For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தாந்தியா தோபே...!

09:28 AM Apr 18, 2024 IST | admin
தாந்தியா தோபே
Advertisement

ம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு.

Advertisement

ஆனால் நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் நிஜமாகவே இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய மராட்டிய சிங்கம் மாவீரன் தாந்தியா தோபே....! வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் நடைபெற்றது என்றார்களே, அது சிப்பாய்க் கலகம் அல்ல; முதல் இந்திய விடுதலைப் போர். அந்தக் களத்தில் ஜான்சி ராணிக்கும், நானா சாகேப்புக்கும் சேனாதிபதியாகத் திகழ்ந்தவரே தாந்தியா தோபே ..!

Advertisement

அவர் மறைந்து வாழ்ந்த நேரத்தில் குவாலியரைச் சேர்ந்த சர்தார் மான்சிங் என்பவனிடம் சென்று தான் உடல் சோர்ந்திருப்பதால் சில நாட்கள் அவருடன் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதாகச் சொன்னார் தாந்தியா. அவரும் சம்மதித்து தங்க வைத்துக் கொண்டார். அதற்குள் இந்த செய்தியை அறிந்த பிரிட்டிஷார் எப்படியோ மான்சிங்கை மனம் மாறவைத்து விட்டனர். தாந்தியா தோபே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம், மான்சிங் பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்து அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்தான். துரோகியின் துரோகச் செயல் வெற்றி பெற்றது.

1859-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தாந்தியா தோபே கைது செய்யப்பட்டார். வழக்கம் போல் விசாரணை எனும் நாடகத்தை நடத்தி அவருக்குத் தூக்கு தண்டனை விதித்தனர்...

தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஒரு அறைகூவல் விடுத்தார். "அடிமைச்சங்கிலிகளில் இருந்து நான் விடுதலை பெற வேண்டும். பீரங்கியின் வாயில் தெறிக்கும் குண்டில் என் தலை சிதற வேண்டும்; அல்லது தூக்குக் கயிற்றில் என் கழுத்து முறிய வேண்டும்" என்றார்.

தூக்கில் இடுதவற்கு முன்பு, அந்தக் கயிறைத் தானே கழுத்தில் எடுத்து மாட்டிக்கொண்டு, நின்றுகொண்டு இருந்த நாற்காலியை தம் காலால் எட்டி உதைத்தார். அவரது உயிர் அற்ற உடல், அந்த நாள் முழுவதும் தொங்கிக் கொண்டு இருந்தது. அங்கே இருந்த இராணுவ வீரர்கள், ஆங்கிலத் தளபதிக்குத் தெரியாமல் சல்யூட் செய்தார்கள். பொதுமக்கள் அவர் உடலில் இருந்த தலைமுடியின் ஒவ்வொரு மயிரையும் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய், பொக்கிசமாகப் பாதுகாத்தார்கள்.

அதே சமயம் தாந்தியா தோபேயின் குடும்பத்தார், இன்று உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், தம் முன்னோர் தாந்தியா பற்றிய உண்மையை வெளியிடும் முயற்சியில் ஒன்றிணைந்து செயல்பட்டு, வெற்றியும் கண்டுள்ளனர்.தாந்தியா தோபே குடும்பத்தைச் சேர்ந்த பரக் தோபே, “ஆபரேஷன் ரெட் லோட்டஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், “தாந்தியா பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்படவில்லை; 1859ல் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார், அதை நேரில் பார்த்த சாட்சியும் உண்டு’ என்று ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

இது குறித்து பரக் தோபே கூறுகையில், ‘பிரிட்டிஷாரின் வரலாறு எழுதும் முறையைப் பின்பற்றி, கொடுங்கோலன், ஜமீன்தார், முதியவர், நயவஞ்சகமானவர், வீணானவர், எரிச்சல் ஊட்டுபவர், இழிவானவர், மோசமான மனநிலை கொண்டவர் என்றெல்லாம் நம் பாரதத் தலைவர்களைப் பற்றியும் பாரத வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

இந்தப் புரட்சி, காரல் மார்க்சின் கம்யூனிசக் கொள்கைக்கேற்ப, மக்கள் புரட்சியாகவும், மதக் கலவரமாகவும் திரிக்கப்பட்டுள்ளது. 1857 புரட்சி பற்றி நம் பள்ளிகளில் உள்ள வரலாறு ஒரு மோசமான முன்னுதாரணம். தாந்தியா தோபே ஒரு நாயகனாகக் காட்டப்பட்டாலும், அவரது வரலாறு அதற்குரிய சான்றுகளுடன் பாடத்தில் இல்லை. அவர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படும் மாதத்துக்கு முன்பே, அதாவது, 1859, ஜனவரி 1ல், சிப்பா பரோட் என்ற இடத்தில் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்பதுதான் உண்மை. அவர் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவர் தான், இதை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். ஆனால், இன்று வரை தாந்தியா தோபே தூக்கிலிடப்பட்டார் என்பதைத் தான், நம் குழந்தைகளும் படித்து வருகின்றனர்’

எது எப்படியோ இத்தகைய வீரத்திருமகன் உயிர்நீத்த நாள்தான் இந்த ஏப்ரல் 18.

Tags :
Advertisement