தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு ஷாக்: யூனிட்டுக்கு எவ்வளவு?- முழு விவரம்
தமிழ்நாடு அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை மின் கட்டணம் அதிகரித்துள்ளது.கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, வணிகம், விவசாயம், தொழிற்சாலை என 3.3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் 2.47 கோடிக்கு மேல்உள்ளது. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.மேலும் ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசின் மத்திய நிதி நிறுவனங்களும், ஆண்டுதோறும் மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன. மேலும் கட்டண உயர்வை அந்தந்த மாநில மின்சார வாரியங்கள் நிர்ணயிக்க முடியாது.
இதற்கென அமைக்கப்பட்டுள்ள தன்னாட்சி அமைப்பான மின்சார ஒழுங்கு முறை ஆணையம்தான் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என்று ஒன்றிய அரசு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். 2026-27ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மின் கட்டணம் விகிதத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நேற்று வெளியிட்டது.
இந்த புதிய மின் கட்டண உயர்வின்படி,
⚡400 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 யூனிட் 500 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், ரூ.6.15 காசுகளில் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
⚡501 முதல் 600 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.9.20 காசுகளில் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
⚡801 முதல் 1,000 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20 காசுகளில் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
⚡1000 யூனிட்டுக்கு மேல் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.11.25 காசுகளில் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 9.35 காசுகளில் இருந்து ரூ.9.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 50 யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ. 9.70 காசுகளில் இருந்து ரூ.10.15 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில், ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண், அரசு விதை பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.4.60 காசுகளில் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.8.70 காசுகளில் இருந்து ரூ.9.10 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கல்வி நிறுவனம், மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் ரூ.7.15 காசுகளில் இருந்து ரூ.7.50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.12.25 காசுகளில் இருந்து ரூ.12.85 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்