பத்து நொடி சாதனைகள்!
ஒலிம்பிக் நூறு மீட்டர் ஓட்டத்தில் பத்து நொடிகளுக்குக் கீழ் ஓடுவது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று நம்பப்பட்டது. சில விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அது உண்மைதான் என்று கூடச் சொன்னார்கள். பிறகு முதல் முறையாக 1968ம் ஆண்டு ஜிம் ஹைன்ஸ் என்பவரால் அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது (9.95). உலகமே ஆச்சரியப்பட்டது. பிறகு ஒவ்வொரு போட்டியிலும் இது நிகழ்ந்தது. உசைன் போல்ட் 9.58 நொடிகளில் செய்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த 2024 ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருமே பத்து நொடிகளில் அந்த தூரத்தைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் மனிதனால் முடியவே முடியாதென்று நினைத்த ஒன்று இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறியிருக்கிறது. பத்து விநாடிகளுக்குள் ஓடாதவர்கள் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச் சுற்றுக்கே போக முடியாத நிலை வந்திருக்கிறது. இது நம் தனிப்பட்ட உடற்பயிற்சிகளுக்கும் பொருந்தும்.
உங்களால் செய்யவே முடியாதென்று நீங்கள் நினைத்திருந்த ஒன்றைச் செய்ய உடலைத் தயார் செய்ய முடியும். சில குறிப்புகள்:
1. அவரவர் அளவிலான சாதனையைத் தேர்வு செய்வது முக்கியம். பத்து விநாடிகளில் நூறு மீட்டர் என்பது உங்களுக்கான சாதனை இலக்கு அல்ல. உங்கள் இப்போதைய நிலையிலிருந்து பத்து சதவீதம் நீங்கள் முன்னேறினாலே போதுமானது. அது எளிதாகவும் இருக்கும், வலி குறைவான பயணமாகவும் இருக்கும். சிறிய வெற்றிகளை உறுதி செய்யுங்கள்.
2. அது முடியும் என்று நீங்கள் முழுமையாக நம்பவேண்டும். உள்ளத்தனைய உடல்.
3. உங்கள் வயது, உடல் ஆரோக்கியம், வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒத்திருந்து இதே போல சாதித்த ஒருவர் எப்படி இதை சாதித்தார் என்று பார்க்கலாம். படிக்கலாம். அவரைப் பின்பற்றலாம்.
4. தொடர்ந்த பயிற்சி அவசியம். ஒரே நாளில் பத்து கிலோமீட்டர் ஓடுவதை விட ஒவ்வொரு நாளும் நான்கு கிலோ மீட்டர் ஓடுவது அதிக பயன் தரும். சும்மாவாவது காலணியை அணிந்து கொண்டு கிளம்பி விடுங்கள்.
5. உங்களைச் சுற்றி இதே போன்று சாதித்த அல்லது சாதிக்க நினைக்கும் மனிதர்களை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக சிறுகச் சிறுக மாறுவீர்கள்.
அத்தனை முயற்சி செய்தும் இலக்கை எட்ட முடியாமல் போகலாம். ஆனால் அப்போது ஒரு நொடி திரும்பிப் பாருங்கள். நின்ற இடத்திலிருந்து பல மடங்கு முன்னேறி வந்திருப்பீர்கள். சேரும் இடம் முன் பின்னாக இருக்கலாம். ஆனால் இந்தப் பயணம் உங்களுக்குத் தரும் பலன் அதை விடப் பெரிதாக இருக்கும்.