நீங்கள் எம் மன்னரில்லை-ஆஸ்திரேலியாவில் சார்லஸூக்கு எதிர்ப்பு!
பிரிட்டன் மன்னர் சார்லசுடன், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மன்னர் சார்லஸ் தம்பதியை வரவேற்கும் வகையில் பார்லிமென்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆறு மாகாணங்களின் தலைவர்கள் மறுத்துவிட்டனர். இவர்கள், பூர்வகுடிகள் ஆதரவாளர்கள்.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் தனது மனைவி கமீலாவுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் பெரும் நகரங்களான சிட்னி, கான்ஃபாரா உள்ளிட்ட நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு சென்ற மன்னர் சார்லஸ் அங்கு உறுப்பினர்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது செனட் சபை பெண் உறுப்பினரான பழங்குடியினத்தைச் சேர்ந்த லிடியா தோர்ப், மன்னர் சார்லஸ் முன்பு காலனித்துவ ஒழிப்புக்கான முழக்கங்களை எழுப்பினார். “எம் மக்களை இனப்படுகொலை செய்தீர்கள்.இது உங்களுடைய நிலம் இல்லை. நீங்கள் எங்களது மன்னரும் இல்லை எங்கள் நாட்டில் இருந்து திருடியவற்றையும், எங்களது நிலத்தையும் திருப்பி தரவேண்டும்” என அவர் கூச்சலிட்டார்.
மன்னர் சார்லஸ் முன்பு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பெண் உறுப்பினர் முழக்கமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை பாதுகாவலர்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றினர்.
அடிசினல் ரிப்போர்ட்:
ஆஸ்திரேலியா, 100 ஆண்டுகளுக்கு மேலாக, பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இருந்தது. கடந்த 1901ல் ஆஸ்திரேலியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், குடியரசு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனால், பிரிட்டன் அரசக் குடும்பத்தினரே, ஆஸ்திரேலியாவின் தலைமை ஆட்சியாளராகவும் உள்ளனர். கடந்த 1999ல் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பில், பிரிட்டன் அரசக் குடும்பத்தினரே நாட்டின் தலைவராக இருக்க ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தெரிவித்தனர். கடந்த 2023லும் இது போன்ற முயற்சி நடந்தது; ஆனால், தோல்வி அடைந்தது. அரசக் குடும்பத்தினருக்கான ஆதரவை விட, நாட்டின் அதிபரை பார்லிமென்ட் தேர்வு செய்வதா? மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்வதா என்பதில் ஏற்பட்ட குழப்பமே, இந்த ஓட்டெடுப்பு முயற்சிகள் தோல்வி அடைய காரணம்.