தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் முகமாக இருந்த அமரர் டில்லி பாபு நினைவேந்தல் கூட்டத்துளிகள் !

09:08 PM Sep 22, 2024 IST | admin
Advertisement

மிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. டில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று காலை சென்னையில் மறைந்த டில்லி பாபு குடும்பம், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொள்ளும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வை தயாரிப்பாளர் தனஞ்செயன் தொகுத்து வழங்கினார்.

Advertisement

நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்கே செல்வமணி, "டில்லி பாபுவை எனக்கு கடந்த ஏழு எட்டு வருடங்களாக தெரியும். என் வீட்டில் தான் அவரது அலுவலகம் உள்ளது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். எப்போதும் சிரித்த முகத்தோடும் குழந்தைத் தனமாகவும் இருப்பார். என்னுடைய வீட்டில் ஏழெட்டு வருடங்களாக அவரது அலுவலகம் இயங்கி வருகிறது. வெயில், மழை, கொரோனா என எது வந்தாலும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் வாடகை போட்டு விடுவார். எனக்கு மட்டுமல்ல, எல்லோரிடமும் இன்முகத்தோடு இருப்பார். அவரது நல்ல குணங்களை நாம் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் நினைவஞ்சலி. வெற்றிப் படம், தோல்விப் படம் என்றில்லாமல் எல்லாப் படங்களுக்கும் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும். மிகச்சிறந்த மனிதர். அவரது புகழ் நிச்சயம் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும்” என்றார்.

Advertisement

அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா பேசுகையில், “டில்லி பாபு சார் மிகவும் நல்ல மனிதர். தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகதான் இருந்திருக்கிறார். அவருக்குப் பின் அவரது தயாரிப்பு நிறுவனம் இதே புகழோடும் நற்பெயரோடும் இருக்க நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். தேவுக்கும் எனது வாழ்த்துக்கள்”

தயாரிப்பாளர் நந்தகோபால், “டில்லி சாருக்கு நான் அவ்வளவு நெருக்கம் கிடையாது. இருந்தாலும் ஒரு தயாரிப்பாளராக என்னைப் போல பலருக்கும் அவர் உதவியாக இருந்தார். புதுமுக திறமைசாலிகளுக்கு குறிப்பாக இயக்குநர்களை ஊக்குவிக்கும் ஒருவராக அவர் இருந்தார். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி இதைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்” என்றார்.

அசோக் பேசுகையில், "ஒவ்வொருவரும் அவரை வெவ்வேறு கோணங்களில் பார்த்திருப்பார்கள். உங்கள் அனைவருக்கும் அவரை ஒரு தயாரிப்பாளராக தெரியும். ஆனால், நான் என் மாமாவை ஒரு நல்ல மனிதராக பார்த்திருக்கிறேன். அவர் இல்லாமல் அலுவலகத்தையும் அவரது முயற்சிகளையும் எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவரை எந்த விதத்திலும் நம்மால் மிஞ்ச முடியாது. ஆனால் அவரது கால்தடங்களை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்” என்றார்.

நடிகர் முனீஷ்காந்த், “ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கம்பெனி ஆர்டிஸ்ட் போல நான். அவர்கள் தயாரிப்பில் பல படங்களில் நடித்திருக்கிறேன். நல்ல மனிதர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது”. என்றார்

இயக்குநர் ஏஆர்கே சரவன், “இந்த மாதிரி நிகழ்வில் நான் கலந்து கொள்வேன் என நினைக்கவே இல்லை. ‘மரகத நாணயம்2’ தொடங்கி பல நிகழ்வுகளுக்கு திட்டமிட்டிருந்தோம். முதல் பட இயக்குநருக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது வரம். பல வகைகளில் எனக்கு நம்பிக்கையாக இருந்தர். அவரிடம் இருந்த மனிதம் என்ற விஷயத்திற்காகதான் இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள் என நம்புகிறேன். ஜூன் 22 அன்றுதான் அவரை கடைசியாக சந்தித்தேன். ஒருவருடைய புகைப்படம் பார்த்து ஒருவருக்கு அழுகை வருகிறது என்றால் எந்தளவுக்கு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதில் இருந்து நிச்சயம் நாம் மீண்டு வந்து அவர் பாதையைத் தொடர்வோம்”.என்றார்

இயக்குநர் ராம்குமார், “என்னுடைய ‘ராட்சசன்’ கதையை 35 பேர் நிராகரித்தார்கள். எனக்கு சினிமா மேல் வெறுப்பே வந்துவிட்டது. 36ஆவது நபராகதான் டில்லி பாபு சாரிடம் கதை சொன்னேன். கேட்டவுடன் உடனே ஒத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தார். 35 பேர் நிராகரித்தார்கள் என்றாலும் அவர் என் மேல் சந்தேகப் படாமல் நம்பிக்கை வைத்தார். பல விதங்களில் எனக்கு நம்பிக்கைக் கொடுத்தார். நம் மேல் நம்பிக்கை வைக்கும் நபர்கள் கிடைப்பது கஷ்டம். அப்படியான ஒருவரை நான் இழந்திருப்பது பெரும் இழப்பு. அவரை இந்த சமயத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறேன்”.என்றார்

நடிகர் ஜெயப்பிரகாஷ், “டில்லி பாபு சாரை சில முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவரது இழப்பு என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. அதற்குக் காரணம் அவரது நல்ல மனதுதான். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்”என்றார்

நடிகர் ரமேஷ் திலக், “நான் எப்போதாவதுதான் அவரிடம் பேசுவேன். ‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி விழாவின் போது அவரிடம் ‘ஹாய்’ சொன்னேன். அவர் இல்லை என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்”என்றார்

இயக்குநர் ஸ்ரீகணேஷ், “டில்லி பாபு சாரை பல வருடங்களாக எனக்கு தெரியும் என்பதை ஆசீர்வாதமாக உணர்கிறேன். அவரது சினிமா அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். தன்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களைப் பார்த்து எப்போதும் மகிழ்ச்சி அடைவார். அவரது தயாரிப்பு நிறுவனம் அவருக்கு இன்னொரு குடும்பம் போலதான். அவர் பின்பற்றிய இந்த விஷயம் இனி வருங்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் மு. மாறன், “புது இயக்குநர் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லும்போது கண்டிப்பாக நிராகரிப்பு இருக்கும். ஆனால், டில்லி பாபு சாரிடம் நான் வாய்ப்பு கேட்டபோது, அவர் உடனடியாக என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கச் சொன்னார். அவரும் பூர்னேஷும் ஸ்கிரிப்டைக் கேட்டு, ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தனர். இந்தப் படத்தில் ஜான் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் விரும்பியது மிகவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக மாட்டார் என்று நான் அவரிடம் சொன்னபோது, அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு அந்த யோசனையை கைவிட்டார். இனி என்னால் அவரை அழைக்கவோ பேசவோ முடியாது என்ற உண்மையை என்னால் நம்ப முடியவில்லை"என்றார்

தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது, "’ஓ மை கடவுளே’ படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஸ்கிரிப்டை கேட்ட ஒரே வாரத்தில் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டார். தொலைநோக்கு பார்வை மற்றும் மிகப் பெரும் கனவுகள் கொண்ட மனிதர் அவர். அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்றார்.

இயக்குநர் சதீஷ், "டில்லிபாபு சார் எல்லோரையும் சமமாக மரியாதையுடன் நடத்தக் கூடியவர். நான் அவரை முதன்முதலில் சந்தித்து ‘பேச்சிலர்’ படத்தின் கதையை விவரித்தபோது, அவர் எதுவும் சொல்லவில்லை. அவர் என்னை திரும்ப அழைக்க மாட்டார் என்று நான் உறுதியாக நம்பி, சொந்த ஊருக்குத் திரும்பவும் முடிவு செய்தேன். 10 நாட்களுக்குப் பிறகு அவர் என்னை அழைத்து தனது முழு குடும்பத்திடமும் மீண்டும் ஸ்கிரிப்டை விவரிக்க சொன்னார். அவர் குடும்பத்தினர் கருத்துகளும் படத்திற்கு உதவும் என்று சொன்னார். அவர் தனது தாய்க்கு கொடுத்த மரியாதை மிகவும் நிபந்தனையற்றது. இந்த கதையில் பணியாற்ற வேண்டாம் என்று பலரும் அறிவுரை கூறிய போதிலும், அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அட்வான்ஸ் தொகையை கொடுத்து படத்தை தொடங்கினார். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தொடர்ந்து இளம் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன், வாழ்த்துகிறேன்" என்றார்.

இயக்குநர் பி.வி. ஷங்கர், “அவர் இல்லை என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. அர்ப்பணிப்புடன் கூடிய கடுமையான உழைப்பாளி அவர். ‘ஏன் சரியாக சாப்பிடுவதில்லை?’ என்று அவரிடம் எப்போதும் நான் கேட்பேன். அவரை கடந்த 9 வருடங்களாக எனக்கு தெரியும். யாரையும் அவர் மரியாதை குறைவாக நடத்தியதில்லை. அவர் மறைந்துவிட்டாலும் அவரது சிரித்த முகம் எப்போதும் என் நினைவில் இருக்கும்”என்றார்

தயாரிப்பாளர்- இயக்குநர் பிரவீன் காந்தி, “இவ்வளவு சீக்கிரம் டில்லி பாபு சாரை எடுத்துக் கொண்டதற்காக அந்தக் கடவுள் மீது கடும் போகத்தில் இருக்கிறேன். பொறாமையும் போட்டியும் நிறைந்த இந்த சினிமாத்துறையில் இப்படி ஒரு தன்னலமற்ற ஒருவரைப் பார்ப்பது கடினம். பல இயக்குநர்களின் வெற்றிக்கு அவர் காரணம். அவருடன் வேலை பார்த்த இயக்குநர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு அவரை பெருமையடைய செய்வார்கள் என்று நம்புகிறேன்”என்றார்

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், “சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் உடல்நலனை கவனிக்க சொன்னேன். ஆனால், தொடர்ந்து அதை அவர் நிராகரித்துக் கொண்டே வந்ததில் அவர் மீது எனக்கு கோபம் இருந்தது. பூர்னேஷ் இந்த நிறுவனத்தை இதே நற்பெயரோடு தொடர வேண்டும் என விரும்புகிறேன். நல்ல மனிதர்கள் மரித்து போவதில்லை. அவர்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்”என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி, பி.சக்திவேலன் பேசும்போது, "பல தயாரிப்பாளர்கள் புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்க நினைத்தாலும் அது எதோ ஒருவிதத்தில் தவறிப்போகிறது. ஆனால், தில்லி பாபு சார் ஒரு நேர்மையான மனிதர். இளம் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சாதிக்க அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். கொரோனா காலகட்டத்தில், எந்த திரையரங்க உரிமையாளர்களையும் வசூல் கொடுக்குமாறு கட்டாயப்படுத்த முடியவில்லை. இது ஒரு கடினமான சூழ்நிலை என்று அவரிடம் சொன்னபோது அதைப் புரிந்து கொண்டு லாக்டவுன் முடியும் வரை அவர் என்னை தொந்தரவு செய்யவில்லை. அவ்வளவு நல்ல மனம் படைத்தவர். வணிகம் என்று வரும்போது, அவர் மிகவும் நேர்மையானவர். கொடுத்த வார்த்தையை மீற மாட்டார். புதிய தயாரிப்பாளர்கள் யாராவது சினிமாவிற்குள் நுழைந்தால் இவரது நல்ல குணத்தில் 50 சதவீதமாவது வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவேன்” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, "தில்லி பாபு சார் என் கரியருக்கு புத்துயிர் கொடுத்தார். அவர் என்னையும் என் சகோதரியையும் மிகவும் அக்கறையுடன் வழிநடத்தினார். ’ஓ மை கடவுளே’ படம் வெளியாவதற்கு முன்பு வரை எனக்கு இண்டஸ்ட்ரியில் மார்க்கெட் இருந்ததில்லை. இருந்தாலும் அவர் எனக்காக பணம் கொடுத்தார். அவர் கொடுத்த பாதையில்தான் நான் அதில் பயணிக்கிறேன். அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.

மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பேசுகையில், “’வளையம்’ படத்தின் தொடக்கத்தின்போது இது ஆக்ஸஸின் 25ஆவது பட விழாவா அல்லது தில்லி பாபு சாரின் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டுமா என்று நிறைய பேசினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு நான் நிற்பது வருத்தமளிக்கிறது. திரைத்துறையில் வேலை பாதுகாப்பு எப்போதுமே ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. ஆனால், அவர் நான் உட்பட யாருடனும் அவர் ஒப்பந்தத்தை மீறாமல் பார்த்துக் கொண்டார். வருங்காலத்தில் இந்தத் தயாரிப்பு நிறுவனத்திற்கு எப்போதும் உதவ தயாராக இருக்கிறேன்” என்றார்.

நடிகை நிக்கி கல்ராணி, “இந்த மாதம் ‘மரகத நாணயம்2’ தொடங்குவதாக இருந்தோம். இதுபோன்ற சமயத்தில் இவரது இழப்பு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தில்லி பாபு சாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் தயாரிப்பு நிறுவனம் சரியாக இயங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை பூர்னேஷூக்கு கொடுத்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”.என்றார்

நடிகர் ஆதி, “டில்லி பாபு சார் ஸ்மார்ட் பிசினஸ் மேன். ஆனால், அந்த ஸ்மார்ட்னஸை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார். குறுகிய காலத்திலேயே அவர் பல நல்ல படங்களைத் தயாரித்தார். ஆனால், எப்போதும் அவர் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்ததில்லை. பல இயக்குநர்களுக்கு அவர் முன் மாதிரி. அவர் தயாரித்த நல்ல படங்கள் அவரது பெயர் சொல்லும்”.என்றார்

நடிகர் தேவ், “டில்லி பாபு அங்கிள் தான் எங்களுக்கு வழிகாட்டி. நான் சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பியபோது அவர் எனக்கு சிறந்த சூழலை அமைத்துக் கொடுத்தார். அவரது மரியாதை மற்றும் அவர் சம்பாதித்திருக்கும் இந்த அன்பை தக்க வைக்க இன்னும் கடுமையாக உழைப்பேன். அவரது நினைவை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.

Tags :
Axess Film FactoryFamilyFilm FraternityFriendslateMemorial GatheringProducer. G Dilli Babuஅமரர்ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரிடில்லி பாபுதயாரிப்பாளர்நினைவேந்தல் கூட்டத்துளிகள்
Advertisement
Next Article