‘திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானதா?`
கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தாம்; சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவர்தாம். ஆனால், தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான் கால்டுவெல் கதை.
ஆனால் திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும் அவர் கிறிஸ்வத மதமாற்றம் செய்ய வந்தவர் என்றும் அய்யா வைகுண்ட சுவாமி அவதார தின விழாவில் பேசும்போது ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று நுாலை வெளியிட்டு பேசிய போது:அய்யா வைகுண்ட நாராயணரின் அவதாரம் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். சனாதன தர்மத்துக்கு ஊறு ஏற்படும்போது கடவுள் நாரயணன் அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமாக வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். ராமேசுவரம், காசி ஆகியவை நாட்டுக்கு பொதுவானவை.
கிறிஸ்தவம் ஐரோப்பாவுக்கு செல்லும் முன் இந்தியாவுக்கு வந்தது. வெளியில் இருந்து வந்த சிலர், நம் நாட்டின் சனாதன தர்மத்தின் படி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அழிக்க முயன்றனர். சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ராமர், கிருஷ்ணர், வள்ளலார், அய்யா வைகுண்ட நாராயணன் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர்.1757-ல் பெங்கால் மகாணத்தைக் கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனி, தொடக்கத்தில் வணிகத்தில் மட்டுமே ஈடுபட்டது. மொழி, கலாச்சாரம் மற்றும்பண்பாடுகளில் வேறுபட்டு இருந்தாலும், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக திகழ்ந்தது.
குறிப்பாக, மக்கள் சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இந்தஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு, இந்தியாவை அடிமைப்படுத்த பெரும் சவாலாக இருந்தது. அதற்காக, சனாதன தர்மத்தை அழிக்க பிரிட்டிஷ் அரசு தீர்மானித்தது. அமெரிக்கா, கனடா போன்றபல்வேறு நாடுகளை அடிமையாக்கியதை போல், சனாதன தர்மத்தை அழிப்பதன்மூலம், இந்தியாவை அடிமையாக்கவும் பிரிடிஷ் அரசு முடிவெடுத்தது. இந்தியாவை ஆள்வதற்கு, அதற்கு கிறிஸ்தவ மதமாற்றத்தை பிரிட்டிஷ் அரசு கொள்கையாக கொண்டது.
கடந்த 1813- ம் ஆண்டு பள்ளிபடிப்பை முடிக்காத பிரிட்டிஷ்காரர்களான கால்டுவெல், ஜி.யு. போப் ஆகியோர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. மெட்ராஸ் மகாணத்தில் மக்களை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு உட்படுத்தினர். ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தியாவில் சனாதானத்தை அழிக்கவும், கிறிஸ்தவமதத்தை பரப்பவும் 1830-ல்பிரிட்டிஷ் அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அனைத்து மக்களுக்கான சேவையை மத்திய அரசு வழங்கி வருகிறது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியா மாறும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
ஆக ‘திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது’ என்று உலக மொழிகளின் ஆய்வாளரும் மொழிப்பேரறிஞருமான ஆர்.என். இரவி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கூடவே , கால்டுவெல்லும் ஜி.யு. போப்பும் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர்கள் என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். கூடவே, இராமாயணம், மகாபாரதம் எழுதிய வால்மீகியும் வியாசரும் எந்தப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் என்பதையும் எடுத்துக் காட்டியிருந்தால், மிகவும் சிறப்புடையதாக இருந்திருக்கும். மேலும் வள்ளுவன், கம்பன், இளங்கோவடிகள் போன்றோரின் தகுதிகள் பற்றியும் அலசி ஆராய்ந்திருக்கலாம்.
1814-ல் அயர்லாந்தில் பிறந்த இராபர்ட் கால்டுவெல், சமயத்தில் “குரு” பட்டம் பெற்று, கிறிஸ்துவ சமயப் பிரசாரகராகத்தான் தமிழகம் வந்தடைந்தார். பைபிளை உள்ளூர் மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகத்தான் தமிழ் கற்றார். பின்னர், அதன் சிறப்பில் வியந்து ஆராய ஆரம்பித்தார். மிகுந்த ஆய்வுக்குப் பிறகே, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages) என்ற மொழி ஆய்வு நூலை எழுதினார்.
இதில் நமது ‘மேதகு’வாளருக்கு என்ன பிரச்னை? ‘திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் சம்பந்தமேயில்லை. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஸ்நானப்ரார்ப்தியும் இல்லை. தமிழ் தனித்துவமானது’ என்று அவர் தமது ஆய்வில் வெளிப்படுத்தியதுதான் பிரச்னை. கால்டுவெல்லும் ஜி.யு. போப்பும் மதப்பிரசாரம் செய்தது உண்மைதான். அதன்மூலம் ஈர்க்கப் பட்டுத் தங்கள் மதத்திற்கு வந்தவர்களை அணைத்து இணைத்துக் கொண்டதும் உண்மைதான். இந்தியாவில் அப்படி கிறிஸ்துவத்திற்கு மாறியவர்களின் எண்ணிக்கை, வெறும் மூன்று சதவீதத்திற்கும் கீழேதான்.
ஆனால், கைபர், போலன் கணவாய்களின் வழியாக வந்த ஆரியமும் சனாதனமும் மிகச் சிலரை மட்டும் உச்சாணிக் கொம்பில் உயர்த்தி வைத்துவிட்டு, ஏனையோரையெல்லாம் வல்லடியாகச் சூத்திரர்கள் என்று சிறுமைப் படுத்தி ஒதுக்கி வைத்திருக்கிறதே… இது பற்றியும் பேசுங்கள் மேதகுவாள்!