தமிழ்நாட்டின் முதல் பத்திரிகையான மதராசு கூரியர் என்ற வார இதழ் மலர்ந்த நாளின்று!
இப்ப சென்னையாகிப் போன அந்த கால மெட்ராஸில் முதன்முதலாக செய்தித் தாளைத் தொடங்கியவர் ஆங்கில அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர்தான். ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற பெயரில் 1785 இதே அக்டோபர் 12 ம் தேதி யில் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை, நான்கு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அரசின் ஆதரவோடு நடந்த அந்தப் பத்திரிகைக்கு அரசு விளம்பரங்கள் குவிந்ததால் விரைவில் பக்கங்கள் ஆறாக அதிகரித்தன.
மெட்ராஸ் கூரியருக்கு ஆசிரியராக இருந்த ஹக் பாயிட், பின்னர் சொந்தமாக ‘ஹிர்காரா’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை 1791இல் தொடங்கினார். ‘ஹிர்காரா’ என்றால் தூதுவன் அல்லது ஒற்றன் என்று அர்த்தமாம். ஆனால் ஒற்றன் அதிக நாள் ஓடவில்லை. 1794இல் ஹக் காலமாகிவிட, அவர் தொடங்கிய பத்திரிகையும் சேர்த்து புதைக்கப்பட்டு விட்டது.
அடுத்ததாக 1795இல் ராபர்ட் வில்லியம் என்பவர் ஒரு அச்சகத்தை நிறுவி, கம்பெனியின் அச்சு வேலைகளைப் பெறுவதில் ஜான்ஸனோடு போட்டியிட்டார். அத்தோடு நிற்காமல், மெட்ராஸ் கூரியருக்குப் போட்டியாக ‘மெட்ராஸ் கெஸட்’ என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். அரசு தனது வேலைகளை இருவருக்கும் பகிர்ந்தளித்து வந்தது. இதற்கிடையில் ஜான் கோல்டிங்ஹாம் என்பவரும் கம்பெனி அரசுக்காக அதிகாரபூர்வமாக மெட்ராஸ் அரசாங்க கெஸட்டைத் தொடங்கிவிட்டார்.
இதெல்லாம் போதாது என்று மெட்ராஸ் அரசாங்கமே 1800இல் ஒரு அச்சகத்தை நிறுவியது. அதில் இருந்து ‘மெட்ராஸ் அஸைலம் ஆல்மனாக்’ என்ற பெயரில் ஓர் இதழ் வெளிவரத் தொடங்கியது.
இந்தச் சமயத்தில் அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே ‘இந்தியன் ஹெரால்டு’ என்கிற பத்திரிகையை ஜி. ஹம்ப்ரீஸ் என்ற ஆங்கிலேயர் ஆரம்பித்தார். ஆனால் இதுசற்றே வித்தியாசமான பத்திரிகை. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அரசின் விளம்பரங்களை வாங்கிக் கொண்டு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த காலத்தில், இதுமட்டும் கம்பனி அரசை கடுமையாக விமர்சித்தது. அதற்காக ஹம்ப்ரீஸ் கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டார்!
ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஆங்கிலேயர்களே பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருந்த நிலையில், காஜுலு லக்ஷ்ம நரசு என்ற தெலுங்கு வணிகர் இந்த போட்டியில் களமிறங்கினார். ஹிந்துக்களின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் ‘க்ரெசன்ட்’ என்ற பெயரில் 1844இல் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். 1868இல் லக்ஷ்ம நரசு இறந்துவிட, அவரது பத்திரிகையும் நின்று போனது.
இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் டைம்ஸ், தி மெட்ராஸ் மெயில், ஸ்பெக்டேடர், தி ஹிந்து, சுதேசமித்திரன் என பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டு அச்சுத்தொழில் மெட்ராசில் அரியணை போட்டு அமர்ந்துகொண்டது.
மொத்தத்தில் எதேச்சையாக இதே நாளில் மெட்ராசிற்குள் நுழைந்த அச்சுத் தொழில் இன்று விஸ்வரூபம் எடுத்து விண்ணில் விரிந்து நிற்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் கோட்டை விட்டாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டதால் மெட்ராஸ் இந்திய அச்சு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துவிட்டது.
🚨எக்ஸ்ட்ரா தகவல்
அச்சில் ஏறிய முதல் தமிழ் அகராதியை தயாரித்தவர் ராபர்ட் டி நோபிளி என்ற இத்தாலிக்காரர். இவரை தத்துவ போத சுவாமி என தமிழர்கள் அன்புடன் அழைத்தனர்.
நமசிவாய முதலியார் என்பவர் அச்சு எழுத்துகள் தயாரிக்கும் முறையை சீரமைத்தார். அவர் உருவாக்கிய புதிய எழுத்துருக்கள் 'நமசிவாய எழுத்து வரிசை' என்றே அழைக்கப்பட்டன.
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பர்மாவிலிருந்தும், தாய்லாந்தில் இருந்தும் தமிழகம் திரும்பிய பிறகு, அவர்களில் சிலர் அச்சகங்களையும், பதிப்பகங்களையும் தொடங்கினர்.
தமிழில் தோன்றிய முதல் தமிழ்ப் பத்திரிகையின் பெயர் "தமிழ் இதழ்' என்பதாகும்! கிறிஸ்துவ மத சங்கத்தார் இப்பத்திரிகையை சென்னையில் 1831ஆம் ஆண்டு தோற்றுவித்தார்கள்!
தமிழில் தோன்றிய முதல் வாரப்பத்திரிகையின் பெயர் "தினவர்த்தினி' என்பதாகும்! இது 1856ஆம் ஆண்டு அரசு கல்வி இலாகாவால் தொடங்கப்பட்டது!
தமிழில் தோன்றிய முதல் தமிழ் மாத இதழின் பெயர் "ஜனவினோதினி' என்பதாகும்! இதுவும் அரசு கல்வி இலாகாவால் 1870ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது!
சென்னையில் முதன் முதலில் இந்தியர் ஒருவரால் ஆரம்பக்கப்பட்ட பத்திரிகை "தி இந்து' ஆகும்! இச்செய்தித்தாள் 1878ஆம் ஆண்டு முதல் வெளிவருகிறது!
1857ஆம் ஆண்டு வரை இந்தியப் பத்திரிகைகளில் இலக்கியம், மதம், சமூக நலம், சீர்திருத்தம் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் இடம் பெற்றன. அரசியல் செய்தி ஒன்று கூட இடம் பெறவில்லை. 1857ஆம் ஆண்டுக்குப் பிறகே அரசியல் செய்திகள் அதிகம் வரத்தொடங்கின!
நிலவளம் ரெங்கராஜன்