For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அதிகாலைச் சூரியன் இனிதா, அந்தி மாலைச் சூரியன் இனிதா

01:49 PM Apr 09, 2024 IST | admin
அதிகாலைச் சூரியன் இனிதா  அந்தி மாலைச் சூரியன் இனிதா
Advertisement

ன்றைய காலைப் பொழுது ஒரு சண்டையில்தான் தொடங்கியது. செல்லச் சண்டை. எனக்கும் நண்பர் சுப்ரபாலனுக்கும் இடையில் நடந்தது. அதிகாலைச் சூரியன் இனிதா, அந்தி மாலைச் சூரியன் இனிதா? இதுதான் சண்டையின் கருப் பொருள். உயிர்களுக்கு விழிப்பைத் தரும் அதிகாலையே இனிது என்பது அவர் தரப்பு. ஓய்வுக்கும் உறக்கத்திற்கும் கட்டியங்கூறும் அந்தி மாலையே மிகச் சிறப்பு என்பது என் தரப்பு.

Advertisement

உண்மையில் எது சிறப்பு? யோசித்துப் பார்க்கிறேன்.

Advertisement

பத்தாம் வகுப்பு முடிக்கும்வரை, நான் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவன். விவசாயக் குடும்பம். ஒன்பதாம் வகுப்புவரை மின்வசதியை அனுபவித்தறியாதவன். விவசாயத்திலும் இயந்திரங்கள் வராத காலம். அதனால், அனைவருக்கும் உடலுழைப்பே பிரதானம். கிணறுகளிலும் ஏற்றம்தான். கிணறுகளை ஆயில் எஞ்ஜின்கள் ஆக்கிரமிக்கும்வரை நான் மிகச்சிறுவனாகவே இருந்ததால் எனக்கு ஏற்றம் இறைப்பது கற்றுத்தரப்படவேயில்லை.

உழவு அப்படியல்ல. கலப்பை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்ததும் எனக்குக் கற்றுத் தரப்பட்டது. விடுமுறை நாள்களில் உழவு வேலை இருந்தால் அதிகாலை தொடங்கினால், சூரியன் மறையும்வரை உழவுதான். மதிய நேரத்தில் சுமார் இரண்டு மணிநேரம் சாப்பிடவும் ஓய்வெடுக்கவும் கிடைக்கும். உழவு மாடுகளுக்கும்தான். உழும்போது நடக்கும் தூரம் என்பது நாளொன்றுக்குச் சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டராவது இருக்கும். வெற்றுப் பாதங்களுடன் நடந்து நடந்து கால்கள் இற்றுப் போகும். மாடுகளுக்கும்தான். அதனால், எப்போது சூரியன் மறைவான் என்று உழுபவனோடு சேர்ந்து உழவு மாடுகளும் காத்திருக்கும்.

அப்பாடா, ஆதவன் மறைந்ததும் ஏர்களிலிருந்து மாடுகளை அவிழ்த்து விடும்போது உழுதவன் கண்களில் மட்டுமல்ல; மாடுகளின் கண்களிலும் ஓய்வின் மகிழ்ச்சி கொப்புளிக்கும். எல்லா மாடுகளும் அதனதன் கட்டுத்தரைகளுக்குச் சென்று நின்றபடி தீவனங்களுக்குக் காத்திருக்கும். தீவனம் போட்டதும் தின்றுவிட்டுத் தாழியில் இருக்கும் புண்ணாக்கு, பருத்திக் கொட்டைப் பால், தவிடு கலந்த நீரைக் குடித்துவிட்டுப் படுக்கும்போது அவற்றுக்கு அத்தனை மகிழ்ச்சி. உழுதவனுக்கும் அதே மகிழ்ச்சிதான்.

ஆக, உழைத்துக் களைத்த எல்லா உயிர்களுக்கும் ஓய்வை உத்திரவாதப் படுத்துவது மாலைச் சூரியன்தான். பறவைகளிடம் கூட இரைதேடி முடித்துக் கூடு திரும்பும் உற்சாகமே அதிகமாகக் காணப்படும். சுருக்கமாகச் சொன்னால், அதிகமான உடலுழைப்புள்ளவர்களுக்கு மாலைச் சூரியன் இனிது. அல்லாதோருக்கு காலைச் சூரியன் இனிது.

உண்மையைச் சொன்னால். அதிகாலையாக இருந்தாலும் அந்திமாலையாக இருந்தாலும் இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான். உழைப்பின்றி ஓய்வில்லை; ஓய்வின்றி உழைப்பில்லை.

செ. இளங்கோவன்

Tags :
Advertisement