தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆர்!

07:11 AM May 19, 2024 IST | admin
Advertisement

மிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின், முன்னாள் அரசியல் தலைவர்களின் அவரது மரணம் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், பதாகைகள், சுவரொட்டிகள், இலவச பொது உணவு மற்றும் நினைவேந்தல் கூட்டங்கள் என்று எப்போதும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாநில முதல்வராக பதவியேற்ற முதல் பெண் ஜானகி ராமச்சந்திரன் அல்லது வி.என்.ஜானகி மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

Advertisement

1924ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி, கேரளாவின் வைக்கம் நகரில் பிறந்த வைக்கம் நாராயணி ஜானகி கலைகள் சூழ வளர்ந்தார். இவரது மாமா பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாபநாசம் சிவன். 1936 ஆம் ஆண்டில், அவரது தந்தை, இசையமைப்பாளர் ராஜகோபால் ஐயர் , மெட்ராஸ் மெயில் திரைப்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார் , அவர்கள் விரைவில் மெட்ராஸுக்கு (இப்போது சென்னை) குடிபெயர்ந்தனர்.

Advertisement

ஜானகி இசை மற்றும் பாரம்பரிய நடனம் ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றவர்,குடும்ப நண்பரான பிரபல இயக்குநர் கே.சுப்ரமணியம் நடத்தி வந்த 'நடன கலா சேவா' என்னும் நாட்டியக் குழுவில் இணைந்து நடித்தார். இந்தியா முழுவதும் பல நகரங்களில் இந்தக் குழு நாட்டிய நாடகங்களை நடத்தியது. நடன கலா சேவா குழுவின் நாடகங்களில் மிகுந்த வரவேற்பு பெற்ற நாடகம் 'வள்ளி திருமணம்'. இதில் முருகன் வேடத்தில் ஜானகி நடித்தார். இயக்குநர் சுப்ரமணியத்தின் துணைவியார் எஸ்.டி சுப்புலட்சுமி. வள்ளியாக நடித்தார். ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஜானகிக்கு கிடைத்தது.

மேலும் பல படங்களில் நடித்தார்,கே. சுப்ரமணியத்தின் 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்', 'இன்பசாகரன்' என்ற கதையை திரைப்படமாக தயாரித்தது. படத்தை இயக்கிய கே.சுப்பிரமணியம் வி.என்.ஜானகியை இதில் அறிமுகப்படுத்தினார். ஜானகிக்கு அப்போது வயது 13. துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்தின் தயாரிப்பின்போது, ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்து  படத்தின் மொத்த நெகடிவ்களும் எரிந்து சாம்பலாயின. அதைத் தொடர்ந்து 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் நடன மாது கதாபாத்திரத்தில் நடித்தார் ஜானகி.

தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம் , பங்கஜவல்லி என படவாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. ஆனால் மேற்சொன்ன திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களோ அல்லது நடன நடிகையாகவோதான் ஜானகி நடித்தார்.  'சகடயோகம்' என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலில் கதையின் நாயகியாக முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன. நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின், அவரது 18-வது படத்தில்தான் பிரதான கதாநாயகி வேடம் ஜானகிக்கு கிடைத்தது.

அவற்றில் பல படங்களில் அவர் தனது வருங்கால கணவர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் அல்லது எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பிட்டு சொல்வதானால் 1948-ல் வெளிவந்த 'ராஜ முக்தி' திரைப்படம் வி.என் ஜானகிக்கு பெரும்புகழ் தேடிக்கொடுத்ததோடு, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தத்தை ஏற்படுத்தியது. அந்தப்படத்தில் துணை நடிகராக நடித்த எம்.ஜி.ஆருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. சாதாரணமான நட்பு, அதே ஆண்டில் வெளியான  மோகினி படத்தில் இன்னும் நெருக்கமானது. பிரபல கதாநாயகியான ஜானகி புகழ்பெறாத சாதாரண துணை நடிகர் என்ற நிலையில் இருந்த எம்.ஜி.ஆரை விரும்ப ஆரம்பித்தார். துணை நடிகரான எம்.ஜி.ஆருக்கு, அந்தக் காதலை ஏற்பதில் சங்கடங்கள் இருந்தன.இடையில் 'லைலா மஜ்னு', 'வேலைக்காரி' ஆகிய படங்கள் வெளியாகின. இதற்கிடையில், திரைத்துறையில் எம்.ஜி.ஆர் கதாநாயக நடிகராக உயர்ந்திருந்தார். 1950-ல் 'மருதநாட்டு இளவரசி' திரைப்படத்தில் ஜானகிக்கு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. இருவருக்குள்ளும் இருந்த சங்கடங்கள் நீங்கி நெருங்கிய நண்பர்களாகினர். இருவரும் சேர்ந்து நடித்த கடைசிப்படம் 'நாம்'. அதன் பின்னர், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட  ஜானகி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணையானார். எம்.ஜி.ஆர்- ஜானகி திருமணத்துக்கு சாட்சி கையெழுத்திட்டவர் படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். 1962-ல் மனைவி சதானந்தவதியின் மரணத்துக்குப் பின், ராமாவரம் தோட்டத்துக்கு ஜானகியுடன் குடிபுகுந்தார் எம்ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்வில் ஜானகிக்கு பெரும்பங்கு உண்டு. ஜானகியை ஜானு என நெஞ்சுருகி அழைப்பார் எம்.ஜி.ஆர். சமையலில் தேர்ந்தவரான ஜானகியின் கைப்பக்குவத்துக்கு எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவரானாலும் கணவரின் உணவு விருப்பத்துக்காக பின்னாளில் தானும் மாறினார். அசைவப் பிரியரான எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான அசைவ உணவுகளை ஜானகியே சமைப்பார். சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் நிச்சயம் ஓட்டல் சாப்பாட்டை தவிர்த்து விட்டு பகல் 1 மணிக்கு எங்கிருந்தாலும் ராமாவரம் இல்லத்துக்கு வந்து விடுவார் எம்.ஜி.ஆர். அத்தனை கைப்பக்குவம் ஜானகிக்கு.

முதல்வரானபின் எம்.ஜி.ஆர் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அதை விரும்பியதில்லை. படப்பிடிப்புக்காக வெளிநாடு பயணங்களின்போது, மனைவி ஜானகியையும் உடன் அழைத்துச் செல்வார் எம்.ஜி.ஆர். சில நாட்களுக்குக் கூட மனைவியைப் பிரிந்து அவரால் இருக்க முடியாது. அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்கள்.  தனது திருமண நாளன்று எங்கும் செல்லாமல் மனைவி ஜானகி மற்றும் தானும் வீட்டில் உள்ள அத்தனை நகைகளையும் அணிந்து கொண்டு எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பார் எம்.ஜி.ஆர். அன்றைய தினம் தங்களின் ஆரம்ப கால சினிமா நாட்களை அசைபோடுவார்கள் இருவரும். அன்றைய தினம் உறவினர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். வெளியாட்களுக்கு அன்று அனுமதி கிடையாது. 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் எதிர்பாராதவிதமாக நோய்வாய்பட்டபோது, சத்தியவானை சாவித்திரி மீட்டது போன்ற ஒரு முயற்சியை ஜானகி மேற்கொண்டார். முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையிலும் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஒரு தாயைப் போல் எம்.ஜி.ஆரை ஜானகி கவனித்துக் கொண்டவிதம் மருத்துவர்களையே ஆச்சர்யப்பட வைத்தது. எம்.ஜி.ஆர் உடல்நிலை சீராகி திரும்பி வந்ததற்கு ஜானகி அம்மையார் ஒரு முக்கியக் காரணம்.

1987 டிசம்பர் 24-ல், தமிழர்களை நிலைகுலைய வைத்த எம்.ஜி.ஆரின் மரணம் கட்சியையும் ஒரு கலக்கத்துக்கு உள்ளாக்கியது. கவர்னர் குரானாவின் அழைப்பை ஏற்று, முதல்வராக பதவி ஏற்றார் ஜானகி அம்மையார். ஆனால் அற்பாயுசில் முடிந்தது அந்த ஆட்சி. தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்றார் ஜானகி அம்மையார். முதல்வர் பொறுப்பேற்றிருந்த, அந்த 24 நாட்களில் தமிழகத்தில் கல்வி தந்தைகள் பலர் உருவானார்கள்

அதே சமயம் கட்சியில் தனியிடம் பெற்று இருந்த ஜெயலலிதா தன் செல்வாக்கை பயன்படுத்த, கட்சி இரண்டாக உடைந்தது. ஜா அணி , ஜெ அணி என்று இரண்டாக பிரிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி இராமச்சந்திரன் தோற்றுப் போனார். தமிழக சரித்திரத்தில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெயரைப் பொறித்தவர், 24 நாட்களுக்குள் (7-1-1988 முதல் 30 -1-1988 வரை) முதல்வர் பதவியில் இருந்து இரக்கப்பட்டார். அதன் பின், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டதும், பின் வந்த தேர்தலில் கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனதும் தனிக்கதை.

ஜானகி இராமச்சந்திரன் கணவனின் நிழலில் வாழ்ந்தவர். அரசியலின் தந்திரங்களை அறியாதவர். கணவர் மறைந்த துயரில் இருந்து வெளி வர இயலாமல் மேடைகளில் அவர் கண்ணீர் பெருக்கிட, ‘கண்ணீர் அரசியல்’ என்று மற்றவர் பகடி செய்ததும் அவரை மேலும் வலுவிழக்கச் செய்தது. ஆனால், கணவர் வழி நின்று, வள்ளல் தன்மையுடன் எம்ஜிஆர் அவர்களின் இறுதி உயில்படி சொத்துக்களை தர்ம காரியங்களுக்கு அள்ளித் தந்தார். சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள சொத்தினை, அ.தி.மு.க கட்சி அலுவலகமாக்க தந்தார். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை ஏழைக் குழந்தைகளும், ஊனமுற்றோரும் பயன் பெறும்படி தானமாக தந்தவர், எம்.ஜி.ஆர் உருவாக்கிய காது கேளாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக்காலத்தை கழித்த ஜானகி அம்மையார், 1996 ஆம் ஆண்டு இதே மே 19இல் தனது 73-வது வயதில் மறைந்தார்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
chief ministerFilm actressFirst womanJanaki MGRpoliticianTamil NaduV. N. Janaki Ramachandranஜானகிஜானகி ராமச்சந்திரன்
Advertisement
Next Article