தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஹஜ் பயணிகளின் பலி 1000 ஐ கடந்தது!

06:53 PM Jun 21, 2024 IST | admin
Advertisement

புனிதப் பயணமாக மெக்காவுக்கு சென்றவர்கள், வெப்ப அலை காரணமாக சாலையோரத்தில் சரிந்து விழுந்து மரணமடைந்த புகைப்படங்கள், அரபு மொழி சமூக ஊடகங்கள் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இஸ்லாமியர்களின் புனித நகரமான சவுதி அரேபியாவின் மெக்காவில் கடந்த வார இறுதியில் தொடங்கிய வருடாந்திர ஹஜ் நிகழ்வின் போது அங்கு வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸ் (125 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது. உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் பயணம் செய்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டனர். உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றான ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக உள்ளது. முஸ்லீம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மேற்கொள்ளும் புனித பயணமாக ஹஜ் கருதப்படுகிறது.

Advertisement

இது குறித்து சவுதி அரேபிய சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வெப்பச் சோர்வு அடிப்படையில், 2,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இறப்பு பற்றிய தகவல்கள் வெளிவருவதற்கு முன்பே இது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகிவிட்ட நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகவில்லை.

ஏ.எப்.பி (AFP) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை,1000-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எகிப்து, இந்தோனேசியா, செனகல், ஜோர்டான், ஈரான், ஈராக், இந்தியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பலரும் இறந்துவிட்டதாக அந்நாடுகளின் அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தியர்கள் 68 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக எகிப்து நாட்டில் இருந்து வந்த 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், இந்தோனேசியாவில் இருந்து வந்த 140-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், கடந்த ஆண்டுகளில், சவூதி அதிகாரிகள் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வெப்பநிலையின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்துள்ளனர்.

ஆனாலும், சமீபத்திய இறப்புகளில் பெரும்பாலானவை அதிக வெப்பநிலை காரணமாக நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த யாத்திரையின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையல், ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இன்னும் சவூதி மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.

Tags :
HajHeat waveவெப்ப அலைஹஜ்
Advertisement
Next Article