பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்!
டிசம்பர் 6, 1992 ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். ஆண்டுதோறும் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட டிசம்பர் 6-ம் தேதியைஇஸ்லாமிய அமைப்புகள் துக்க தினமாகவும், கருப்பு நாளாகவும் அனுசரித்து வருகின்றனர். நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, இந்துத்துவா அமைப்பை சேர்ந்த கரசேவகர்கள் இடித்து தள்ளினர். அந்த இடம் ராமர் கோவில் இருந்த ராமஜென்ம பூமி என்று அவர்கள் கூறினார்கள். அயோத்தி நகரம் கடவுள் ராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் இதிகாசங்களில் கூறப்படுகிறது.
1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னாள் அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டு, மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதற்கான வரலாற்று ஆய்வுகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராமஜென்ம பூமி விவகாரம் இரு மதத்தினராலும் பிரச்சினையாக்கப்பட்டு வந்தது. அந்நிலையில், கடந்த 1989 தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி அயோத்தி பிரச்சனையை தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது. அதன் காரணமாக அப்போதைய பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, ராமர் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக்க ரத யாத்திரை மேற்கொண்டார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, 1992 டிசம்பர் முதல் வாரத்தில் நாடு முழுவதும் இரு கரசேவகர்கள் அயோத்தியில் வந்து குவிந்தனர். அவர்களால் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு உலக இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மசூதியின் இடிப்பு நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், பல மாதங்களாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்து வந்தது. இக்கலவரம் மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி போன்ற இன்னும் பல நகரங்களுக்கும் பரவி கிட்டத்தட்ட 2000 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது டிசம்பர் 1992லும், ஜனவரி 1993லும் ஏற்பட்ட கலவரங்களின்போதும் சுமார் 900 பேர் வரை உயிரிழந்தனர். பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக மும்பையில், 1993ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நடை பெற்றது. இந்தியன் முஜாகுதீன் போன்ற இயக்கங்கள் தங்கள் தீவிரவாதத் தாக்கு தல்களுக்கான காரணமாக பாபர் மசூதி இடிப்பைக் குறிப்பிட்டன
அதே சமயம் அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, உத்தர பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையை கலைத்தார்.அப்படி அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்,பல நூறாண்டுகளாக நீடித்த சர்ச்சைகளுக்கு பிறகு, சட்டத்தின் அனுமதியுடன் 2020ஆம் ஆண்டில் ராமர் ஆலயம் மீண்டும் கட்டப்படுகிறது.
இச்சூழலில் இந்த விவகாரம் கடந்து வந்த பாதையின் காலக் குறிப்பு :
1528: முகலாய மன்னர் பாபரின் கமாண்டராக இருந்த மிர் பஹி என்பவர் பாபர் மசூதியை கட்டினார்.
1885: சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு வெளியில் கூடாரம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
1949: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மத்திய கோபுரத்துக்கு வெளியில் ராம் லல்லா சிலை வைக்கப்பட்டது.
1950: ராம் லல்லா சிலையை வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனு தாக்கல் செய்தார். ராம் லல்லா சிலையை அங்கே தொடர்ந்து வைத்திருக்கவும் வழிபாடு நடத்தவும் அனுமதி கோரி ராமச்சந்திர தாஸ் வழக்கு தொடர்ந்தார்.
1959: சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ஒப்படைக்க கோரி, நிர்மோகி அகாரா வழக்கு தொடர்ந்தது.
1961: அந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்க கோரி, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியம் வழக்கு தொடர்ந்தது.
1986: சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் இந்துக்கள் வழிபட திறந்துவிடும்படி, உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக.1989: சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிச.6,1992: பாபர் மசூதி கோபுரம் இடிக்கப்பட்டது.
டிச.1992: இதுதொடர்பாக அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட மற்றவர்கள் மீது தனியாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
அக்.1993: அத்வானி உட்பட தலைவர்கள் பலருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மே.2001: அத்வானி, ஜோஷி, உமா பாரதி, பால் தாக்கரே உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணையை, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கைவிட்டது.
நவ.2004: விசாரணை கைவிடப்பட்டதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இதில் லக்னோ அமர்வு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது.
மே.2010: சிபிஐ மறுபரிசீலனை மனு விசாரணைக்கு தகுந்ததாக இல்லை என்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செப்.2010: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 பேரும் சரி சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மே.2011: அயோத்தி நிலம் சர்ச்சை வழக்கில், தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
பிப்.2011: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
மார்ச்2017: பாஜக தலைவர்களுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், அயோத்தி நில சர்ச்சையைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.
ஏப்ரல்: குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நவ.2019: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், அதற்கு பதில் மசூதி கட்டிக் கொள்வதற்கு முஸ்லிம்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆக.2020: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
செப்.30: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.