For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தலைமைச் செயலகம் - வெப் சீரீஸ் =விமர்சனம்!

07:11 PM May 19, 2024 IST | admin
தலைமைச் செயலகம்   வெப் சீரீஸ்  விமர்சனம்
Advertisement

மிழில் பெரும்பாலும் அரசியல் சினிமாக்கள் கொஞ்சம் கம்மிதான்,  இச்சூழலில் அரசியலின் பின்னணியில் நடைபெறும் அதிரி புதிரி கதைகளை வைத்துக்கொண்டு ஒரு முழு சீரிசை முயன்று பார்த்திருக்கிறார்கள்.ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் தயாரித்திருக்கும் இந்தத் தொடரை வசந்த பாலன் இயக்கி இருக்கிறார். கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், ஆதித்யா மேனன், சந்தான பாரதி, கவிதா பாரதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் என்று கதையில் சொல்லப்பட்டாலும் அதில் ஆந்திர அரசியல், டெல்லி அரசியல், மேற்கு வங்க அரசியல் என பல்வேறு மாநிலங்களின் அரசியல் காய் நகர்த்தல்களை கொண்டு கதை உருவாகி இருக்கிறது. பெரும்பாலும் இது ஆந்திர முதலமைச்சர்களின் அரசியலை தழுவி உருவாக்கப்பட்ட கதையாகவே தோன்றுகிறது. மறைந்த ஆந்திர முதல்வர் என் டி ராமராவ், மறைந்த ராஜசேகர் ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை சம்பவங்கள் தலைமைச் செயலகம் கதையில் கற்பனையாக புனையப்பட்டுள்ளது . அதாவது ராடன் நிறுவனம் கொடுத்த ஒரு முதல்வர் தொடர்பான கதையில் சில பல மாற்றங்கள் செய்து இக்கதையை உருவாக்கி இருக்கிறார் என்று தகவல். ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் விபத்து, கெளரி லங்கேஷ் வீட்டு வாசலில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆளும் மாநிலக் கட்சிகளைத் துண்டாடத் துடிக்கும் ஒன்றிய அரசின் காய் நகர்த்தல்கள், முதல்வரின் நாற்காலியைப் பிடிக்கத் காத்திருக்கும் கழுகுக் கூட்டங்கள் என சமகால அரசியல் நிகழ்வுகளை எந்த அளவிற்குப் பேச முடியுமோ அந்த அளவிற்குப் பேசி கவர முயன்று இருக்கிறார் இயக்குநர்.

Advertisement

அதாவது தமிழக முதல்வராக வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). இவர் மீது ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் ஒருவரால் தொடுக்கப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக திரும்ப, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான் வர வாய்ப்பிருப்பதாக அனைவரும் அறிகின்றனர். இந்த வழக்கானது ஆந்திர பிரதேசத்தில் நடக்கிறது. கிஷோர் சிறைக்குச் சென்று விட்டால், முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக சில கழுகுகள் வட்டமிடுகின்றன. கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

அதேசமயம், அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா. இந்த சூழலில், கிஷோரின் நெருங்கிய நண்பரும் கட்சி ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் அப்பதவிக்கு குறி வைக்கிறார். ஷ்ரேயா ரெட்டி மீது இருக்கும் நட்பால், ஷ்ரேயா சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் கிஷோர். அதேசமயம், ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்கா என்ற கதாபாத்திரத்தை தேடி, சிபிஐ போலீஸ் அலைகிறது. அதுமட்டுமல்லாமல், தொடர்ச்சியாக EX.M.P.க்களையும் அந்த துர்கா கதாபாத்திரம் கொலை செய்து வருகிறது. தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரியான பரத். இந்த வழக்கானது நூல் பிடித்தவாறு செல்கிறது. இவை அனைத்தும் ஒருபுள்ளியில் வந்து இணைகிறது. அந்த புள்ளி யார் மீது வந்து நிற்கிறது.? துர்கா யார்.? கிஷோருக்கு தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா.? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.? என்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது மீதமுள்ள தலைமைச் செயலகம் கதையில்.

Advertisement

கிஷோர் மாநில முதல்வராக நடித்திருக்கிறார். அவரது தோற்றம், பேச்சில் காட்டும் நிதானமும். தனக்கு எதிராக நடக்கும் சதியை அறியும் கில்லாடியாகாவும் அதி அற்புத மான நடிப்பை வழங்கி இருக்கிறார். கிஷோரின் மகளாக ரம்யா நம்பீசன், அதேபோல் கிஷோரின் அரசியல் ஆலோசகராக ஸ்ரேயா ரெட்டி நடித்து இருக்கிறார்கள்.ஸ்ரேயா ரெட்டியை பொறுத்தவரை என்டி.ராமராவுடன் இணைந்தி ருந்த சிவபார்வதி கதாபாத்திரம் போல் சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த வேடத்தை ஸ்ரேயா ரெட்டி ஏற்று கனமான நடிப்பை வழங்கி காட்சிக்கு காட்சி சைலன்ட் கியர் போட்டு ஆட்சியில் என்ன குளறுபடியை ஏற்படுத்து வாரோ என்ற எதிர்பார்ப்பை சீனுக்கு சீன் அதிகரிக்கிறார். கிஷோரின் மகளாக வரும் ரம்யா நம்பீசன் எப்படியாவது தந்தையின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் பாசாங்கு வேலைகளில் சகுனித்தனம் தெறிக்கிறது. நார்த் இண்டியன் சி.பி.சி.ஐ.டி ஆபிசராக வரும் ஆதித்யா மேனனின் விசாரணையில் இருக்கும் ஸ்டைல் அந்த தோரணை நம்ம தமிழ்நாடு போலீஸ் ஆபிசராக வரும் பரத்திடம் காணப்படவில்லை! இத்தொடரில் பரத்தின் நடிப்பு கொஞ்சம் கூட எடுபடவில்லை என்பதுதான் சோகம்.

ஜிப்ரனின் இசையும், வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் கேமராவும் தொடருக்கு வலு சேர்க்கிறது.

இது மொத்தம் எட்டு எபிசோடுகளாக உருவாகி இருக்கிறது. நிகழ்கால அரசியலை பேசுவதால் காட்சிகள் போவதே தெரியாமல் முழு எபிசோடுகளையும் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது என்றாலும் சில காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாம் என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. அத்துடன் ஸ்ரேயா ரெட்டியின் கதை, பரத்தின் விசாரணை, முதல்வரின் கதை, முதல்வர் பிள்ளைகளின் கதை, என ஒவ்வொரு கதைக்கும் பின்னால் இருக்கும் கிளைக் கதைகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி, சில பல சீன்களுக்கு லாஜிக் யோசித்து இருந்தால் மிக சிறப்பான சீரிஸ் கிடைத்திருக்கும்.

வழக்கமான குறைப்பாடுகள் இருந்தாலும் காணத் தகுந்த வெப் சீரீஸ் பட்டியலில் இடம் பிடித்து விட்டதென்னவோ நிஜம்

Tags :
Advertisement