தன் பாலின திருமண வழக்கின் தீர்ப்பு - முழு விபரம்!
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தன் பாலின உறவு என்பது நகர்ப்புறத்தைச் சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்தால், நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும். சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் தேவையா இல்லையா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்...திருமணம் என்பது நிலையானது, மாறாதது எனக் கூறுவது தவறான விஷயம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒருவரின் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுப்பது போன்றது” என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் விரும்பும் பட்சத்தில் அவர்கள் காதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் நம் இந்தியச் சட்டத்தில் இடமுண்டு. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் இயல்பானதாகப் பார்க்கப்பட்ட அதே நேரத்தில் இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்களுக்கு இடையேயான காதல் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகவே பார்க்கப்பட்டு வந்தது. தன்பாலினத்தவர்கள் எனப்படும் இவர்களின் உறவு, இயற்கைக்கு மாறான விஷயமாகக் கருதப்பட்டதால் இதற்கு எதிராக 1860-ம் ஆண்டு சட்டப்பிரிவு 377 கொண்டுவரப்பட்டு தன்பாலின உறவில் ஈடுபடுவோர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டு வந்தது.
இந்தியா விடுதலை அடைந்த பின்னரும், இந்தச் சட்டம் இந்தியக் குடியரசின் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படவில்லை. இந்நிலையில் தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதைக் குற்றச் செயல்களின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் பல ஆண்டுகளாகக் கோரிக்கை தொடர்ந்தது. தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று எல்.ஜி.பி.டி (Lesbian, Gay, Bisexual, and Transgender- LGBT) செயற்பாட்டாளர்கள் ஐந்து பேர் சேர்ந்து 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கின் தீர்ப்பு 2018-ல் செப்டம்பர் மாதம் வெளியானது. அதில், ``ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். யாரும் அவர்களுடைய தனிப்பட்ட தன்மைகளிலிருந்து விடுபட முடியாது. தனிப்பட்ட தன்மைகளை ஏற்பதற்கான சூழல் சமூகத்தில் உள்ளது. இந்த வழக்கில் எல்லாக் கோணங்களிலும் ஆராய்ந்துள்ளோம். எல்லாக் குடிமகன்களைப் போலவும், தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமையை மதிப்பதுதான் உச்சபட்ச மனிதநேயம். தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாக்குவது பகுத்தறிவற்றது மற்றும் சகித்துக்கொள்ள முடியாதது. தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாக வரையறுக்கும் 377-வது சட்ட பிரிவு இந்தியாவில் செல்லாது" என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. தன்பாலினச் சேர்க்கையாளர்கள் இதைத் தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதிக் கொண்டாடினார்கள்.
ஆனாலும் ஒரே பாலின திருமணத்தை இந்தியாவில் தற்போது வரையில் உரிய முறையில் சட்டமாக்கப்படவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமணச் சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஒரே பாலின ஜோடி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள ஒரே பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்க முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்திருந்தது. அதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று 4 நீதிபதிகள் தனித்தனியே மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள். குறிப்பாக இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தன் பாலின திருமணம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீர்ப்பில் பின்வரும் கருத்துக்கள் இருந்தன.
200 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்கள் இன்று ஏற்றுக்கொள்ள கூடியதாக மாறி இருக்கிறது. அதேபோல, முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இன்று மறுக்கப்படுகிறது.சதி மற்றும் குழந்தை திருமணங்கள் ஆகியவற்றை உதாரணமாக சொல்ல முடியும். நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது, அதே நேரத்தில் சட்டத்தின் சரத்துக்களை கையாள முடியும்.இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது. ஆனால், டாக்டரின் ஆப் செப்ரேசன் என்ற கோட்பாட்டின்படி நீதித்துறைக்கு சட்ட மறு ஆய்வு அதிகாரம் இருக்கிறது.
அதாவது சட்டத்தை மறுஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது. நீதித்துறை மறு ஆய்வு மற்றும் அதிகார பகிர்வு பிரச்சனையை கையாளக் கூடியது. அதிகாரங்களை பிரிக்கும் கோட்பாடு என்பது அரசின் மூன்று துறைகளுக்கும் தனித்தனியாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு துறையில் மற்றொரு துறை செயல்பாட்டை மேற்கொள்ள முடியாது. தன் பாலின உறவு என்பது நகர்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையதல்ல. நகரங்களில் வசிக்கும் அனைவருமே மேட்டுக்குடியினர் என கூறிவிட முடியாது.
இது சமூகத்தின் உயர் வகுப்பினருக்கான மட்டும் என கட்டுப்படுத்தப்படவில்லை. திருமண சீர்திருத்தங்கள் என்பது சட்டதிருத்தங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது. திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ, சட்டமன்றத்தையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன் பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது.
சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது நிலையானது, மாறாதது என சொல்வது தவறான விஷயம். அரசியல் சாசன பிரிவு 21ன் கீழ் சுதந்திரமாக வாழும் உரிமை, வாழ்கை துணையை தேர்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் எனவே, நீதிமன்றங்கள் சட்டம் இயற்ற முடியாது, நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற முடியும். இதனால், சிறப்பு திருமண சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது, தேசத்தை சுந்தந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு சென்றுவிடும். ஒரு சட்டம் செல்லுமா என்பதை ஆராயும் அதிகாரத்தை நீதிமன்றத்திடம் இருந்து எடுக்க முடியாது. குடும்ப விவகாரங்களில் தலையிடும் அரசின் அதிகாரத்தை நீக்கினால் பலவீனமான நபர்கள் பாதுகாப்பை இழந்து விடுவார்கள். எனவே, இரு நபர்களுக்கு இடையிலான உறவுகளை, அரசின் ஆய்வு அதிகார வரம்பில் இருந்து விலக்க முடியாது எனவும் தன் பாலின திருமணம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகள் குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாலின மற்றும் சிகிச்சை மேற்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. அதுபோன்று, தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு அரசு பாரபட்சம் காட்டக்கூடாது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாசிக்கும்படி கட்டாயப்படுத்த கூடாது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் புகார்கள் தெரிவிக்க தனி தொலைபேசி எண்களை உருவாக்க வேண்டும். தன்பாலின ஜோடிகள் உட்பட திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க உரிமை உண்டு.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ்வதற்கான உரிமைகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க கூடாது. மற்ற குடிமக்களைப் போலவே இந்த தன் பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் மற்றவர்களைப் போல சமமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்பது உள்ளது. அதன் பொருள் அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. இந்த ஜோடிகள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்ப வசதிகளை செய்து தர வேண்டும். இத்தகைய குழந்தைகள் கட்டாய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எந்த ஒரு நபரும் ஹார்மோன் சிகிச்சைகளுக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
சிறப்புத் திருமணச் சட்டம் தொடர்பாக தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்று நீதிபதி ரவீந்திர பட் கூறியுள்ளார். ஒரே பாலினத்தவர்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது திருமண சமத்துவத்திற்கான ஒரு படியாகும் என்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். வழக்கமான திருமண முறை மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்க்க வேண்டும் என்றுள்ளார். இவரும் தன் பாலின திருமணத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையை எடுத்துள்ளார். இதுபோன்று, இந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.