ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது!
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை சாலைகளில் F4 கார்கள் சீறிப்பாய்ந்தன.
கார் பந்தயங்களில் ஃபார்முலா 1 ரேஸ் என்பது சர்வதேச அளவில் நடைபெறும். இதை ஃபார்முலா 2, 3, 4 எனப் பிரித்து வைத்துள்ளனர். ஃபார்முலா 2 கார் பந்தயங்களில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் தொடங்கியது. தெற்கு ஆசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இதுவாகும்.
இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் காரின் வேகம் மணிக்கு 240 கி.மீ வரையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக, 1600 சிசி திறன் கொண்ட இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பயிற்சியில் சுமார் 10 கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்ற இந்த கார்களை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். முன்னதாக சாகசகார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இரு கார்கள் இரு பக்கவாட்டு சக்கரங்கள் மட்டுமே தரையில் இருந்தபடி அதிவேகத்தில் சென்றதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதான பந்தயம் நடைபெறுகிறது. இதில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயம், ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டி ஆகியவை நடைபெறுகிறது. பிற்பகலில் தொடங்கும் பிரதான பந்தயங்கள் இரவு 10.30 மணிக்கு நிறைவடைகிறது.