சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை- கவர்னர் நிராகரிப்பு!
கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார். இவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதை தொடர்ந்து, தலைவராக சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் 8 பேரை புதிதாக நியமித்து, கவர்னரின் ஒப்புதலுக்கு பரிந்துரைத்தது. ஆனால், கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 8 உறுப்பினர் தொடர்பான கோப்புகள் நிலுவையில் இருந்தன.டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கவர்னர் அரசியலமைப்பு சட்டப்படி நியமித்து வரும் நிலையில், தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட கோப்பினை சமீபத்தில் கவர்னர் அரசுக்கே திருப்பியனுப்பினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கவர்னர் அனுப்பிய கோப்பில், சில சந்தேகங்களை எழுப்பி, அதற்கான விளக்கங்களையும் அவர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இப்பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்கள், பரிந்துரைக்கப்பட்டவர்களில் இறுதி செய்யப்பட்டது எப்படி? நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது போன்ற விவரங்களை கோரியுள்ளளார்
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டதில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட தகவல்களுடன் தமிழக அரசின் சார்பில் கோப்புகள் மீண்டும் அனுப்பப்பட்டது. , அதன் பின்னரும் சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க கவர்னர் ரவி மறுத்துவிட்டார்.
சைலேந்திரபாபு மற்றும் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களை எவ்வாறு தேர்வு செய்தனர் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒரு ஆணையத்திற்கு தலைவரை தேர்வு செய்வது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது என்றும் எனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சட்டத்திற்கு உட்பட்டு புதிய பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று கவர்னர் அறிவுறுத்தி இருக்கிறார்.
கவர்னர் ரவியின் இந்த செயல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.