சங்கி என்றால் நண்பர் என்று சொன்னவரின் நிலை!
சூப்பர் ஸ்டார் ரஜினி - சீமான் சந்திப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சந்திப்புக்குப் பிறகு, ‘ரஜினி சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்’ என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார் சீமான்.
'மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்,
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதிலும்,
தன்னை மறுதலைப் பழித்த காலையும்,
தன்னுடைய ஆற்றல் உணரார் இடையினும்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே' என்று நன்னூல் கூறுவது அனுமனுக்குப் பொருந்தும். ஆனால், அது நமது ‘தமிழர்கோன்’ சீமானுக்குப் பொருந்துமா என்று கேட்பது நமது முட்டாள்தனத்தையே காட்டும். எனவே, குண்டக்க மண்டக்கப் போகாமல், நேராக விஷயத்திற்கு வந்துவிடுவோம்.
நமக்கு உள்ள சந்தேகம் இதுதான். இரண்டு சூப்பர் ஸ்டார்கள் சந்தித்துக் கொள்ளும்போது, நின்று கொண்டேதான் பேசிக் கொள்வார்களா? தன் வீடு தேடி வந்த ஓர் அரசியல் சூப்பர் ஸ்டாரை வரவேற்று, வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்துப் பேசவேண்டும் என்கிற நாகரிகம் அறியாதவரா ரஜினி? அவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றால், அவ்வளவு நேரமும் நின்றபடியேவா பேசியிருப்பார்கள்? வீட்டுக்குள் சென்று அமர்ந்தபடிதானே பேசியிருப்பார்கள்? அப்போது ஒரு படம்கூட எடுக்கப்படவில்லையா? வெளியான படம் என்பது, சினிமா சூப்பர் ஸ்டாரான ரஜினி அருகில், அவருடைய ரசிகர் ஒருவர், நம்ப முடியாத சந்தோஷத்துடன் பவ்வியமாக நிற்பது போன்ற தோற்றத்தைத் தானே தந்தது. ஏன் இப்படி? இந்தக் கேள்விக்கு, சீமானும் நாக்பூர் பக்தரும்தான் பதில் சொல்ல வேண்டும்.
இப்படி விடை தெரியாத ஏகப்பட்ட கேள்விகள் எழுவதால்தான், சீமான் கட்சியினர் ஆங்காங்கே சிதற ஆரம்பித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமையில் சுமார் ஐம்பது பேர், ஊடகங்களைச் சந்தித்து என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? ‘சட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நாங்கள் கட்சியிலிருந்து விலகுகிறோம். அவர், ‘தமிழர், தமிழ் தேசியம்’ என்ற இலக்கை நோக்கிச் செல்லாமல், தற்போது வேறு பாதையில் செல்கிறார். ஒரு காலத்தில் ‘சங்கி’ என்று சொன்னால், செருப்பைத் தூக்கிக் காண்பித்த அவர், தற்போது நடிகர் ரஜினி காந்தைச் சந்தித்த பின்னர், ‘சங்கி’ என்பதற்கு ‘நண்பன்’ என்று புது அர்த்தம் சொல்லுகிறார்.
நடிகர் விஜய், மாநாடு நடத்துவதற்கு முன்பு அவருக்கு ஆதரவு தெரிவித்தார். மாநாடு நடந்த பின்னர் எதிர்க்கிறார். இதனால், சீமானின் கொள்கையில் முரண்பாடு உள்ளது. கட்சி நிர்வாகிகளுக்கு அவர் மரியாதை கொடுப்பதில்லை. நிர்வாகிகளின் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. கட்சிப் பதவிகள் வழங்குவது தொடர்பாக கட்சி நிர்வாகிளோடு கலந்து ஆலோசிப்பதுமில்லை. எனவே, நாங்கள் கட்சியிலிருந்து விலகுகிறோம்’ என்று விலகி விட்டார்கள். அண்மையில், இலங்கைத் தமிழர் ஒருவர்கூட சீமானுக்கும் புலிகளுக்குமான உறவுகள் பற்றிப் பேசி, காணொளியொன்றை வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் நாமென்ன சொல்ல முடியும்?