ஒலிம்பிக் பாட்டியின் மகிழ்ச்சி!
ஒலிம்பிக் போட்டியில் தோற்றுப் போன பிறகும் ஒருவர், மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? ஒலிம்பிக் பாட்டி என்று செல்லப் பெயரில் அழைக்கப்படும் 58 வயது ஜெங் ஜியிங் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்.
சீனாவில் பிறந்த ஜெங், டேபிள் டென்னிஸ் வீரர். இளம் வயதில் இருந்தே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். தொடர் பயிற்சிகளால் 12 வயதில் தொழில்முறை வீரர் ஆகும் அளவுக்குத் திறமையைப் பட்டை தீட்டினார். சீன தேசிய அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் கெடுவாய்ப்பாக 1988 ஒலிம்பிக்கில் அவரால் நுழைய முடியவில்லை. டேபிள் டென்னிஸ் மட்டை தொடர்பான விதி ஒன்று மாற்றப்பட்டது அதற்கு முக்கிய காரணம் என்கிறார் ஜெங்.
டென்னிஸ் மட்டையின் இருபக்கமும் இரு வேறு நிறங்கள் இருக்கும். எந்தப் பக்கத்தை ஒரு வீரர் பயன்படுத்துகிறார் என்பதை வைத்து எதிராளி, பந்தின் வேகத்தைக் கணிக்க முடியும். புது விதிக்கு ஏற்ற மாதிரி மற்றவர்களைப் போல அவரும் பழகிக் கொண்டிருக்கலாம். சீனாவில் இந்த விளையாட்டு விளையாடும் வீரர்கள் ஏகப்பட்ட பேர். எனவே, அவர்களுடன் போட்டியிட்டு வென்று ஒலிம்பிக்கில் நுழைவது சாட்ஜிபிடிக்கு சந்திப் பிழை இன்றி தமிழ் எழுதச் சொல்லித் தருவது போலத்தான். முடியும் ஆனால் சவாலானது. தன்னுடைய மனத்தடையால் பின்தங்கிப் போய்விட்டதாகச் சொல்கிறார் ஜெங்.
பின்னர், சிலி நாட்டில் கிடைத்த பயிற்சியாளர் வேலையை ஏற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார். வியாபாரம், குடும்பம் என்று வாழ்க்கை வேறு திசையில் கொண்டு சென்றது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தனியாக வீட்டில் டேபிள் டென்னிஸ் பயிற்சியை மேற்கொண்டவருக்கு மீண்டும் ஒலிம்பிக் கனவு துளித்தது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் போட்டி குறைவு. ஆனாலும் வயது அதிகம் என்பதால் இப்போதும் சவாலான கனவுதான். இந்த முறை விட்டுக் கொடுக்காமல் முயன்றார். சிலி நாட்டின் சார்பில் ஒலிம்பிக்கில் நுழைந்துவிட்டார்.
முதல் சுற்றுப் போட்டிகளிலேயே தோற்று வெளியேறிவிட்டார். என்றாலும், “போட்டியில் தோற்றாலும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி” என்கிறார்.