முதல் உயிரினம் நமக்குள்தான் இருக்கிறது!
454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானபோது ஆக்ஸிஜன் சுத்தமாக இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்று பூமியில் 21% ஆக்ஸிஜன் உள்ளது. பூமி உருவானபோது, எரிமலை வெடிப்பில் வருவதற்கு ஒப்பான மீதேன், கார்பன்டைஆக்சைடு, ஹைட்ரஜன், அமோனியா, நீராவி ஆகியவை தான் வளிமண்டலத்தில் இருந்தன,. ஆக்ஸிஜன் சுத்தமாக இல்லை.அப்போது கார்பன் டை ஆக்சைட் அளவுகள் 10% இருக்கலாம். இப்போது 0.04% அளவுதான் கார்பன்டை ஆக்சைடு ஏதோ சாதாரண சதவிகித கணக்கு என அலட்சியமாக நினைக்க வேண்டாம். நம் பூமியின் காற்று மண்டலத்தில் வெறும் 1% அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு இருந்தால், மூச்சுகாற்று விஷமாகும். மனிதர்கள் ஆங்காங்கே செத்து விழுவார்கள். நுரையீரல் கொண்ட அனைத்து மிருகங்களும் சுத்தமாக பூமியில் இருந்து துடைத்தெறியப்படும். ஆனால் தாவரங்களின் வளர்ச்சி அதன்பின் அமோகமாகும் என்கிறார்கள். அவற்றுக்கு கார்பன் டை ஆக்சைடு தான் மூச்சுகாற்று. அவற்றை உள்வாங்கி ஜாலியாக
சும்மா பெரிய சைஸ் மரங்கள், செடிகள் வளரும். பரிணாம வளர்ச்சியில் மரங்கள் மனிதர்கள் மாதிரி புத்திசாலி உயிரினமாகவும் ஆகலாம். ஆக 1% கார்பன் டை ஆக்சைடுக்கே இந்த விளைவு என்றால் பூமி தோன்றியபோது 10% மேல் கார்பன் டை ஆக்சைடு இருந்தபோது என்ன ஆகியிருக்கும்? காற்றே அப்போது விஷம்தான். ஆக்ஸிஜனே இல்லை. எரிமலைகள் வெடிக்கும். ஆனால் பற்றி எரிய ஆக்ஸிஜன் இல்லை.இதன் பின்னர் பூமிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. சுமார் 410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய சமுத்திரங்களில், ஏரிகளில், கடலில் இருக்கும் நீர் எல்லாம் வந்து சேர்ந்தது. எப்படி என்பது தனிக்கதை.
இத்தனை கார்பன் டை ஆக்ஸைடு இருப்பது நீருக்கு கொண்டாட்டம். ஏனெனில் கடல்நீர் ஏராளமான கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுக்கும். சொல்லபோனால் இப்போது காற்றுமண்டலத்தில் இருப்பதை விட ஐம்பது மடங்கு கார்பன் டை ஆக்சைடு கடலில் இருக்கிறது என்றால் பார்த்துக்கலாம்.ஆக உலகின் முதல் உயிரினம் இப்படி கடல் நீரில் ஏராளமாக இருந்த கார்பன் டை ஆக்ஸைடை, மீதேன் ஆக மாற்றும் மெதனோஜென் ஆக இருக்கலாம் என்கிறார்கள். 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் உயிர் கடலில் தோன்றியது என்கிறார்கள். கடலில் உள்ள தெர்மல் வென்டுகள் (thermal vents) எனும் எரிமலை ஊற்றுக்களில் உயிர் உருவாகியிருக்கலாம். அது கீமோசிந்தசிஸ் (chemosynthesis) எனும் முறையில் கார்பன் டை ஆக்சைடை, மீதேன் ஆக மாற்றி மூச்சுவிட்டு உயிர்வாழ்ந்தது.
மூச்சுக்கு கார்பன் டை ஆக்சைடு? சாப்பிட? அதன் ஆற்றல் தேவைகளை ஹைட்ரஜன் பூர்த்தி செய்து இருக்கலாம். கடலுக்கடியில் உள்ள எரிமலை வென்டுகளில் கடல்நீர் சேர்கையில் தோன்றிய ஹைட்ரஜனை அவை உணவாக உட்கொண்டன. அதன் கழிவு மீதேன் ஆக மாறியது.ஆக இந்த மெதனாஜின் (Anaerobic methanogen) தான் நம் ஆதிமுன்னோர். ஆதிமூதாதை. இவரை காண எல்லாம் மிக சிரமப்பட வேண்டாம். நாம் உண்ணும் உணவை நம் பெரும்குடல் கட் பாக்டிரியாக்கள் ஜீரணிக்கையில் Co2 மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் உருவாகின்றன. நம் கட் (Gut) எனும் பெரும்குடலில் இந்த மெதனோஜின் முப்பாட்டன் இன்னும் குடியிருந்து வருகிறார். இவர் இந்த கார்பன் டைஆக்சைடை மூச்சுவிட்டு, ஹைட்ரஜனை சாப்பிட்டு மீதேன் ஆக மாற்றுகிறார்.
நாம வயிறு நிரம்ப சாப்பிட்டு "ஏவ்" என ஏப்பம் விடுகிறோமே? அது முழுக்க மீதேன் தான். நம் மெதனோஜின் முப்பாட்டனின் திருவிளையாடல் தான் இது 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் நடந்தது இப்போது நம் வயிற்றில் நடக்கிறது. முதல் உயிரினம் எங்கேயும் போகவில்லை. நமக்குள் தான் இருக்கிறது. நாம் தான் அது. அதுதான் நாம் #பூமியும்_வானமும்