For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

டி-20 உலககோப்பை: இந்தியா ‛சாம்பியன்'!

06:07 AM Jun 30, 2024 IST | admin
டி 20 உலககோப்பை  இந்தியா ‛சாம்பியன்
Advertisement

டி20 உலக கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக 1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. 2007,2011-தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பைகளை வென்று அசத்தியது.கபில்தேவ், தோனியை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து உலக முழுவதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் பார்படாஸில் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினார்கள். இந்த தொடர் முழுவதும் பார்ம் இல்லாமல் தவித்த விராட் கோலி முதல் இரண்டு பந்திலும் பெளண்டரி அடித்து அசத்தினார். முதல் ஓவரில் இந்திய அணி 15 ரன் எடுத்தது. ஆனால் 2வது ஓவரில் 2 பெளண்டரி விளாசிய கேப்டன் ரோகித் சர்மா 9 ரன் எடுத்து மகாராஜ் பந்தில் அவுட் ஆனார்.

Advertisement

அடுத்து வந்த ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்பு சூர்யகுமார் யாதவும் 3 ரன்னில் ரபடா பந்தில் அவுட் ஆனதால் இந்தியா 4 ஓவரில் 34/3 என தடுமாறியது. ஆனால் மறுபக்கம் விராட் கோலி நிலையாக விளையாடினார். அவருக்கு அக்சர் படேல் ஒத்துழைப்பு கொடுத்தார்.அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 4 சிக்சர்களுடன் 31 பந்தில் 47 ரன்கள் எடுத்து துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மறுபக்கம் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி சூப்பர் அரைசதம் (59 பந்தில் 76 ரன்கள்) விளாசி அவுட் ஆனார். இந்த தொடர் முழுவதும் மோசமாக விளையாடிய அவர் இறுதிப்போட்டியில் ஜொலித்துள்ளார். இதில் 7 பெளண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 16 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் குவித்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட் இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 106/4 என பரிதவித்தது. ஆனால் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் சிக்ஸர் மழை பொழிந்தார். 16 ஓவரில் ஸ்கோர் 151 ஆக உயர்ந்தபோது கிளாசன் 27 பந்தில் 52 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழந்து 169 ரன் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன்மூலம் இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்திய அணிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement