அந்தக் கால மெட்ராஸ் போதும்!
சிக்கெடுத்துச் சீவி முடித்த சிங்காரமும் வேண்டாம்.
சிக்கித் தவித்து மூச்சு முட்ட மூழ்கிடவும் வேண்டாம்.
சாதாரண அந்தக் கால
மெட்ராஸ் போதும்.
அதில் அழுக்கில்லை. ஆபத்துமில்லை.
கண்ணெதிரில்
சாக்கடையில்லை.
நாற்றமில்லை.
குவியல் குவியலாய் குப்பையுமில்லை.
கும்பல் கும்பலாய்
சனங்களுமில்லை.
ஆக்ஸிஜன் விநியோகிக்கும்
மரங்கள் ஏராளம்.
வாகனங்கள் யாவற்றுக்கும் சாலைகள் தாராளம்.
நகரம் வளர்ந்தென்ன..
மனங்கள் சுருங்கினவே..
அடுத்த சந்ததி பற்றி யோசித்தோமில்லை.
என் வீடு! என் மக்கள்!
நான்! எனது! எனக்கு மட்டும்!
இதுவே நிரந்தரக் கொள்கையானதால்..
குட்டிச் சுவராய் தலைநகரம்!
சுட்டு விரலை ஒரு கட்சி, ஒரு தலைவனை நோக்கி நீட்ட இயலாது. பல கட்சி, பல தலைவர்கள் பொறுப்பு!
அவசர சிகிச்சைப் பிரிவில் சென்னை!
முழு மூச்சாய் சிகிச்சை செய்து
உயிர் காப்பதும்..
கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் அச்சடிக்கத் தயாராவதும்
நம் கையில்!
இனி..புயல் வரும்போது மட்டுமானதல்ல போர்க்கால நடவடிக்கை!
இனிவரும் ஒவ்வொரு நாளிலும் அவசியம்!
அறிவுக்குப் பஞ்சமில்லை இங்கு. கொடைக்குப் பஞ்சமில்லை இங்கு. தேவை..தீர்க்கமான திட்டங்களும், தெளிவான செயலாக்கமும்..
இப்போதில்லை எனில் எப்போதுமில்லை.
என்ன செய்யப் போகிறோம்?
சென்னையின் இன்றைய நிலை தாண்டி வேறெதுவுமே சிந்தனைப் பொருளாய் தோன்றாமல் சிந்தும்..
புலம்பல்..
அல்லது ஆதங்கம்..
அல்லதுவேண்டுகோள்..
அல்லது எச்சரிக்கை!