T20 உலகக் கோப்பை: இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா!
2024ஆம் ஆண்டை நம் இந்திய அணி வெற்றியோடு தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்தது. தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என இந்தியா அதன் வெற்றி பயணத்தை தொடர தயாராக உள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடன் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என தெரிகிறது. ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் வழக்கமாக நடைபெறும். அதன்படி, ஐபிஎல் தொடர் நிறைவடைந்த உடனேயே அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் மீதுதான் அனைவரும் கவனமும் தற்போது குவிந்துள்ளது எனலாம். இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக ஆப்கானிஸ்தான் உடன் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்தான் விளையாட உள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த வாரம் 11ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்று மீண்டும் டி20 தொடருக்கு திரும்பியுள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நீண்ட நாள்களாக இந்தியாவுக்காக எந்த டி20 சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இந்த இரண்டு அனுபவமிக்க வீரர்களும் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினர். அதன்பிறகு டி20 போட்டியில் இருவரும் விளையாடவில்லை.
இதனால் 14 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு ரோஹித் சர்மா , விராட் கோலி டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க கொடுக்கவேண்டும் என்பதால் டி20 அணியில் இடம் இருவரும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20தொடரின் முதல் போட்டியில் ஜனவரி 11-ம் தேதி மொஹாலியில் விளையாடுகிறது. இரண்டாவது போட்டி இந்தூரிலும், கடைசி டி20 போட்டி பெங்களூருவில் ஜனவரி 17ம் தேதி நடக்கிறது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இதுவரை 5 டி20 சர்வதேச போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. இதில், இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் விளையாட முடியவில்லை. ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன் இந்திய அணிக்கு இதுவே கடைசி டி20 தொடராக இருக்கும். இதனால் இந்தியாவுக்கு இந்த டி20 தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன்பிறகு இந்தியன் பிரீமியர் (ஐபிஎல் ) தொடர் மட்டுமே உள்ளது. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் அடிப்படையில் டி20 உலகக்கோப்பை அணிக்காக வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் போது அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். மேலும் அவர் இதுவரை காயத்திலிருந்து மீள முடியவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறவில்லை. விக்கெட் கீப்பர் இஷான் கிஷானின் பெயரும் அணியில் இடம்பெறவில்லை. சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஆப்கானிஸ்தான் டி20 அணியில் விக்கெட் கீப்பர்களாக உள்ளனர்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி. பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.