தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்தியக் கல்விச் சூழல் குறித்து கவலைக் கொண்ட தாகூர் பிறந்த தின பகிர்வு!

07:30 AM May 07, 2024 IST | admin
Advertisement

ர்வதேச அளவில் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொடுத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள் இன்று. கவியரசர் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வங்க கவி ரவீந்தரநாத் தாகூர் ஆவார். ஆங்கிலத்தில் புலமை கொண்டவரான ரவீந்திராத் தாகூர் 1861 ஆம் வருடம் இதே மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 13 பேர். வீட்டின் கடைசிப் பிள்ளையாக பிறந்திருந்தாலும் உலகமே வியக்கும் கவிஞராக இருந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார்.

Advertisement

தன் இளம் வயது குறித்து, ``நான் சிறுவனாக இருந்தபோது எனக்குப் பிடிக்காத ஓரிடம் இருந்தது. ஆனால், அங்கேதான் தினம் தினம் சென்றேன். அங்கேதான் நாள் முழுக்க அடைந்து கிடந்தேன். அங்கிருந்துதான் என் வாழ்க்கை ஆரம்பமானது என்று ஏக்கமும் வருத்தமும் கலந்த குரலில் விவரித்திருக்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.

Advertisement

பெரிய கதவொன்று இருக்கும். இரும்புக் கதவு. நாங்கள் உள்ளே சென்றதும் சாத்திவிடுவார்கள். என்னிடமிருந்து என் உலகம் துண்டிக்கப்பட்டுவிடும். சில அடிகள் நடந்தால் இரும்புத் தண்டவாளத் துண்டு ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். எத்தனை வலுவாகக் காற்று வீசினாலும் அது சற்றும் அசைந்து கொடுக்காது. இரும்பு கோலொன்றை எடுத்து ‘டண் டண் டண்’ என்று அடிப்பார்கள்.எங்களுக்கென்று ஓர் அறை இருந்தது. அங்கே எனக்கென்று ஓரிடம். ஆசிரியர் வருவார். என்னைச் சுற்றி காற்றில் சொற்களை மிதக்கவிடுவார். அவற்றை நான் என் கைகளால் பாய்ந்து பிடிக்க முயல்வேன். ஆனால், என் விரல்களின் இடுக்குகள் வழியே அவை நழுவிச் சென்றுவிடும். அவர் வெளியேறிச் சென்றதும் இன்னொருவர் வருவார். மேலும் சொற்கள். ஒவ்வொன்றும் என்னைவிட்டு விலகி நிற்கும். ஒவ்வொன்றும் என்னை அச்சுறுத்துவது போல் பார்க்கும்.

இரும்புத் தண்டவாளம். இரும்பு இசை. இரும்புக் கதவு. இரும்புச் சொற்கள்.ஒவ்வொரு குழந்தைக்கும் இப்படியோர் உலகம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா? ஒரு குழந்தை பிறந்ததும் தூக்கி எடுத்துவந்து அங்கே அமர்த்திவிடுவார்களா? அங்கிருந்துதான் அந்தக் குழந்தை தன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமா? அங்கிருந்துதான் அந்தக் குழந்தை உலகைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? ஒரே ஆறுதல் என் வகுப்பறையில் அமைந்திருந்த ஒரு சிறிய ஜன்னல். அதன் வழியே மரக்கிளையின் ஒரு பகுதி மட்டும் தெரியும். அந்தக் கிளையில் சில இலைகள் ஓயாமல் சலசலத்துக்கொண்டிருக்கும். ஒவ்வோர் இலையின் நடனத்தையும் தனித் தனியே மணிக்கணக்கில் கவனிப்பேன். மணிக்கணக்கில் கனவுகளில் மூழ்கிக் கிடப்பேன். அதில் ஒரு கனவு எனக்குப் பிடித்த பள்ளி பற்றியது.`` என்று சொல்லி இருபபர்

பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். கல்வியில் எதிர்பார்த்த சுதந்திர வேட்கையை மற்றவர்களுக்கும் கொடுக்க முயற்சி எடுத்த தாகூர் திண்ணைப் பள்ளிகளும், உருதுப் பள்ளிகளும் ஒன்றிரண்டு ஆங்கில வழிப் பள்ளிகளும் மட்டுமே இருந்த வங்காளத்தில் `குருகுல கல்வி' என்பதே அதற்கு சரியானதாக இருக்கும் என்று எண்ணினார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878-ல் இங்கிலாந்து அனுப்பிவைக்கப்பட்ட தாகூர் அங்குள்ள கல்விமுறை குறித்து நிறைய அறிந்துகொண்டார். குறிப்பாக, அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுத்தரப்படுகிறது? எது போன்ற பாடமுறையைக் கையாளுகின்றனர் என்பதை நேரடியாக அறிந்துகொண்டார். இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்கள் புகழ்பெறுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் `நாளந்தா பல்கலைக்கழகம்' புகழ்பெற்று விளங்கியிருக்கிறது. இந்த நிலையில், கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தாமல், மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்த முடியாது எனத் தாகூர் நம்பினார்.

அதன்படி, இயற்கைச் சூழலில் அமையப் பெற்ற பள்ளி வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க வருவதை மகிழ்ச்சியான செயலாகக் கருத வேண்டும். தண்டனை இல்லாத, எளிய, தனித்துவமான கற்றல் முறையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு `சாந்தி நிகேதன்' என்ற பள்ளியைக் கொண்டு வந்தார் .நான்கு சுவர்களுக்குள் மாணவர்​களை அடைத்துப் பாடம் கற்பிப்பதை​விட, திறந்த வெளியில் கற்றுத்தருவது மாணவர்களுக்கு இனிமையான அனுபவமாக இருக்கும் என்று தாகூர் கருதினார். மாணவனுக்கு ஆண்டுக்கு ஒரு பரீட்சை வைத்து அவனது திறமையை மதிப்பிடுவதைவிட, அவனது ஆளுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து, முடிவில் அவனை அறிவில் சிறந்தவனாக வெளியே அனுப்பி வைப்பதே `சாந்தி நிகேத'னில் இருந்த கல்விமுறை. உலகின் கல்வியாளர்கள் இன்றும் இப்பள்ளியை பாராட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே.

16வது வயதில், ‘பானு’ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார். இவர் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மெட்டும் அமைத்துள்ளார். அவற்றில் ஒரு பாடலான, ‘ஜன கண மன’ இந்திய தேசிய கீதமாகவும் மற்றொன்று வங்க தேசத்தின், 'அமர் சோனார் பங்களா' என்ற தேசிய கீதமாகவும் மாறியது. அதேசமயம், இலங்கையின் தேசிய கீதத்திலும் இவரது தாக்கம் தெரியும். 22 வயதில் மிருணாளினி தேவியை இவர் மணந்தார். 20 ஆண்டு இல்லற வாழ்வில் 5 குழந்தைகள் பிறந்தன. 1902ல் இவரது மனைவியின் மரணம் தாகூரை பெரிதும் பாதித்தது. அந்த சோகத்தில் அவர் இயற்றிய பாடல்கள்தான், ‘கனி திரட்டல்’ மற்றும் ‘ஸ்மரன்’ போன்றவை.

சுதந்திர போராட்ட காலத்தில் தேசிய எழுச்சி பாடலாக விளங்கிய பங்கிம் சந்திரர் இயற்றிய, ‘வந்தே மாதரம்’ பாடல் கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் தாகூர் பாடியதன் பின்தான் பிரபலமடைந்தது. ‘ரவீந்திர சங்கீத்’ இவரது இசைத்தட்டுகள் பெரிதும் பிரபலமடைந்தன. இவர் சுவாமி விவேகானந்தருடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். விவேகானந்தர் தனது, ‘சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைத் தொகுத்துள்ளார்.

60 வயதில் ஓவியம் வரையத் தொடங்கினார். கவிதைகள், உரைநடைகள் அடங்கிய இவரது படைப்புகள் மொத்தம் பதினைந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. உயிரியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 350 தலைப்புகள், 80 படைப்புகள் கவிதை, நாடகம், உரைநடை இலக்கியம், நாவல், சிறுகதைகள், சுயசரிதை விமர்சனங்கள், கட்டுரைகள் என்று நாலரை லட்சம் வரிகளுக்கு மேல் இருக்கும் அவர் எழுதியது என்கிறது ஓர் ஆய்வு. அவரது நாடகங்களுக்கு அவரே பாடல்களை எழுதியுள்ளார். சில நாடகங்களில் அவரே நடித்தும் இருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது, ‘இருட்டறை அரசன்’ மற்றும் ‘டாக்டர்’ எனும் நாடகங்கள்.

தாகூர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவரது பல படைப்புகள் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. தான் எழுதியவற்றை பிழை திருத்தம் செய்யும்போது வார்த்தைகளை அடிக்க நேர்ந்தால் அந்த வார்த்தையை பூ அல்லது இலை போன்ற சித்திரமாக ஆக்கிவிடும் பழக்கம் அவரிடம் இருந்தது.

மகாத்மா காந்தி இவரை குருதேவர் என்றே குறிப்பிடுவது வழக்கம். காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலாக அழைத்தது இவர்தான். சிறந்த சமூக சீர்திருத்தவாதி. இவர் முரண்படுகிறபோது தான் மதிக்கின்ற மகாத்மா காந்தி ஆகட்டும், தன்னை மதித்து அழைத்த அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளாக ட்டும் தனக்கு சரி என்று தோன்றுவதை பேசும் துணிச்சல் மிக்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். 1941ல் ஏப்ரலில் தனது 80வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட சில மாதங்களில் 1941ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தாகூர் காலமானார்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
BhanusimhacomposerdramatisteducationistessayistgrammarianlinguistNovelistpainterphilosopherplaywrightpoetrabindranath tagoresocial reformerstory writerwriter
Advertisement
Next Article