For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சரத்சந்திர பவார் என்ற பெயரை சரத் பவார் தரப்பினர் வைத்துக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல்!.

08:51 AM Feb 08, 2024 IST | admin
சரத்சந்திர பவார் என்ற பெயரை சரத் பவார் தரப்பினர் வைத்துக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல்
Advertisement

காராஷ்ட்ராவில் சரத் பவாரின் கட்சிக்கு என்.சி.பி (சரத் சந்திர பவார்) என்று பெயரிடப்பட்டிருப்பதாகத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆறு இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் சரத்பவார் தலைமையிலான கட்சியைத் தனிப்பிரிவாக ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. உதயசூரியன் சின்னமும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக நீண்ட காலம் இருந்த சரத் பவார், சோனியா காந்தியின் தலைமையை ஏற்காமல் அக்கட்சியில் இருந்து விலகினார். அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத்பவார் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளையும் பதிவு செய்தார். இதனால் நாட்டிலுள்ள முக்கிய தலைவர்களில் ஒருவராக சரத் பவார் மாறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாருக்கு அடுத்த இடத்தில் அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் மற்றும் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் இருந்தனர். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியுடன் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்தது.

Advertisement

அதே சமயம் மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி பாஜக ஆதரவுடன் ஆட்சியிலுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதல்வரானார். 53 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 41 எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கும், 12 பேர் சரத் பவாருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இரு தரப்புமே தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியுள்ளது. அஜித்பவாருக்கே அதிக அளவிலான நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், சரத்பவார் தலைமையிலான அணி வேறு பெயர் வைத்து கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து சரத்பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என்ற பெயரை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மேலும், இந்த கட்சியின் சின்னமாக '' டீகப்,'' ”சூரியகாந்தி பூ” ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

Tags :
Advertisement