பாராளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல் !.
தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி தமிழகத்தில் மது விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் மது விற்பனையாகி வருகிறது. மதுவிற்பனை 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதம் பீர் வகைகள் ரூ.511 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,313 கோடிக்கும் விற்பனையானது. மார்ச் மாதத்தில் பீர் வகைகள் ரூ.621 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,854 கோடி என ஒரே மாதத்தில் ரூ.4,475 கோடிக்கு விற்பனையானது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.8,299 கோடிக்கு டாஸ்மாக்கில் விற்பனை நடந்துள்ளது. ஒருபக்கம் கோடை வெயில் வறுத்தெடுப்பதாலும், மற்றொரு பக்கம் தேர்தல் பணிகளின் அழுத்தத்தாலும் மது விற்பனை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனையாவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாத மது விற்பனை ரூ.5 ஆயிரம் கோடியை எட்டி புதிய உச்சத்தை அடையுமென டாஸ்மாக் பணியாளர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்.19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி வாக்குபதிவு நாளன்றும், அதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் 17, 18, மற்றும் 19ம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.இதே போன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஜூன் 4ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. அதனால் அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.