ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் - நவம்பர் 22
ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்ற ஜான் எஃப் கென்னடி 1917-ம் ஆண்டு மே 29-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 35-வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.இரண்டாம் உலகப்போரின்போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்வானார். மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார்.
சிறிது காலம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சிகிச்சைப் பெற்று வந்த காலத்தில் ‘Profiles in courage’ என்ற நூலை எழுதினார். aந்த நூலுக்காக இவருக்கு 1957-ல் ‘புலிட்சர் பரிசு’ வழங்கப் பட்டது. 1960-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்கா வின் 35-வது அதிபராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 43. இவரது பதவி ஏற்பு விழா உரை உலகப் புகழ் பெற்றது. அதில், ‘நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே. நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்’ என்று முழங்கினார்.
அதிபரான பின் இவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதிக பொருளாதார வளத்தை அமெரிக்கா கண்டது. இவரது தலைமையின் கீழ், 1963-ல் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரிட்டனும் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இவரது ஆட்சிக் காலத்தில் கியூபா ஏவுகணை விவகாரம், பெர்லின் சுவர் பிரச்சினை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம், வியட்நாம் போர் ஆரம்பம் ஆகிய பல முக்கிய நிகழ்வுகள் உலகில் நடந்தன. அவை எழுப்பிய சவால்களை இவர் தீர்க்கமாக எதிர்கொண்டார்.
கம்பீரமான தோற்றமும் நல்ல பேச்சாற்றலும் கொண்டவர். அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். போரை வென்றதற்காக அல்லாமல் போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டவர்.அமெரிக்காவில் இன்றும் அன்போடு நினைவுகூரப்படும் அதிபர்களுள் இவர் மிகவும் முக்கியமானவர். அமெரிக்காவில் பல முக்கிய இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆக, அமெரிக்க மக்களை மட்டுல்ல, உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடி. புகழின் உச்சியிலிருந்தபோது அவர் இதே நாளில்(நவம்பர் 22) தான்சுட்டுக் கொல்லப்பட்டார். இச் சம்பவம் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்தது. கம்பீரமான தோற்றமும், அவர் ஆட்சியின்போதுதான் வானவெளி ஆராய்ச்சிகளில் அமெரிக்கா வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
1962 அக்டோபர் மாதம், அமெரிக்கா அருகில் உள்ள கியூபாவில் ஏவுகணை தளம் அமைக்க ரஷியா முயன்ற போது, கியூபாவைச் சுற்றிப் போர்க்கப்பல்களை நிறுத்தி, "கடல் முற்றுகை"யிட்டு ரஷியாவின் முயற்சியை முறியடித்தார், கென்னடி. அதே மாதத்தில், இந்தியா மீது சீனா படை யெடுத்தபோது, இந்தியாவுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவினார்.
உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய கென்னடி 1964ல் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், 1963 நவம்பர் 22ந்தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்குச் சென்றார். மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்றபோது, ரோட்டின் இருபுறமும் திரளான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார், கென்னடி.
திடீரென்று, ஒரு கட்டிடத்தின் 6வது மாடியிலிருந்து சீறி வந்த மூன்று துப்பாக்கிக் குண்டுகள் கென்னடியின் தலையிலும், கழுத்திலும் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்தார், கென்னடி. அவரை ஜாக் குலின் தாங்கிக் கொண்டு கதறினார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்தச் சம்பவம் நடந்து விட்டது. என்ன நடந்தது என்பது கூடப் பொது மக்களில் பலருக்குத் தெரியவில்லை. காரிலிருந்த மெய்க்காவலர்கள், காரை அருகில் இருந்த ஆஸ்பத்திரியை நோக்கித் திருப்பினார்கள். அங்கு கென்னடிக்கு ஆபரேஷன் நடந்தது. அவர் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் பெருமுயற்சி செய்தனர். ஆனால் பலனில்லை. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அரை மணி நேரத்தில் கென்னடியின் உயிர் பிரிந்தது.
கென்னடி கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஆஸ்வால்டு (வயது 24) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். அவன் முன்பு கடற்படையில் பணியாற்றியவன். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக 1963 நவம்பர் 24ந்தேதியன்று போலீசார் வெளியே அழைத்து வந்தனர். ஜெயிலுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜாக் ரூபி (வயது 42) என்பவன், ஆஸ்வால்டை வெகு அருகிலிருந்து சுட்டான். குண்டு குறி தவறாமல் நெஞ்சில் பாய்ந்தது. ஆஸ்வால்டு அதே இடத்தில் செத்து விழுந்தான். ஆஸ்வால்டு கொல்லப்பட்டதால், கென்னடியை அவன் எதற்காகச் சுட்டுக்கொன்றான், அதன் பின்னணி என்ன, அவனை யாரும் தூண்டிவிட்டார்களா என்பதே தெரியாமல் போய் விட்டது.
ஆஸ்வால்டை சுட்டுக்கொன்ற ரூபியை உடனே போலீசார் கைது செய்தனர். ரூபி "இரவு விடுதி" ஒன்றின் சொந்தக்காரன். அவன் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவனுக்கு 1964 மார்ச் 14ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் மனநோயாளி என்று டாக்டர்கள் கூறியதால் தூக்கில் போடப்படாமல் காவலில் வைக்கப் பட்டிருந்தான். சிறையிலேயே 1967 ஜனவரி 3ந்தேதி மரணம் அடைந்தான்.
டெயில் பீஸ்:
கடந்த 1963ம் ஆண்டு இதே நவம்பர் 22ம் திகதி அமெரிக்காவின் டீலே பிளாசா பகுதியில் காரில் சென்ற போது ஜனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் அல்லவா ? அவருடைய காருக்கு பின் பிரஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் இருந்தவர் நியூயார்க் டைம்ஸ் நிருபர் டாம் விக்கர். பத்திரிகை வேலைக்கு புதியவர். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் பரபரப்படைந்தார் டாம்.
அவரிடம் நிருபர்கள் வைத்திருக்கும் நோட்பேட் இல்லை. அதிபரின் நிகழ்ச்சி நிரல் குறித்து அளித்திருந்த அழைப்பிதழின் பின்பக்கமே அனைத்து தகவல்களையும் குறிப்பெடுத்தார்.உடனடியாக கைபேசியிலேயே பத்திரிகை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். சுமார் 2 பக்க அளவுக்கு அவர் கொடுத்த செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தன.
கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் தத்ரூபமாக அவர் விவரித்திருந்தார். நாவல் ஆசிரியராக விரும்பினார் டாம். அவர் எழுதிய நாவல்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் கென்னடி படுகொலை செய்திக்கு பின் அவர் உலகளவில் பிரபலமானார்.
வெர்மான்ட் நகரின் ரோசெஸ்டர் பகுதியில் வசித்து வந்த டாம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். வடக்கு கரோலினாவில் ஏழை குடும்பத்தில் பிறந்து உலகளவில் பிரபலமான டாம் விக்கரின் மறைவுக்கு முக்கிய தலைவர்கள் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது