தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா! - வீடியோ!

09:21 AM Jan 25, 2024 IST | admin
Advertisement

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Advertisement

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். ‘இறைவன் ஜோதி வடிவானவன்’ என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகை யில் வடலூரில் சத்திய ஞான சபையை ராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார் நிறுவினார். ஏழை, எளிய மக்களின் பசிப் பிணியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தர்ம சாலையில் அன்னதானம் வழங்கப் பட்டு வருகிறது. வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்ய ஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில், ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.

Advertisement

விரிவாகச் சொல்வதானால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள்.

அதாவது
1. கறுப்புத்திரை – மாயசக்தி,
2. நீலத் திரை- திரியா சக்தி,
3. சிவப்புத் திரை – இச்சாசக்தி,
4. பச்சைத்திரை- பராசக்தி,
5. பொன்திரை- ஞானசக்தி,
6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,
7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் காணலாம்.

முன்னதாக இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே 'பேருபதேசம்' என்று சொல்லப்படுகிறது.

1874ஆம் வருடம் தை மாதம் 19ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.வள்ளலார் அன்று முதல் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. வள்ளலார் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இன்று 25.1.24. காலை 6 மணி; காலை 10 மணி; மதியம் 1 மணி; இரவு 7 மணி; இரவு 10 மணி 26.1.24. காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனத்தை காணலாம். இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tags :
Ramalinga AdigalarThaiPoosamVadalooreVallalar
Advertisement
Next Article