இந்திய பெண்கள் அறிவியல், தொழில்நுட்ப ஆர்வத்தை ஊக்குவிக்கும் ஸ்வாதி ('SWATI')தளம்!
இன்றைய இயந்திரமயமான உலகம், மேலும் முன்னேற்றத்தை நோக்கி விரைகிறது. அதற்கேற்ப நமது அறிவை வளப்படுத்தும் கல்விமுறையிலும் மாற்றத்தின் தேவை உணரப்படுகிறது. இந்த நூற்றாண்டு, மாபெரும் அறிவியல், தொழில்நுட்பங்களின் காலமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கேற்ப நமது இளம் தலைமுறையினரான மாணவ சமுதாயம் வடிவமைக்கப்படுவது அவசியம் என்ற சிந்தனையின் விளைவு தான், ஸ்டெம் கல்விமுறை. அதை கவனத்தில் கொண்டு நம் நாட்டின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் “பெண்களுக்கான அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு (SWATI)” தளத்தைத் தொடங்கிவைத்தார். இது ஸ்டெம் (STEMM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
அறிவியலில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுமிகள் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் (ஐஎன்எஸ்ஏ) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தளத்தைத் தொடங்கி வைத்த பேராசிரியர் அஜய் குமார் சூட், இந்தத் தரவுத்தளம் பாலின இடைவெளி தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கொள்கை வகுக்க உதவும் என்றார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
SWATI Portal Launch at INSA, New Delhi https://t.co/0w6osXlarl
— Indian National Science Academy (INSA) (@insa_academy) February 11, 2024
இந்த தளத்தில் பல்வேறு பிரிவுகளில் ஸ்டெம் கல்வியில் முன்னணி பெண் சாதனையாளர்கள், முக்கிய விருது பெற்றவர்கள், ஆய்வாளர்கள், வல்லுநர்கள் உட்பட 3,000 தரவுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த இளம் பெண் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், இளம் புத்தொழில் நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அறிவியலை மேம்படுத்துவதற்கான தளம் உருவாக்கப்படும்.
மனித வளத்தில் 50 சதவீதம் பெண்களாக உள்ளனர். பெண் விஞ்ஞானிகள் பல்வேறு அறிவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வாய்ப்புகளை வழங்க முடியும், இதன் மூலம் பாலின இடைவெளியைக் குறைத்து, எதிர்மறையான தடைகளை அகற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.