ஒட்டுக் கேட்பு மாதிரி திருட்டு வேலைகள் செய்தால்தான் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று பாஜக இறங்கி விட்டது!
ஆப்பிள் ஐஃபோன் வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருக்கும் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அவர்களது தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை அரசு-சார் குழுக்கள் ஒட்டுக் கேட்பதாகவும், ஃபோன் தகவல்களை தரவிறக்குவதாகவும் அந்த எச்சரிக்கை குறுஞ்செய்தி தெரிவித்திருக்கிறது. State-sponsored attackers என்பது அந்த செய்தியில் உள்ள சொற்றொடர்.
இந்த செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்தத் தலைவர்கள் X தளத்தில் (முன்னாள் டிவிட்டர்) பதிவிட்டு வருகிறார்கள். தெலங்கானா தொழில் நுட்ப அமைச்சர் கேடிஆர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸை சேர்ந்த சசி தரூர் மற்றும் கே சி வேணுகோபால், அகிலேஷ் யாதவ், மவ்வா மொய்த்ரா, சீதாராம் யெச்சூரி, என்று இந்தப் பட்டியல் போகிறது. ஐஃபோன் வைத்திருக்கும் ராகுல் காந்தியின் அலுவலக ஊழியர்கள் பலருக்குமே கூட இப்படி செய்திகள் வந்திருக்கின்றன. மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை மறுத்திருக்கிறார். இந்த செய்தி தெளிவாக இல்லை என்றும் அரசு இது சம்பந்தமாக விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் 'இந்த மாதிரி ஏற்கனவே 150 நாடுகளில் நடந்திருக்கிறது,'என்று ஆப்பிள் குறிப்பிட்டதை பிடித்துக் கொண்டு '150 நாடுகளில் நடந்திருக்கிறது எனில் எப்படி இந்திய அரசு பொறுப்பாக முடியும்?' என்ற ரீதியில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அவரது அந்தக் கேள்விக்கு ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்திருக்கிறது. 150 நாடுகளில் நடந்தது என்றால் ஆரம்ப காலம் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் என்று அர்த்தம்; அதாவது இந்தியாவில் நடப்பதைப் போல இதுவரை பிற நாடுகளிலும் நடந்திருக்கிறது என்பதைத்தான் குறிப்பிட்டோம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.
இது மிகவும் சீரியஸான பிரச்சினை. பொதுத் தேர்தலுக்கு சுமார் ஆறேழு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பாஜக இப்படி இறங்கி அரசு இயந்திரங்களை துஷ்பிரயோகம் செய்வது கீழ்த்தரமான செயல். இந்த மாதிரி முயற்சிகள் மூலம் தேசத்தின் ஜனநாயகத்தை படு மோசமாக குலைக்க முயலும் கும்பல்கள்தான் தங்களை தேச பக்தர்கள் என்று வேறு தொடர்ந்து பீற்றிக்கொள்கிறார்கள். 'தேர்தல் குறித்து பாஜகவுக்கு பயம் வந்து விட்டதையே இந்த முயற்சிகள் சுட்டிக் காட்டுகின்றன,' என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருப்பது உண்மைதான்.
நரேந்திர மோடியின் வசீகரம் மற்றும் ராமர் மீதான சாமானிய இந்துவின் பக்தியை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தல்களை ஜெயித்த காலங்கள் முடிவடைந்து விட்டன என்று பாஜக உணரத் துவங்கி இருப்பதையே இது காட்டுகிறது. தான் வெறும் அழகான ஒரு ஊமைப் பொம்மை மட்டுமே என்று இந்தப் பத்து ஆண்டுகளில் மோடி உலகுக்கு நிரூபித்திருக்கிறார். போலவே இந்தியக் கலாச்சாரம் போற்றும் ராமன் வேறு, பாஜக முன்னெடுக்கும் ராமன் வேறு என்பதும் மக்களுக்கு புரிய ஆரம்பித்து இருக்கிறது. எனவே, இந்த ஒட்டுக் கேட்பு மாதிரி திருட்டு வேலைகள் செய்தால்தான் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று பாஜக இறங்கி விட்டது போல.
போலி தேச பக்தர்களுக்கு கடுமையான கண்டனங்கள்.