தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தேர்தல் அறிக்கை : பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்- காங்கிரஸ் அறிவிப்பு!.

07:04 PM Jan 17, 2024 IST | admin
Advertisement

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 423 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அந்த 423 தொகுதிகளிலும், 186 தொகுதிகளில் பாஜக – காங்கிரஸ் நேரடியாக மோதின. இந்த 186 தொகுதிகளில் காங்கிரஸால் 16 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதைச் சுட்டிக் காட்டி பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோதக் கூடிய, அதாவது இரண்டு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்; தங்களுக்கு ஆதரவுள்ள மாநிலங்களைத் தங்களுக்கே விட்டுத்தர வேண்டும் என்றே ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கோருகின்றன.காங்கிரஸைவிட மற்ற கட்சியால் பாஜகவைத் தோற்கடிக்க வாய்ப்பு அதிகம் என்றால் அந்தக் கட்சிக்கே காங்கிரஸ் விட்டுத்தர வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.ஆனாலும் இம்முறை காங்கிரஸ் வியூகத்தை மாற்றுகிறது. 255 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த கார்கே விரும்புகிறார்.அத்துடன் ராகுல் காந்தி மேற்கொள்ளவிருக்கும் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ மூலம் கட்சிக்கான ஆதரவைப் பெருக்க காங்கிரஸ் கணக்கிடுகிறது.

Advertisement

இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையில் என்ன விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பிரத்யேக இணையதளத்தையும், மின்னஞ்சலையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். காங்கிரஸ் முடிந்தவரை பல பரிந்துரைகளை அறிக்கையில் இடம்பெறச் செய்யும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்கள் நடத்த வேண்டிய பொது ஆலோசனைகளைத் தவிர, பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை பெற ஒரு மின்னஞ்சல் கணக்கையும், பிரத்யேக வலைதளத்தையும் காங்கிரஸ் தொடங்கியுள்ளது” என்றார். இந்நிகழ்வின்போது, காங்கிரஸ் தலைவர்கள் டி.எஸ்.சிங் தியோ, சுப்ரியா ஸ்ரீனேட் ஆகியோர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துகள் தொடர்பாக பொதுமக்கள், awaazbharatki@inc.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது www.awaazbharatki.in என்ற இணையதளத்தில் கருத்துகளை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல, அது மக்களின் குரல். மேலிருந்து கீழாக கொள்கை வகுப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாமானிய குடிமக்களின் அபிலாஷைகளை நாங்கள் வழிநடத்துகிறோம். அவர்களின் வாழ்க்கையை மாற்ற அர்த்தமுள்ள கொள்கைகளைக் கொண்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துகளை எங்களிடம் சேருங்கள்! உங்கள் யோசனைகளை https://awaazbharatki.in என்ற வலைதளத்தில் சமர்ப்பிக்கவும். இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்பீர்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
congressemailmanifesto 2024 Lok Sabha electionpeople Indiasend their suggestionsWebsite
Advertisement
Next Article