீழ் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கும் ஒரு லட்சம் பிஜிக்கும் ஒரு லட்சம். ஆனால் எம்பிபிஎஸ் முடித்தவர்கள், பிஜி முடிப்பவர்கள் படிக்கும் பத்து வருடங்களில் குறைந்த பட்சம் 50லட்சமாவது சேர்த்து வைத்துவிடுகின்றனர். சோப்பு டப்பாவிற்காக மாரத்தான் ஓடும் ஏமாற்றமே பல தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது.
மதுரையில் திருச்சியில் புதுக்கோட்டையில் கடந்த ஐந்து வருடங்களுக்குள் பிராக்டிஸ் வந்தவர்களில் யாரும் இரண்டு லட்சம் மாத வருமானத்தைத் தாண்டவில்லை. சென்னையில் சிலர் மூன்று - நான்கு லட்சம் வரை செலகின்றனர். ஆனால் அதற்காக தினமும் பதினாறு மணி நேரம் வரை உழைக்கின்றனர்.
நெப்ராலஜி என்பது ஒரு எடுத்துக்காட்டு கிட்டத்தட்ட அனைத்து துறையும் அவ்வாறே. ஒருகாலத்தில் ஹீரோ என கருதப்பட்ட கோடிகளில் விலை போன ரேடியாலஜி புதிய தொழில் நுட்பங்களால் மங்கி வருகிறது. இருபது ஸ்கேன் சென்டர்களுக்கு ஒரு ரேடியாலஜிஸ்ட் போதும் எனும் நிலைமை. இன்னும் சில நாட்களில் ரேடியாலஜி மருத்துவர்களுக்கும் பெரிய சிக்கல் உள்ளது.
மகப்பேறு, ஆர்தோ மற்றும் குழந்தைகள் நலம் போன்ற சில பிரிவுகள் ஓரளவு தாக்குப்பிடிக்கின்றன. மனித உழைப்பு தேவைப்படும் பிரிவுகள், சர்ஜரி பிரிவுகள் ஓரளவு தப்பிக்கின்றன. இவர்களைப் பற்றி புலம்பவாவது முடிகிறது. பல் டாக்டர்கள் என்றொரு பாவப்பட்ட ஜீவன்கள் தமிழ்நாட்டில் உண்டு. அவர்கள் நிலை இன்னும் மோசம்.
தமிழ் வாத்தியார், கிராம கோயில் பூசாரி போன்றே அடித்தால் திருப்பி கேட்க முடியாத லிஸ்டில் தான் இன்றைய டாக்டர்கள் என்பதே எதார்த்தம்.