தண்டேல்- விமர்சனம்!
சிலபல ஆண்டுகளுக்கு முன்னர் நிஜமாக ஸ்ரீகாகுளம் மீனவர்கள் நிகழ்ந்த ஒரு பிரச்னையை சினிமாவாக மாற்றியிருக்கிறார்களாம் டைரக்டர் சந்து மொன்டேட்டி மற்றும் கதாசிரியர் கார்த்திக் தீடா என்பவரும். ஆனால் அச்சம்பவத்தின் மையத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கமர்ஷியலுக்காக காதலைக் கலந்து, குழைத்து, கோர்த்து, அதை மட்டுமே சுற்றி அமரன் பட பாணியில் பேச கவர முயன்று இருக்கிறார்கள்.! வழக்கம் போல் கதையை விட சாய் பல்லவிதான் பெரிதும் கவர்கிறார்.ஆனால் காதல், கடல் வாழ்க்கை என்ற இரண்டிலுமே யாதொரு அழுத்தமும் இல்லாமல் முழு படமும் நகர்வது தான் பிரச்சனை.
மீனவர்களின் தலைவனுக்கு உரிய பெயரான தண்டேல் படக் கதை என்னவென்றால் ஶ்ரீகாகுளம் என்கிற சிறிய கிராமத்தை சேர்ந்த மீனவர் ராஜூ (நாக சைதன்யா). ராஜூ மற்றும் சத்யா (சாய் பல்லவி) இருவரும் காதலித்து வருகிறார். ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது ராஜூவின் தொழில். வருடத்தில் பெரும்பாலான மாதங்களை கடலில் கழிக்கும் ராஜூ மிச்சமிருக்கும் கொஞ்ச நாட்களை தனது காதலியுடன் மகிழ்ச்சியாக செலவிடுகிறார். எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு நிகழ்விற்கு பின் ராஜூவை இனி கடலுக்கு போக வேண்டாம் என்று சொல்கிறார் சத்யா. ஆனால் அவள் பேச்சை கேட்காமல் ராஜூ கடலுக்குள் செல்கிறான். கடலுக்குள் சென்ற ராஜூவின் குழு புயலில் மாட்டிக் கொள்கிறது. பின் பாகிஸ்தான் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் ராஜூவும் அவனது குழுவும் சந்தித்த கொடுமைகள் ஒருப் பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தனது காதலனை பிரிந்து இருக்கும் சத்யா எதிர்கொள்ளும் சவால்கள் என தொடர்கிறது படம். சத்யா மற்றும் ராஜூ இருவரும் சேர்ந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
இப்படத்திம் நாயகியும், நாயகனும் சாய்பல்லவி மட்டுமே. நாகசைதன்யாவிடம் காதலை ஆத்மார்த்தத்துடன் கொட்டும் சாய்பல்லவி, தன் பேச்சை சைதன்யா மதிக்கவில்லை என்பதற்காக போனில் கூட பேச முடியாது என்று வைராக்கியமாக இருப்பதும் கடைசி வரை அந்த வைராக்கியத்தை அவர் கடைபிடிப்பதும் என ஒரு காதல் யுத்தத்தையே நடத்தி இருக்கிறார்.சாய்பல்லவியின் பலம் அறிந்தே சாய்பல்லவி நடிப்பை வாரி வழங்க எக்கச்சக்கவாய்ப்புகளை வழங்கி இருக்கிறார் டைரக்டர்.சும்மாவே நடிப்பார் சாய் பல்லவி.. வாய்ப்பு கிடைத்தால் வெளுத்துத்தானே வாங்குவார்.. அதைத்தான் இதில் செய்திருக்கிறார்.ஆனால் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் நாக சைதன்யா வழக்கம் போல் ஒரு பிக்ஸடான ரியாக்ஷன்களையே எல்லா சூழலிலும் கொடுக்கிறார். கொஞ்சம் கூட ஈர்க்கும் படி சீன்களோ, உணர்வுப் பூர்வமான காட்சியோ அவருக்கு இல்லை. அதே சமயம் ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், திவ்யா பிள்ளை, பிரகாஷ் பெலவாடி, கருணாகரன் ஆகியோர் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
கேமராமேன் ஷ்யாம்தத் கைவண்ணத்தில் கடல் மற்றும் கடற்கரை காட்சிகள், சிறை என ஒவ்வொரு இடத்தையும் திருத்தமாக, விரும்பும்படியாக காட்சிப் படுத்தி வழங்கி ஸ்கோர் செய்கிறார். படத்தின் பெரிய பலம் தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை. எமோஷனல் காட்சிகள், மாஸ் காட்சிகள், காதல் என எல்லாவற்றிலும் கூடுதலாக அழுத்தம் சேர்க்கிறது.
தமிழ் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் அன்றாடம் இடம் பிடிக்கும் மீனவர் கைது என்ற ஒற்றை வரி செய்தியை ரீல் சுற்றி வழங்க கவரப் பார்கிறார்கள்.. ஆனால் ஏனோ ஆர்டினரி படமாகி விட்டது.
மார்க் 2.25/5