அச்சு இதழ்களின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது!
89 ஆண்டுகள் வந்துகொண்டிருந்த ரீடர்ஸ் டைஜெஸ்ட் அச்சிதழை இங்கிலாந்தில் நிறுத்திவிட்டார்கள். எனக்கு மிகப்பிடித்த இதழ்களில் ஒன்று. சிறுவயதில் ஒரு முறை கூட அதன் புதிய இதழை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததே இல்லை. எப்போதும் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இதழ்கள்தான் கிடைக்கும். பழைய இதழாகவேதான் இதை அச்சிடுவார்களோ என்றுகூட நினைத்திருக்கிறேன். உக்கடம் பழைய புத்தகசந்தையில் அதிகம் பார்த்த இதழ் இதுதான். முழுக்க முழுக்க வாசகர் துணுக்குகளால் நிறைந்திருக்கும். உடல்நலம், ஃபேஷன், மனநலம், மோடிவேஷன் என எல்லாம் கலந்துகட்டி நிறைவான லைஃப் ஸ்டைல் இதழாக இருக்கும். என்னுடைய நாம் ஏன் உடற்பயிற்சியை கைவிடுகிறோம் என்கிற நூல் கூட ரீடர் டைஜஸ்ட் கட்டுரைகளின் பாணியில் எழுதப்பட்ட நூல்தான். அந்த இதழ் நின்றுவிட்டது என்பது வருத்தம்தான். இந்தியாவிலும் நிறுத்தக்கூடும். சில மாதங்களுக்கு முன்புதான் நேஷனல் ஜியாகிரபிக் இதழ் நிறுத்தப்பட்டது. அப்போதும் வருத்தமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு அச்சிதழாக நிறுத்தப்படும் செய்திகள் வேதனை தரத்தான் செய்கின்றன.
என்றாலும் ஓர் அச்சு இதழை தேடிப்போய் காசு கொடுத்து வாங்கி வாசிப்பதற்கானத் தேவை இன்று யாருக்காவது இருக்கிறதா? இல்லை என்பதே நேர்மையான பதிலாக இருக்கும். ரீடர்ஸ் டைஜெஸ்ட்டை விட நேஷனல் ஜியாகிரபியை விட அதிகமான தகவல்களை இணையதளங்களும் யூடியூபும் சமூக வலைதளங்களும் தருகின்றன. இன்று சினிமா செய்திகளோ அழகு குறிப்போ, சமையல் குறிப்போ, தன்னம்பிக்கையோ, மனநலம் உடல்நல சிக்கலோ அறிவியலோ ஆராய்ச்சியோ அனைத்தையும் பற்றி யூடியூபில் ஃபேஸ்புக்கில் கோடிக்கணக்கான வீடியோக்கள் பாட்காஸ்ட்கள் கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. எதற்கும் காசு கொடுக்க வேண்டாம். விளம்பரங்களோடு பார்க்க கடினமாக இருந்தால் மாதம் 100 ரூபாய் கட்டினால் அந்த விளம்பரங்களும் வராது. சினிமா பேட்டிகள், அரசியல் கருத்துகள், க்ரைம் செய்திகள், கிசுகிசுக்கள், கதைகள், கவிதைகள் எல்லாமே கிடைக்கிறது.
கடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் சமையல் நூல்கள் மற்றும் அழகு குறிப்பு நூல்கள் விற்பனை ஆகாமல் கிடைந்ததையும், அதையெல்லாம் வந்தவிலைக்கு தள்ளிவிட்டுக்கொண்டிருந்த பதிப்பாளர் ஒருவரையும் பார்த்தேன். எது எடுத்தாலும் பத்து என்றார். அப்போதும்கூட அதை சீண்ட ஆள் இல்லை. இதுதான் ஹெல்த் அன் லைஃப் ஸ்டைல் சந்தை நிலவரம். பத்தாண்டுகளுக்கு முன்பு கூட பேருந்தோ ரயிலோ ஏறினால் பத்து பேரில் ஐந்து பேர் கைகளில் நாளிதழோ வாரமாத இதழோ இருக்கும். குறைந்த பட்சம் எதாவது புத்தகம் இருக்கும். ஆனால் இன்று எல்லோரும் மொபைல் பார்க்கிறார்கள். காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அமர்ந்து இருக்கிறார்கள், பயணங்களில் படம் பார்க்கிறார்கள், வீடியோ பார்க்கிறார்கள், கேம்ஸ் ஆடுகிறார்கள், பாட்டு கேட்கிறார்கள். இது எதற்கும் உழைப்பு தேவையில்லை. வாசிப்பதற்கு உழைப்பு வேண்டும். பத்திரிகைகள் வாங்க காசு செலவழிக்க வேண்டும். இது அனைத்தும் இலவசம். அப்படி இருக்க சாதாரண பொதுமக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்?
சரி, அப்படி காசு செலவழித்து வாங்குகிற பத்திரிகைகளில் இணையத்தில் கிடைக்காதது எதாவது கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இன்றைய தேதியில் எதற்காக வாசகன் ஓர் அச்சு இதழை வாங்கிப்படிக்க வேண்டும். அச்சு இதழ்களைக் காக்க வேண்டும் என்கிற லட்சியமெல்லாம் வாசகர்கள் யாருக்கும் அவசியமற்றது. தங்களுக்கு தேவையானது மலிவாக எங்கு கிடைக்கிறதோ அங்கு போகிறார்கள். இன்று களத்திற்கு போய் சில மாதங்கள் தங்கி இருந்து ஒரு பிரச்சனையின் நீள அகலங்களை ஆராய்ந்து குறுக்குவெட்டாக எழுதக்கூடிய கட்டுரைகள் எத்தனை தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன. கடைசியாக அப்படி வாசித்த கட்டுரை எதாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
டெஸ்க்கில் அமர்ந்து எழுதி குவிப்பதையே ஊடக நிறுவனங்களும் விரும்புகின்றன. ஒரு செய்திக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க நிறுவனங்கள் தயாராக இருப்பதில்லை. ஒரு பிரச்சனை வருகிறதா நான்குபேரை பேட்டி எடுத்து அதோடு சொந்த கருத்து இரண்டை சேர்த்து ஒரு கட்டுரையை உருட்டி தள்ளுகிறார்கள். சரி செய்தி இதழ்களை சிறப்பாக நியாய தர்மம் பார்த்து, உண்மையாக உழைத்து செய்திகளை சேகரித்து வெளியிட்டால் பத்திரிகைகளை லாபகரமாக நடத்த முடியுமா என்றால் அதுவும் முடியாது. பத்திரிகைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த விளம்பர வருவாய் என்பது அப்படியே டிஜிட்டலுக்கு மாறத்தொடங்கி ஆண்டுகள் கடந்துவிட்டன. டிஜிட்டலில் தனக்கான ஆடியன்ஸை வயது, அவர்களுடைய தேடல், தேவை அறிந்து டார்க்கெட் பண்ணி கொண்டு போய் சேர்க்க முடிகிறது. அதுவும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கொண்டுபோகலாம். என்றால் விளம்பரதாரர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பார்கள்?
இன்று வாசிக்க ஆள் இல்லாமல் இல்லை. ரீடஸ் டைஜெஸ்ட்டும் நேஷனல் ஜியாகிரபிக்கும் கூட மூடுவதற்கு முன்புவரை லட்சக்கணக்கான சந்தாதாரர்களை கொண்டே இருந்திருக்கிறது. இன்றும் நூலகங்களுக்கு சென்று இதழ்கள் படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை. செலவழிக்க பணமில்லை. இதழ்களின் விலையை கூட்டினால் விற்பனை சரிகிறது. இதழ்களின் விலைகளை குறைத்தால் கட்டுப்படியாவதில்லை. அதனால் வந்தவரை விளம்பரங்களை போட்டு ரொப்புகிறார்கள். இன்றைய நாளிதழ்களை எடுத்துப்பார்த்தால் முதல் பக்கம் முழுக்க ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரங்கள்தான் நிறைந்திருக்கின்றன. அதுவும் ஆரம்ப நான்கு ஐந்து பக்கங்க்களுக்கு அதுதான். அப்படி செய்தும்கூட பத்திரிகைகள் நட்டத்தில்தான் நடக்கின்றன. நாளிதழ்கள் ஓரளவு தப்பிப் பிழைக்கின்றன. ஆனால் மாத வார இதழ்கள் நிலை போராட்டம்தான். பத்திரிகை மொத்தமும் விளம்பரங்களாக ரொப்பினால் கூட பத்திரிகைகளால் லாபகரமாக நடத்தமுடியாது.
ஒரு பத்திரிகையை நடத்துவதற்கு தேவையான ஆபரேஷனல் காஸ்ட் அதிகமாகிவிட்டது. பேப்பர் விலை ஒருபுறம், நிருபர்களுக்கான சம்பளம், அச்சிடுவதற்கும் அதை கடைகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கான பிற செலவுகள், அலுவலக வாடகை, கரண்ட்பில், வரிகள் என செலவுகள் விண்ணைத்தாண்டி போய்விட்டன. அதை ல்லாம் சமாளித்து அச்சு இதழை நடத்துவதை விட அந்தக்காசில் இரண்டு யூடியூப் சேனல் நடத்தி அதில் யாராவது கிசுகிசு பயில்வான்களை சுச்சிக்களை சவுக்குகளை வாய்க்கு வந்ததை பேசவிட்டு பேட்டியென்று எடுத்துப்போட்டால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் வரும். என்றால்… முதலாளிகள் எதை தேர்ந்தெடுப்பார்கள். ஆகவேதான் ஊடகங்கள் எல்லாம் யூடியூப் சேனல்களாக பரிணமித்துவிட்டனர். யூடியூபின் விழுமியங்களற்ற ஆட்டத்தை ஆடுகின்றன. டிஜிட்டலில் பத்திரிகைகளை விற்கமுடியாதா? விற்க முடியும். ஆனால் லாபகரமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.இன்று அச்சிதழ் ஒன்றை சுய ஆர்வத்துக்காக பெருமைக்காக மட்டும்தான் நடத்த முடியும். அது ஒரு லாபம் தருகிற தொழிலாக இருக்காது. லாபம் தராத எதுவும் சந்தையில் நீடிக்காது. 1780 தொடங்கி உலகை தன் பிடியில் வைத்திருந்த அச்சு இதழ்களின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது. இது அச்சிதழ்களின் இறுதிக்காலம்.