வார வேலை நாட்கள் குறைவதன் பின்னணி!
புனேவில், பணி அழுத்தம் காரணமாக ஒரு 26 வயது பெண் உயிரிழந்த சம்பவம் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. உயிரிழந்தது பெண் என்பதால் கூடுதல் சென்ஸேஷன். ஆண்கள் பல பத்தாண்டுகளாகவே இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் மட்டும் என்றில்லை, சீனா, கொரியா, ஹாங்காங், வியட்நாம் என்று பல ஆசிய நாடுகள் இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் மேற்கத்திய நாடுகள், தங்களது வேலை நேரத்தை இன்னும் குறைக்க முடியுமா என்று ஆலோசித்து வருகின்றன. ஜெர்மன், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை மூன்று நாட்கள் விடுமுறை என்பதை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதித்து வருகிறது.
முன்னேறிய நாடுகள் தங்கள் வேலை நேரத்தைக் குறைக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? அந்த வேலைகள் அவுட்சோர்ஸிங் முறையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு கைமாற்றி விடுகிறார்கள் என்று அர்த்தம். இந்த விவாதத்திற்கு நேரடியான தொடர்பில்லை என்றாலும் கூட, சமீபத்தில் நான் படித்த இரண்டு நேர்காணல்கள், இந்த விவகாரத்தை இன்னொரு கோணத்தில் காணும் வாய்ப்பை எனக்கு அளித்தன. அந்த இரண்டு நேர்காணல்கள் குறித்தும் தனித்தனியாக எழுதவேண்டும் என்று நினைத்தேன். எனது பரபரப்பான பணிச் சூழலால் எழுத முடியவில்லை. உயிர் போகும் அளவுக்கு அழுத்தம் இல்லை என்றாலும் கொஞ்சம் கூடுதல் பணிச்சுமையில் தான் இருக்கிறேன். என்ன இந்த பக்கம் காணோம் என்று விசாரிக்கும் குந்தாணிகள் அமைதி கொள்க.
முதல் நேர்காணல், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் Joseph Stiglitz அவர்களுடையது. எனக்கு தாராளமய பொருளாதாரம் குறித்து நேர்மறையான பார்வை உண்டு. சந்தையை அதன் போக்கில் போட்டியிட அனுமதித்தால் வேலை வாய்ப்புகள் பெருகும், நுகர்வோருக்கு செலவு குறையும் என்பது புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையான claim. எவ்வளவுக்கு எவ்வளவு அரசு, தனது குறுக்கீட்டைக் குறைத்துக் கொள்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பொருளாதாரத்துக்கு நல்லது என்பது 90 களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டது முதல் விவாதிக்கப்படும் விஷயம். நமக்கு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள், மேற்குலகுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் என்ற வகையில், நிலைமையை இப்போது துலக்கமாக நிபுணர்கள் ஆராய்ந்து தங்களது முடிவுகளை முன்வைக்கிறார்கள். உண்மை, நாம் நினைப்பது போல இல்லை என்கின்றன அவை.
தாராளமய பொருளாதாரம் இருக்க வேண்டும், அதே சமயம் அரசின் நெருக்கமான கண்காணிப்பு வேண்டும், மேலும் மக்களை உள்ளடக்கிய பரந்த அளவிலான விவாதம் வேண்டும். இம்மூன்றும் ஒரே தளத்தில் நிகழ வேண்டும். இல்லையென்றால், புதிய பொருளாதாரக் கொள்கை, மிகப்பெரிய சுரண்டலாகவும், வறுமையையும் ஏற்றத் தாழ்வையும் கொண்டு வரும் காரியமாகவே முடியும் என்கிறார் Joseph Stiglitz. உதாரணத்துக்கு, தொழில்நுட்பத்தை எவ்வாறு சந்தையைக் கட்டுக்குள் வைக்கும் நுட்பமாக கார்ப்பரேட்டுகள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆப்பிளையும், ஃபேஸ்புக்கையும் உதாரணமாகக் கொண்டு விளக்குகிறார் அவர். ஒரு ஆப்பிள் ஸ்மார்ட் போனின் விலை ஒரு லட்ச ரூபாய் விற்பதற்குக் காரணம், தங்களது தரத்தின் வழியாக அவர்கள் அடைந்திருக்கும் monopoly என்கிறார். அதேதான் ஃபேஸ்புக்குக்கும். தொழில்நுட்பப் பரவலாக்கத்தின் வழியாக ஒரு பொருளின் விலை குறைவதை விடுத்து அது ஏன் மேலே மேலே போய்க்கொண்டே இருக்கிறது என்று விவாதிக்க வேண்டும் என்கிறார். அதற்குதான் ஆப்பிள் உதாரணம். அது ஒரு சோற்றுப்பதம். கிட்டத்தட்ட நம் கண்ணுக்குத் தெரியாத பல பொருட்கள் அவ்வாறுதான் விலையேற்றி விற்கப்படுகின்றன. ஒரு ஆப்பிள் போனின் உற்பத்தி விலை வெறும் பத்து டாலர்தான் என்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. சீனாவின் sweat shop ல் உழைக்கும் தொழிலாளிக்கு அந்தப் பத்து டாலரில்தான் பங்கு தரப்படுகிறது. ஒரு ரெடிமேட் சட்டைக்கு பட்டன் தைப்பவனுக்கும் ஸ்மார்ட் போனில் ஒரு உதிரி பாகத்தைப் பொறுத்துபவனுக்கும் ஒப்பீட்டளவில் ஒரே சம்பளம்தான். அப்படியென்றால் அந்த போனின் விலையை நிர்ணயிக்கும் காரணி எது? அதுதான் புகை மூட்டமாக இருக்கிறது. போன் ஒரு உதாரணம், கம்பியூட்டர், கார், உயிர்காக்கும் மருந்துகள் என்று அதுவொரு விஷ சூழலாக இருக்கிறது.
இரண்டாவது ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்கின் நேர்காணல். அவர் சொல்கிறார், நாங்கள் சீனாவை நோக்கிப் போவது, அங்கு குறைந்த செலவில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால் அல்ல, பலர் இன்னமும் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது காலாவதியான கருத்தாக்கம். உண்மை என்னவென்றால், அங்கு தொழிலாளர்களுக்கான செலவு மற்ற நாடுகளை விட அதிகம்தான், ஆனால் "திறன்மிகு தொழிலாளர்களின் எண்ணிக்கை" மற்ற எந்த எந்த நாடுகளையும் விட சீனாவில் அதிகம், நாங்கள் அங்கு செல்வதன் காரணம் உண்மையில் அதுதான் என்கிறார். அந்த திறன் மிகு தொழிலாளி ஆட்டோமேட்டிக் வெல்டராக இருக்கலாம், ஃபிட்டராக இருக்கலாம், மெக்கானிக்காக இருக்கலாம். ஒரு நாடு தங்களிடம் இருக்கும் ஸ்பெஷலிஸ்ட்களைக் கொண்டு வந்து ஒரு கான்ஃபரன்ஸ் ஹாலில் உட்கார வைத்தால், சீனா அதே திறன் மிகு தொழிலாளர்களை ஒரு கால் பந்தாட்ட மைதானம் அளவுக்குக் கூட்ட முடியும். அவ்வளவு பேர் அங்கு இருக்கிறார்கள் என்கிறார். இதை சீனா எப்படி சாதித்தது என்பது வேறு ஏரியா, அதைத் தனிக் கட்டுரையில் காண்போம்.
இப்போது மேற்குலகத் தொழில்நுட்பம் சீனா போன்ற தொழில் நுட்பம் மற்றும் திறன் மிகு தொழிலாளர்கள் என்கிற காம்போவோடு நாம் போட்டி போடவேண்டும். அதைத்தான் நம்முடைய நிறுவனங்கள் செய்கின்றன. இன்போசிஸ் நாராயண மூர்த்தி, நம் இளைஞர்கள் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வேலை செய்யப் பழக வேண்டும் என்று சொன்னார் நினைவிருக்கிறதா? அதன் பின்னுள்ளது, இந்தப் புதிய வியாபாரச் சூழலுக்கு தம்மைப் பொருத்திக் கொள்ளும் யத்தனம்தான்.இதே நாராயண மூர்த்தி, மூலதனத்தில் மூளையுழைப்பு எடுத்துக்கொள்ளும் பெரும்பங்கு பணம் பற்றி வாய் திறக்க மாட்டார். ஒரு ஆப்பிள் போனின் விலையில் தொன்னூறு சதம் வெறும் மூளையுழைப்புக்கு மாத்திரம் செலவிடப்படுகிறது. அவ்வாறு குவிக்கபப்டும் மூலதனம் மேலும் மேலும் மூலதனக் குவிப்புக்கே உதவுகிறது. விளிம்பில் இருப்பவர்கள் மீண்டும் விளிம்பிற்கே தள்ளப்படுகிறார்கள். இதுதான் மிகச் சரியாக அரசியல் தொழிற்படும் இடம். இங்கு மூளையுழைப்பு என்பது சந்தையை வளைப்பது, சந்தையை மூளைச்சலவை செய்வது உள்ளிட்டது தான்.
ஒரு நிறுவனத்தின் லாபத்தில் விளம்பரத்திற்கு செலவிடப்படும் தொகை கடந்த இருபது ஆண்டுகளில் பன் மடங்கு உயர்ந்திருக்கிறது. நாம் இருப்பது ஒரு வகை விளம்பர முற்றுகையில். மூலதனக் குவிப்பு இதற்கு பெரும் பங்காற்றுகிறது. ஒருவருக்கொருவர் கார்ப்பரேட்டுகள் இதில் நன்கு உதவிக்கொள்கிறார்கள். குளோபல் வார்மிங் ஏரியா பக்கம் போனால் இதன் கோர முகம் புரியும். எண்ணெய் உற்பத்தியாளர்கள் யாரை எல்லாம் வளைக்கிறார்கள் எப்படியெல்லாம் கருத்துருவாக்குகிறார்கள் என்று தெரியும்.
கொரோனா வைரஸின் போது மொத்த உலகமும் முதலாளித்துவ வழிமுறைக்கு எதிராகப் பேச முயன்றது நினைவிருக்கிறதா? முதலாளித்துவத்தின் கனவு தேசமான அமெரிக்காவே கார்ல் மார்க்ஸை வரித்துக்கொண்டது போல சொல்லாடல்களை உற்பத்தி செய்தது. இடதுசாரி அறிஞர்களே அமெரிக்காவைக் கிண்டலடித்தார்கள். என்னடா இது அமெரிக்காவா அல்லது புரட்*சி காலத்து ரஷ்யாவா என்று. நாம் தொடங்கிய இடத்துக்கே வருவோம். இந்த புனே techie யின் மரணத்தைத் போன்ற மரணங்களைத் தடுக்கவேண்டுமெனில், கார்ப்பரேட்டுகளின் செயல்பாடுகள் மீதான அரசின் தலையீடும் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். உடனே முதலாளித்துவ ஆதரவாளர்கள் வானுக்கும் பூமிக்கும் குதிப்பார்கள்தான். அதை அரசு அதை கண்டுகொள்ளக் கூடாது. வேலை நேரம் என்பதை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். தொழிற்சங்கங்களை அரசே ஊக்குவிக்க வேண்டும். அவற்றின் வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து வெளிப்படையான விவாதங்கள் துவங்க வேண்டும். தொழிற் சங்கம் என்றாலே முதலாளி விரோதம் என்கிற போக்கு மாறவேண்டும்.
உலகெங்கும் நடந்த கம்யூனிஸ வன்முறையின் பின்புலத்தில் முதலாளித்துவத்தை புனிதப்படுத்தும் போக்கு நிகழ்ந்து அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. முதலாளித்துவ அறிஞர்களே இன்று முதலாளித்துவத்தின் எல்லைகளை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவில் இன்னும் கொஞ்சம் ஆபத்தாக மதம், பொருளியல் பேராசையுடன் கைகோர்த்திருக்கிறது. அது பற்றிய விரிவான கட்டுரைகள் வெளிவருகின்றன. எப்படி மத~வெறி விளிம்புகளை உருவாக்கி முதலாளித்துவத்துக்கு உதவுகிறது என்று அவை ஆராய்கின்றன. அந்த திசையில் ஒரு வார்த்தை கூட இங்கு பேசப்படவில்லை. கோவில் லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்தது என்று புகார். அதை எதிர்கொள்ள கோமியம் தெளித்து சடங்கு பண்ணினால் தீட்டு போய் விடும் போன்ற எளிய ஆனால் மிக மிக மனித விரோத கருத்தாக்கங்களே நம்மிடம் தீர்வாக இருக்கின்றன. இதைப் போன்ற விஷங்களை எழுதப் புகுந்தால் ரொம்பவும் மனவுளைச்சலாக இருக்கிறது.