தமிழக பாஜக நிதியாளர் அமர் பிரசாத் ரெட்டி கைது!- வீடியோ
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இல்லம் அருகில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு ஜெ.சி.பி வாகன கண்ணாடியை சேதப்படுத்திய பாஜகவினர் 110 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பாஜக பைனான்சியராகக் கருதப்படும் அமர் பிரசாத் ரெட்டி இன்று கைதானது பாஜக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லம் அருகில் 50 அடி உயர கொடி கம்பம் உயர் அழுத்த மின்சார லைன் அருகே ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் பொதுமக்கள் பலர் புகார் அளித்ததன் பேரில் கொடி கம்பம் அகற்றப்பட்டது என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கொடி கம்பத்தை அகற்றும் போது பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் எச்சரித்த பின்பும் போராட்டத்தில் ஈடுபட்டதால், 91 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் என 110 பேர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். மாநகராட்சிக்கு சொந்தமான ஜெ.சி.பி வாகனத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.