இரும்பின் காலம் தொடங்கியதே தமிழ் நிலத்தில்தான்!- முதல்வர் பெருமிதம்!

இரும்பின் காலம் தொடங்கியதே தமிழ் நிலத்தில்தான்!- முதல்வர் பெருமிதம்!

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை குறித்த நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புகாலம் தொடங்கியது என்று பெருமிதத்துடன் அறிவித்தார். 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது நிரூபணம் என அவர் குறிப்பிட்டார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், இன்று (ஜன.23) நடைபெற்ற அரசு விழாவில் `இரும்பின் தொன்மை’ (Antiquity of Iron) நூலை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கும், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது இதோ:

`கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முந்தோன்றி மூத்தகுடி நமது தமிழ்குடி என்று பெருமை பொங்க நாம் கூறுவதை சிலர் விமர்சித்தார்கள். தமிழ் சமுதாயத்தில் வந்து புகுந்த இழிவுகளும், அதனால் ஏற்பட்ட தேக்க நிலையுமே அதற்குக் காரணம். இந்த இடைக்கால இழிவுகள் நீங்க காலம்தோறும் எண்ணற்ற புரட்சியாளர்கள் தோன்றினார்கள்.அய்யன் வள்ளுவர், வள்ளலார் தொடங்கி அயோத்திதாசர் பண்டிதர் என அந்தப் பட்டியல் நீளமானது. அவர்களின் தொடர்ச்சியாகவே பகுத்தறிவையும் இனமான உணர்வையும் ஊட்டினார் தந்தை பெரியார். பண்பாட்டுரீதியாக அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தை, `ஏய் தாழ்ந்த தமிழகமே’ என்று பேரறிஞர் அண்ணா தன் சிந்தனையால் தட்டி எழுப்பினார்.

சங்க இயக்கத்தில் சொல்லப்பட்டிருந்த நம் வாழ்வியலை, திராவிட இயக்க மேடைகள்தோறும் எடுத்துக் கூறினோம். இலக்கியங்களைப் படைத்தோம். இந்த இலக்கிய பெருமைகளை மெய்ப்பித்து தமிழகத்தின் புதையுண்ட வரலாற்றை மீட்டெடுத்து அறிவுலகத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும், நிகழ்காலத்தில் இருந்து மேலும் சிறப்பான எதிர்காலத்திற்கு தமிழர்கள் வழிநடத்தப்பட வேண்டும் எனவும் நம் உழைப்பைச் செலுத்தி வருகிறோம்.

இந்த விழாவில் முக்கியமான அறிவிப்பை வெளியிடவிருப்பதாக நேற்று கூறியிருந்தேன். தமிழகத்தின் தொன்மையை உலகிற்குத் தெரிவிக்கும் ஒரு மாபெரும் ஆய்வுப் பயணத்தை நான் அறிவிக்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக்காலம் தொடங்கியது என்கிற மாபெரும் மானுடவியல் ஆய்வின் முடிவை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கிமு 4000 ஆண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது. தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு என்பதை உறுதியாகக் கூறலாம்.

தமிழக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், கதிரியக்க கால பகுப்பாய்விற்காக தேசிய மற்றும் உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. முடிவில் அவற்றிடம் இருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

இதன் மூலம் கிமு 3345-ல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமானது தெரியவந்துள்ளது.இந்த முடிவுகள் இந்தியாவின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இரும்பின் காலம் முடிவிற்கு அவர்கள் ஆதரவளித்துள்ளனர். இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்படும்.

இது தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ் நிலத்திற்கும் கிடைத்த பெருமை. தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை கூறி வந்தவை இலக்கியப் புனைவுகளோ, அரசியலுக்காக சொன்னவையோ அல்ல. அனைத்தும் வரலாற்று ஆவணங்கள்’ என்றார்.

இந்த நிகழ்வில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் திலீப் குமார் சக்கரவர்த்தி முன்னிலை உரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்வில், கீழடி இணையத்தளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!