தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉எம்.ஜி.ஆரை🎩எம். ஆர். ராதா🕶 துப்பாக்கியால் சுட்ட தினம்!

07:38 AM Jan 12, 2024 IST | admin
Advertisement

1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம், தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர். அப்போதும் புகழேணியின் உச்சியில் இருந்தார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எம்.ஜி. ஆரும், எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்த 'பெற்றால்தான் பிள்ளையா' படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் 1967 ஜனவரி 12-ந்தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி. ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு, எம்.ஆர். ராதா போனார். அவருடன், 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை தயாரித்த முத்துக் குமரன் பிக்சர்ஸ் அதிபர் வாசுவும் சென்றார். 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை தயாரிப்பதற்கு, எம். ஆர்.ராதா ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்ததார்.

படம் வெளியான பிறகு, அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக, எம்.ஜி.ஆர். உறுதி கூறியிருந்தார் என்றும், அதன் படி பணம் வராததால், வாசுவையும் அழைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர். வீட்டுக்கு ராதா சென்றதாகவும் சொல்லப்பட்டது.எம்.ஜி.ஆரை ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். முன்பு ஒப்புக் கொண்டது போல், தனக்கு ஒரு லட்சத்தை தரவேண்டும் என்று எம்.ஆர். ராதா கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

Advertisement

.

அப்போது உன்னால் எனக்கு நிறைய நஷ்டம். பல படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள் என்று ராதா ஆத்திரத்தோடு கூறினார். இதனால் தகராறு முற்றியது. எம்.ஆர்.ராதா கோபத்தோடு வெளியே செல்வதுபோல எழுந்தார். பிறகு, 'சட்'டென்று மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டார். எம்.ஜி.ஆர். கீழே குனிந்தார். குண்டு, அவர் இடதுபுற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் திகைப்படைந்த படத் தயாரிப்பாளர் வாசு, பாய்ந்து சென்று எம்.ஆர்.ராதாவை பிடித்தார். மேற்கொண்டு சுடாதபடி தடுத்தார்.

உடனே ராதா, துப்பாக்கியை தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது. இதற்குள் எம்.ஜி.ஆர். வீட்டு ஆட்கள் ஓடிவந்து ராதாவை பிடித்துக்கொண்டனர். துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆரை ஒரு காரில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். எம்.ஆர்.ராதா, இன்னொரு காரில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எம்.ஆர்.ராதாவின் தலையில் குண்டு இருந்தது. மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக, அவர்கள் இருவரும் பெரிய (ஜெனரல்) ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டனர். இருவருக்கும் தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆருக்கு இரவு 10.45 மணி முதல் நள்ளிரவு 2.45 வரை ஆபரேஷன் நடந்தது.

காது அருகே பாய்ந்து இருந்த சிறிய இரும்புத்துண்டை (குண்டின் ஒரு பகுதி) வெளியே எடுக்கமுடியவில்லை. அதை எடுக்க, ஆபரேஷன் செய்யச் செய்ய ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, அதை உள்ளேயே வைத்து தையல் போட்டுவிட்டார்கள்.இதனால் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். உணர்வு இல்லாமல் இருந்தார். குண்டு பாய்ந்த இடத்தை டாக்டர்கள் பலமுறை 'எக்ஸ்ரே' எடுத்தனர். காயம்பட்ட இடத்தில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியதால் ஆஸ்பத்திரியில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.

பின்னாளில் " என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன். 'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' என விளக்கினார்.

எம்.ஆர்.ராதாவுக்கு இரவு 11 மணி வரை ஆபரேஷன் நடந்தது. அவர் தலையில் இருந்து ஒரு குண்டும், கழுத்தில் இருந்து ஒரு குண்டும் அகற்றப்பட்டன.

இதற்கிடையில் நடிகர் எம். ஆர்.ராதா கைது செய்யப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் அறிவித்தார். எம்.ஜி.ஆரை கொல்ல முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தி.மு.கழகத் தலைவர் அண்ணா, மு.கருணாநிதி, என்.வி.நடராசன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்குச் சென்று எம்.ஜி.ஆரை பார்த்தனர். படுகாயத்துடன் படுக்கையில் படுத்திருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து, அண்ணாவும், மற்ற இரு தலைவர்களும் கண் கலங்கினர். பிறகு அண்ணாவும், மற்றவர்களும் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று, அங்கு நடந்ததை விசாரித்தனர்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்ட செய்தி, காட்டுத்தீபோல் பரவியது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன. சென்னை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வரும்போதே, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் படங்கள், தி.மு.க. பிரசார சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன.

தேர்தல் பிரசாரத்துக்கு போகாமல், ஆஸ்பத்திரியில் இருந்தபடி பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா முதலமைச்சர் ஆனார்.

பின்னர் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆர். மார்ச் 10-ந்தேதி வீடு திரும்பினார்.

எம்.ஜி.ஆரை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், எம்.ஆர்.ராதா மீது வழக்கு தொடரப்பட்டது தனி ரிப்போர்ட்!.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
ActersdkdmkMGRmr radhashoot
Advertisement
Next Article