தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டி20 : ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!.

09:38 AM Jun 25, 2024 IST | admin
Advertisement

வேர்ல்ட் கப் டி20 சூப்பர் 8 சுற்றில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Advertisement

உலகக்கோப்பை டி20 தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குரூப் 2-ல் போட்டிகள் நிறைவு பெற்று அதிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.குரூப் 1 இல் வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லூசியாவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – விராட் கோலி களத்தில் இறங்கினர். இந்த தொடர் முழுவதுமே சுமாராக விளையாடிய விராட் கோலி 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப் பந்த்துடன் இணைந்த கேப்டன் ரோஹித் ஆஸ்திரேலிய பந்து வீச்சை வெளுத்தெடுத்தார். குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு ஓவரில் மட்டும் 29 ரன்கள் எடுத்தார் ரோஹித். பந்த் 15 ரன்னில் ஆட்டமிழக்க 41 பந்தில் 8 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து கேப்டன் ரோஹித் சர்மா வெளியேறினார். தொடர்ந்து சூர்யகுமார் 31 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 205 ரன்கள் குவித்தது.

Advertisement

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.தொடக்கத்திலேயே டேவிட் வார்னர் விக்கெட்டை இந்திய அணி கைப்பற்றியது. 6 ரன்கள் எடுத்திருந்தபோது வார்னர் வெளியேறினார். பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் – மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு வர முயற்சித்தது.மார்ஷ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேக்ஸ்வெல் 20 ரன்களும், டிம் டேவிட் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 43 பந்துகளில் 4 சிக்சர் 9 பவுண்டரியுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதனால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.ஆஸ்திரேலியா அணியின் இந்த தோல்வி காரணமாக இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் இடையிலான போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். அதே சமயம் வங்கதேசம் வெற்றி பெற்றாலும், ஆப்கானிஸ்தான் அணி அதிக ரன்களைக் குவித்து இருந்தால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை வங்கதேசம் சிறப்பான வெற்றியை பதிவு செய்தால், ஆஸ்திரேலியா அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

Tags :
AustraliaIndiat 20
Advertisement
Next Article