காஸாவில் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு!
உலக நாடுகள் கோரிக்கையைச் சட்டை செய்யாமல் தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மத்தியஸ்தம் செய்து வரும் கத்தார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை ஹமாஸ் படையினரும் உறுதி செய்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படையினர் கடந்த மாதம் 7ம் தேதி நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 240 பேர் பணயக் கைதிகளாக பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 7 வாரங்களாக பாலஸ்தீனத்தின் வடக்கு காசா மீது இஸ்ரேல் ராணுவம் தரைவழி மற்றும் வான்வழி ஏவுகணை, டிரோன், வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வந்தது. இதில் 13,300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளின் முயற்சியால், 48 நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேல்-ஹமாஸ் படை 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்பு கொண்டன. இதன்படி, சிறைபிடித்துள்ள 240 பணயக் கைதிகளில் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் படை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இரு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் முதலில் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, கடந்த வெள்ளிக்கிழமை 14 இஸ்ரேல், 10 தாய்லாந்து மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டினர் என மொத்தம் 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேலும் சிறையில் வைத்திருந்த 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது.
2வது கட்டமாக சனிக்கிழமை 13 இஸ்ரேல், 4 தாய்லாந்து உள்பட 17 பேரும், 3வது கட்டமாக நேற்று முன்தினம் 14 இஸ்ரேல், 3 தாய்லாந்து என 17 பேர் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலும் 2வது மற்றும் 3வது கட்டங்களில் தலா 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கடைசி நாளான நேற்றுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா அல்லது நீட்டிக்கப்படுமா என்று உலக நாடுகள் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளன. ஒவ்வொரு 10 பணயக்கைதிகள் கூடுதலாக விடுவிக்கப்படும் நிலையில், போர் நிறுத்தம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தின் 4வது நாளான நேற்று, இன்னும் 2 முதல் 4 நாட்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் படை விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் பல பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வடக்கு காஸாவில் இருந்து தெற்கு காஸாவிற்கு புலம் பெயர்ந்துள்ள பாலஸ்தீனர்கள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பிறகு மீண்டும் போர் தொடங்குமே என்று அச்சம், கவலை தெரிவித்தனர்.
சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், “வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலைமையில் நியூயார்க் நகரில் நாளை நடக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காசா போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார். ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சபாடி, “காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவும் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும் மத்திய தரைக்கடல் நாடுகளின் அதிகாரிகள் கூட்டம் உதவும் என்று நம்பிக்கை இருக்கிறது,” என்று கூறினார்.
இதற்கிடையே, கத்தார் வெளியுறவுத்துறையின் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘மேலும் 2 நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
அதே சமயம் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்ட 3 பேருடன் சேர்த்து, இதுவரை 17 தாய்லாந்து நாட்டினர் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 15 பேர் பணயக் கைதிகளாக பிடியில் உள்ளனர்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது