For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பங்களாதேஷ் சம்பவம் ஒரு சமிக்ஞை!

09:04 AM Aug 06, 2024 IST | admin
பங்களாதேஷ் சம்பவம் ஒரு சமிக்ஞை
Advertisement

ங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருக்கிறார். இப்படி சொல்வதை விட செய்ய வேண்டி வந்து விட்டது என்பதுதான் உண்மை. கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிராக தேசிய அளவில் உருவான போராட்டங்கள் கலவரமாக மாறி பெரும் கூட்டம் அவர் வீட்டு வாசலிலேயே குவிந்து விட்டது. துணிகளைக் கூட சரியாக பேக் செய்து கொள்ள நேரமின்றி அவசர அவசரமாக வீட்டை விட்டு ஓட வேண்டி வந்து விட்டது. ராணுவத்தின் உதவியுடன் தனது தங்கையையும் கூட்டிக் கொண்டு தில்லி விரைந்திருக்கிறார். தற்போது, போராட்டக் குழுவினர் அவர் வீட்டை முற்றுகையிட்டு சூறையாடி இருக்கிறார்கள்.

Advertisement

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு வேளைகளில் 30% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிராக தேசமெங்கும் எழுந்த போராட்டங்கள்தான் இதற்கு ஆரம்பமாக சொல்லப்படுகிறது. அப்போராட்டத்தை அரசு இரும்புக் கரங்களுடன் எதிர்கொண்டது. 200க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20,000க்கும் மேல் காயமடைந்திருந்தனர். சுமார் பதினோராயிரம் பேர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். தேசம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, இணையத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தது. இவை எல்லாம் நடந்தும் போராட்டம் தணியாததால் உச்ச நீதிமன்றம் அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்கி விட்டது. இருப்பினும் அரசின் அடக்குமுறை மக்களின் கோபத்தை மேலும் வலுப்படுத்தவே உதவியது. ஷேக் ஹசீனா கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அவரது ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சியுற்றாலும் ஜனநாயகம் அதல பாதாளத்துக்குப் போயிருக்கிறது. ஜனநாயக ரீதியில் தாங்கள் விமர்சனங்களை, எதிர்ப்புகளை முன்வைக்கவும், ஆட்சியில் கொள்கை மாற்றங்களை முன்னெடுக்கும் வழிமுறைகளும் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. கடந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் மொத்தமாக புறக்கணித்திருந்தன. இவையெல்லாம் மக்களை ஒரு வித கொந்தளிப்பு நிலையிலேயே வைத்திருந்திருக்கிறது. இறுதியில் last straw on the camel's backஆக இந்தப் போராட்டம் கிடைத்திருந்திருக்கிறது.

Advertisement

இப்போது தேசம் ராணுவத்தின் கைகளுக்குப் போயிருக்கிறது. வேறு வழியில்லை. அடுத்ததாக எதிர்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று ராணுவம் அறிவித்திருக்கிறது. இந்த சம்பவத்தில் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு பாடம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் அரசுக்கெதிரான விமர்சனங்கள், போராட்டங்களை அனுமதிப்பது அவசியமான ஒன்று. கொள்கை முடிவுகளை விமர்சித்தல், அவற்றை மாற்றுவதற்கும் திருத்துவதற்கும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை முக்கியமான தேவையாக இருக்கின்றன. போராட்டங்கள் - அவை வன்முறையாக மாறாத வரை - அனுமதிக்கப்பட வேண்டும். அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள் அல்ல. உண்மையில் அவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள்தான் என்ற தெளிவை அரசு ஆதரவாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அப்படி எல்லாம் நிகழாமல் ஜனநாயக கட்டமைப்புகளை நசுக்கி, எதிர்க் கருத்துகளை எல்லாம் ஒழிக்க முனைந்தால் இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதையே பங்களாதேஷ் சம்பவம் நமக்கு சுட்டும் பாடம். கடந்த 10 ஆண்டுகளாக ஜனநாயக கட்டமைப்புகளை துச்சமாக மதித்து, விமர்சனங்களை தேச விரோதமாக அணுகி, எதிர்க் கட்சிகளை பலவீனப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வரும் இந்திய அரசுக்கும் இந்த அரசை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களுக்கும் பங்களாதேஷ் ஒரு டிரெய்லர் காட்டி இருக்கிறது.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
Advertisement