டி20;இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!
டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா.பலத்தை நம்பாமல் சூழலை நம்பிய இடத்திலே இங்கிலாந்து விழுந்துவிட்டதுதான் ஹைலைட்.
இன்று (ஜூன் 27) நடைபெற்ற அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கயானாவில் உள்ள ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் மழை வந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி தொடங்குவதாக இருந்த நேரத்தை தாண்டி சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது. அதன்படி டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதை அடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 9 ரன்னில் போல்ட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த ரிஷப் பண்ட் 6 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்புடன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். - Advertisement - ரோஹித் மாஸ்டர்ஸ்ட்ரோக்: அவருடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் 14 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றினார். அதில் கேப்டன் ரோகித் சர்மா 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 57 (39) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அசத்திய சூரியகுமாரும் அரை சதத்தை நழுவ விட்டு 47 (36) ரன்னில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 23 (13) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 17 (9) அக்சர் படேல் 10 (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 171/7 ரன்கள் குவித்தது.
இதை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இங்கிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தொடங்கினார்கள். இதில் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் அக்ஸர் படேல் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து பிலிப் சால்ட் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜானி பயர்ஸ்டவ் அக்ஸர் படேல் பந்தில் விக்கெட்டை இழக்க 35 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. அடுத்து வந்த மொயின் அலி மற்றும் சாம் கரணும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க 49 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. ஓரளவிற்கு இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து கொண்டிருந்த ஹாரி ப்ரூக் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளையும் 16. 3 ஒவர்களில் இழந்தது இங்கிலாந்து அணி.
அதனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பிய இந்தியா ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்து அணியை இந்தியா பழிதீர்த்தது. அத்துடன் 15 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வென்ற அணி என்ற சாதனையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் கடைசியாக 2009 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான செமி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்து இலங்கை வெற்றி பெற்றிருந்தது.