இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்; தமிழ் அரசியல் கட்சிகள் ஒப்பந்தம்!
இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ),தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(பிளாட்), தமிழர் முற்போக்கு கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈபிஆர்எல்எப்), தமிழர் தேசிய மக்கள் முன்னணி(டிஎன்பிஎப்)ஆகிய கட்சிகளும், தமிழ் மக்கள் காங்கிரஸ் சங்கம் உள்ளிட்ட சில சமூக அமைப்புகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இலங்கை அதிபராக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்கேயின் பதவி காலம் வரும் நவம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது. அதில், மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்க உள்ளனர்.இந்நிலையில், யாழ்ப்பாண தந்தை செல்வா கலையரங்கில், இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், தமிழ்த் தேசியக் கட்சிகள் - தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவை,
1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இவ்வுடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" என அழைக்கப்படும்.
2. இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை. சிறிலங்காவின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.
3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விடயங்கள். பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும்.
4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள். தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும்.
5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்.
6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும். ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம் இதற்கான காணப்படுகின்றது.
8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து பயணிக்க முன்வரும்போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம் காணப்படுகின்றது.
9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர் என 9 புரிந்துணர்வுகள் அடங்கிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கையெழுத்திட்டுள்ளனர். தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.