ரஜினி - சீமான் சந்திப்பின் பின்னணி!
ரஜினி - சீமான் சந்திப்பு. கடந்த 21-ம் தேதி முன்னிரவில் ரஜினி இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு, வலைதளங்களில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. காரணம், சீர்மிகு சீமானின் அப்போதைக்கப்போதைய அவதாரங்கள். ஆரம்ப காலங்களில் பெரியார் படம் போட்ட டி-ஷர்ட் அணிந்தார். பிறகு, திடீரென்று பெரியாரைச் சாடியபடி புரட்சியாளர் சேகுவாரா டி-ஷர்ட். நல்ல வேளையாக, சேகுவாராவைச் சாடாமலேயே ஈழத் தமிழர்களின் விடுதலை வீரரானார். திமுகவைச் சாடியபடி, பிரபாகரன் டி-ஷர்ட் அணியத் தொடங்கினார். இப்போது டி-ஷர்ட்டை விட்டு விட்டாலும் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவனாகத் தன்னை பாவித்துக் கொண்டு வலம் வருகிறார். தமிழ் மக்களின் நலனுக்காகவே திரள் நிதியும் திரட்டி வருகிறார்.
இந்நிலையில்தான் ரஜினியுடனான சந்திப்பு நடந்திருக்கிறது. கடந்த எட்டாம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடிய சீமான், ரஜினியை மட்டும் நேரில் சந்தித்து, ஆசி பெற விரும்பியிருக்கிறார். அப்போது ரஜினி ஊரில் இல்லாததால், வந்த பிறகு அழைப்பதாக, ரஜினி தரப்பில் சொல்லப் பட்டிருக்கிறது. அதன்படியே அழைப்பு வர இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. சரி. ஆசி பெறுவோருக்கும் வழங்குவோருக்கும் இடையில், மூன்றாம் நபரான ரவீந்திரன் துரைசாமி எதற்கு? ஊடக விவாதங்களில் பங்கு பெறும் இவரை, ‘அரசியல் விமர்சகர்’ என்று ஊடகங்கள் அறிமுகப் படுத்தினாலும் தான் ஓர் ஆர்எஸ்எஸ் காரர் என்பதை அவர் ஒருபோதும் மறைத்துக் கொண்டதேயில்லை.
இதன் காரணமாகவோ என்னவோ, சீமான் தரப்பு வெளியிட்ட புகைப்படத்தில், ரஜினி, சீமான் ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். பிறகு ரவீந்திரன் துரைசாமி வெளியிட்ட புகைப்படத்தில்தான் மூவரும் இருந்தனர். அதன்பிறகுதான் சீமான் தரப்பு, ‘ ரவீந்திரன் துரைசாமி, என்னை ரஜினி வீடுவரை அழைத்துக் கொண்டுபோய் விட்டார். பிறகு எங்கள் சந்திப்பு நடந்து முடிந்த பிறகுதான் அவர் மீண்டும் அங்கே வந்தார்’ என்று சொன்னது. உடனே ரவீந்திரன் துரைசாமி, ‘ இந்தச் சந்திப்பு, சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. அதில் ஒன்றரை மணி நேரம் நானும் உடனிருந்தேன். சுமார் முக்கால் மணி நேரம்தான் அவர்கள் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டனர்’ என்று சொன்ன பிறகுதான் சீமான் தரப்பு அதை ஒப்புக் கொண்டு மெளனமானது.
இந்த நிலையில், நமக்குச் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ரஜினிதான் சீமானை அழைத்தார் என்றால், இடையில் ரவீந்திரன் துரைசாமிக்கு அங்கே என்ன வேலை? சரி, ஏதோ தற்செயலாக அவர் அங்கே வந்திருந்ததாக வைத்துக் கொண்டாலும் அவர் வருகையைச் சீமான் தரப்பு மறைக்க வேண்டிய அவசியமென்ன? இந்தக் கேள்விகளுக்கான விடை ஒன்றும் கம்ப சூத்திரமில்லை. விஜய்யின் அரசியல் பிரவேசம், சிலருக்கு ஏழரையானதால், அதனால் பாதிக்கப் பட்டவர்கள், தங்களுடைய மூர்த்தங்களான குருமார்களைச் சந்தித்து, முடிந்தவரை பரிகாரம் தேட முயற்சி செய்கிறார்கள். வேறு வழி?