For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கால் பந்தின் அரசன் பீலே மறைந்த நாளின்று!

07:34 AM Dec 28, 2023 IST | admin
கால் பந்தின் அரசன் பீலே மறைந்த நாளின்று
Advertisement

ஃபுட்பால் வேர்ல்ட் கப்-களை மூன்று முறை வென்று சாதனை படைத்த பிரேசில் கால்பந்து அரசனும், கடந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்த ஜாம்பவான் பீலே கடந்தாண்டு இதே நாளில் காலமானார். அப்போது அவருக்கு வயது 82.

Advertisement

கால்பந்து விளையாட்டை கலையாக மாற்றி வெகுஜன ரசிகர்களை மயங்க வைத்த பீலே, கருப்பு முத்து' என்ற செல்லப்பெயரும் எடிசன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயரும் கொண்டவர் , 1940-ம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிரேசிலில் உள்ள ட்ரஸ் கராகஸ் என்ற சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தை டோன்டின்ஹோ ஒரு தொழில் முறை கால்பந்தாட்டக்காரர். இதனால் பீலேவின் ரத்தத்திலேயே கால்பந்தும் கலந்திருந்தது. ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையுடன் கால்பந்தாட்டத்தை வெகுவாக ரசித்திருக்கிறார். தொலைக்காட்சிகள் இல்லாத அந்த காலகட்டத்திலேயே ரேடியோ கமென்ட்ரி மிகவும் பிரபலம். 1950ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்றதை ரேடியோவில் கேட்டு தனது தந்தை அழுவதை தாங்கிக்கொள்ள முடியாத பீலே, கவலைப்படாதீங்கப்பா நான் பிரேசிலுக்காக விளையாடி கோப்பையை வசப்படுத்துவேன் என சூளுரைத்தார் அந்த 9 வயது சுட்டிச்சிறுவன் பீலே. தந்தையிடம் அளித்த சபதத்தை நிறைவேற்ற குடும்ப வறுமையை மீறி, ஷூ பாலிஷ் போட்டும், டீக்கடையில் வேலை செய்தும் சிரமப்பட்டு, சரியாக 8 ஆண்டுகளில் 1958ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றார்.பின்னாளில் கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பலராலும் கருதப்பட்ட பீலே, பிரேசிலின் சாண்டோஸ் கிளப் மற்றும் பிரேசில் தேசிய அணிக்காக சுமார் இரு தசாப்தங்கள் விளையாடி ரசிகர்களை திகைப்படைய செய்ததோடு மட்டும் அல்லாமல் எதிரணி வீரர்களையும் தனது கால்களின் ஜாலத்தால் மயக்கினார்.

Advertisement

அவரது நேர்த்தியான விளையாட்டுத்திறன் மற்றும் மயக்கும் நகர்வுகள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டது. களத்தில் தனது வேகமான செயல்பாடுகளால் கால்பந்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார். அதுவே பிரேசிலை உலக அரங்கில் பெருமை கொள்ள செய்தது. தனது அசாத்தியமான திறமையால் பிரேசிலை கால்பந்தின் உயரத்திற்கு கொண்டு சென்றார் பீலே. சாவோ பாவ்லோ தெருக்களில் காகித கந்தல்களை சாக்ஸில் அடைத்து உதைத்துதனது கால்பந்து பயணத்தை தொடங்கிய அவர், பின்னாளில் கால்பந்து விளையாட்டுக்கான உலகளாவிய தூதரானார்.

கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்கள் தொடர்பான உரையாடல்கள் எழும்போதெல்லாம் பீலேவுடன் மறைந்த டீகோ மரடோனா, நிகழ்கால நாயகர்கள் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் மட்டுமே குறிப்பிடப்பட்டு வருகின்றனர். கால்பந்து உலகில்பீலே நிகழ்த்தாத சாதனைகளே இல்லை.பீலே என்ற பெயர் உருவானதே சுவாரஸ்யமானதுதான். 1940-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி பிரேசிலில் உள்ள மினாஸ்ஜெரைஸ் மாகாணத்தின் உட்பகுதியில் உள்ள சிறிய நகரமான ட்ரெஸ் கோரகோஸில் பிறந்தார் பீலே. அவரது பெயர் எட்சன் அரான்டெஸ் நாசிமெண்டோ. வறுமை காரணமாக தெருக்களில் ஷூக்களுக்கு பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டவாறுதான் தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்கினார் நாசிமெண்டோ.

ஒரு முறை பிலே என்ற கால்பந்து வீரரின் பெயரை நாசிமெண்டோ தவறாக உச்சரித்துள்ளார். அதில் இருந்துதான் நாசிமெண்டோவுக்கு பீலே என்ற பெயர் வந்தது. அவரது திறமை 11 வயதில்தான் வெளியே தெரிய ஆரம்பித்தது. உள்ளூர் தொழில்முறை வீரர் ஒருவர், பீலேவை சாண்டோஸ் கிளப்பின் இளையோர் அணிக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து சீனியர் அணிக்கு இடம் பெற பீலேவுக்கு அதிக காலம் ஆகவில்லை. 1956-ம் ஆண்டு தனது 16 வயதில் பிரேசில் கிளப்புக்காக அறிமுகமானார். அதன் பின்னர் அந்த கிளப் விரைவில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றது.

பிரேசில் அணிக்காக 1958, 1962, 1970-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுகொடுத்தார் பீலே. தேசிய அணி, கிளப், சீனியர் போட்டிகள் என ஒட்டுமொத்தமாக 1,283 கோல்களை அடித்து அசத்தினார். ‘கால்பந்து அரசன்’ என அழைக்கப்பட்ட அவர், தனது 17 வயதில் 1958-ம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுகம் ஆனார்.இதன் மூலம் இளம் வயதில் உலகக் கோப்பையில் களம் கண்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.இந்த தொடரில் பீலே முதலில் மாற்று வீரராகவே இடம் பெற்றார். ஆனால் பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய வீரராக திகழ்ந்தார். இந்த தொடரில் பீலே அடித்த முதல் கோல், உலகக் கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த கோலாக தேர்வானது. அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பீலே அடித்த இரு கோல்களுடன் பிரேசில் 5-2 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி மகுடம் சூடியது. அப்போது சக அணி வீரர்கள் பீலேவை தோளில் தூக்கி வைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். தொடர்ந்து 1962-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை பிரேசில் அணி தக்கவைத்தது. துரதிருஷ்டவசமாக இந்த தொடரில் காயம் காரணமாக பீலே இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.

ஆனால் 1970-ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பிரேசில் வாகை சூடியபோது நாட்டின் சின்னமாக மாறினார் பீலே. இத்தாலிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிகண்டது. இந்த ஆட்டத்தில் 19-வது நிமிடத்தில் அணியின் முதல் கோலை அடித்த பீலே, 87-வது நிமிடத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்தை எளிதாக கார்லோஸ் ஆல்பர்டோ டோரஸுக்கு தட்டிவிட்டு கோல் அடிக்க வைத்தார். இது ரசிகர்களை வியக்கவைத்தது.

புகழின் உச்சத்தில் இருந்த பீலேவை ஐரோப்பிய கால்பந்து கிளப்புகள் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்ய போட்டிபோட்டன. ஆனால் பிரேசில் அரசாங்கம் அதனை அனுமதிக்கவில்லை. மாறாக, பீலேவை நாட்டின் சொத்தாக அறிவித்தது. கால்பந்து உலகில் 10-வது எண் கொண்ட ஜெர்சி, இன்றளவும் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் பீலேதான். கோல் அடித்ததும் அதனை பீலே கொண்டாடும் விதமும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. தனது கால்களின் ஜாலத்தால் போரையே இரு நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார் பீலே. 1967-ம்ஆண்டு நைஜீரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பீலே இடம் பெற்றிருந்த சாண்டோஸ் கிளப் நைஜீரியாவுக்கு காட்சி போட்டியில் விளையாட சென்றது. இந்த போட்டிக்காக சுமார் 48 மணி நேரம் போர் நிறுத்தி வைக்கப்பட்டது. சாண்டோஸ் கிளப் – நைஜீரியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

1997-ல் பிரிட்டனின் ராணி 2-ம் எலிசபெத், பீலேவுக்கு ‘நைட்’ பட்டம் வழங்கினார். ஒருமுறை வட அமெரிக்காவில் கால்பந்து போட்டியை பிரபலப்படுத்துவதற்காக பீலே, வாஷிங்டன் நகருக்கு சென்றார். அப்போது முதல் நபராக பீலேவுடன் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர், “என் பெயர் ரொனால்டு ரீகன், நான் அமெரிக்க அதிபர்” என அறிமுகமாகி உள்ளார். அத்துடன் அவர் நிற்கவில்லை, "உங்களை, நீங்கள் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் பீலே யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று கூறி சிலாகித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் கறுப்பின மக்களின் பெருமைக்கு அச்சாணியாக திகழ்ந்த பீலே, ‘கருப்பு முத்து’ எனவும் அழைக்கப்பட்டார். 1977-ம்ஆண்டு அனைத்துவிதமான கால்பந்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் பீலே. முன்னதாக 1975-ம் ஆண்டு பீலே, வட அமெரிக்க கால்பந்து லீக்கின் நியூயார்க் காஸ்மோஸ் கிளப்பில் சேர்ந்தார். 34 வயதை கடந்தாலும், வட அமெரிக்காவில் தனது முத்திரையை பதித்தார். காஸ்மோஸ் லீக் பட்டத்தை கைப்பற்ற அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்த கிளப்பில் மூன்று சீசன்களில் பீலே, 64 கோல்களை அடித்தார். 1977-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி காஸ்மோஸ் – சாண்டோஸ் அணிகள் இடையிலான காட்சி போட்டியுடன் தனது கால்களுக்கு ஓய்வு கொடுத்தார் பீலே.

பீலேவின் கடைசி ஆட்டத்தை காண மைதானத்தில் 77 ஆயிரம் ரசிகர்கள் குவிந்திருந்தனர். முகமது அலி உட்பட பல்வேறு விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் இந்த போட்டியை காண வந்திருந்தனர். இந்த ஆட்டத்தில் பீலே முதல் பாதியில் ஓர் அணிக்காவும், 2-வது பாதியில் மற்றொரு அணிக்காவும் விளையாடினார். இது ரசிகர்களை நெகிழ வைத்தது.

கால்பந்தாட்டத்திற்குப் பிறகு பீலேவின் வாழ்க்கை பல வடிவங்களை எடுத்தது. அரசியல்வாதி, பிரேசிலின் விளையாட்டு துறை அமைச்சர், தொழிலதிபர், யுனெஸ்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதராகவும் இருந்தார். மேலும் திரைப்படங்கள், விளம்பரங்கள், இசை ஆல்பங்களிலும் நடித்தார்.

ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமடைந்ததால் பயணங்கள் மற்றும் வெளி இடங்களில் தோன்றுவதை குறைத்துக்கொண்டார். தனது இறுதி ஆண்டுகளில் சக்கர நாற்காலியில் அடிக்கடி காணப்பட்டார். 1970-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனது சிலையை திறப்பதற்கான விழாவில் கூட பீலேவால் கலந்து கொள்ள முடியாமல் போனது. தனது 80-வது பிறந்தநாளை ஒரு சில குடும்ப உறுப்பினர்களுடன் கடற்கரை இல்லத்தில் எளிமையாக கொண்டாடினார்.

அவரது மறைவையொட்டி பிரேசில் நாட்டில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் பொல்சொனாரோ அறிவித்திருந்தது. ஆனால் அந்த கால்பந்து விளையாட்டின் அரசனுக்கு உலகமே அஞ்சலி செலுத்தியது.

Advertisement