தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சூர்யாவின் தெளிவும்,ஜோதிகாவின் புது வாழ்வும்!

02:16 PM Nov 01, 2024 IST | admin
Advertisement

டிகர் சூரியா தன் மனைவியின் விருப்பத்துக்கு ஏற்ப மும்பை குடிபுகுந்தது குறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். 'எப்போதுமே ஆண்கள்தான் பெண்களிடம் இருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? ஆண்கள் கொடுக்கத் துவங்க வேண்டும். அதைத்தான் நான் முயற்சி செய்கிறேன்,' என்று பேசி இருக்கிறார். இதனை வரவேற்று நிறைய பதிவுகள் வந்திருந்தாலும் சிலர் கேலி செய்தும், விமர்சித்தும் எழுதி இருக்கின்றனர். 'திரைக்குப் பின்னும் சூரியா நன்றாக நடிக்கிறார்,' என்று கூட ஒரு பதிவு பார்த்தேன். அந்தப் பேட்டியில் சூரியா பின்வருமாறு கூறுகிறார்: Whatever a man needs a woman needs it too. She needs her parents; she needs her friends; her financial independence; her space; her gym time; her fitness.

Advertisement

நிஜத்தில் அப்படி நடப்பதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆனவுடன் தனது சொந்த வீடு, அம்மா, அப்பா, உற்றார் உறவினர், நட்புகள், நாய்க்குட்டி என்று தனக்குப் பரிச்சயமான எல்லாவற்றையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு மாற்றலாக வேண்டி இருக்கிறது பலர் ஊரையும் வேலையையும் கூடத் துறந்து போகிறார்கள். அப்படிப் போகும் பெண் ஒரு வேலைக்காரி போலத்தான் புகுந்த வீட்டில் நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது. மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்தாலும் பிறப்பில் இருந்தே மகளுக்குதான் படிப்புடன் சேர்த்தே சமையல் மற்றும் வீட்டு வேலை ட்ரைனிங் கொடுக்கப்படுகிறது. இவ்வளவும் அந்தப் பெண்ணுக்கு நிகழும் போது, பிறந்ததில் இருந்து தான் வசித்த ரூமைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல், தனது அம்மாவின் முந்தானைத் தலைப்பையும் விடாமல் பற்றிக் கொண்டே அந்த ஆண்மகன் தனது வாழ்வைத் தொடர முடிகிறது.

Advertisement

இந்தியாவில் படித்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள் பெரும்பாலானோர் திருமணத்துக்குப் பின் வேலையை துறந்து வீட்டில் அடைந்து போகிறார்கள். மத்திய அரசின் தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வறிக்கையின்படி திருமணமான பெண்களில் சுமார் 32%தான் வேலைக்குப் போகிறார்கள். ஆண்களிடையே இது 98%ஆக இருக்கிறது.பெண்களும் ஆண்களுக்கு நிகராக படிக்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். வாய்ப்புக் கொடுக்கும் இடங்களில் எல்லாம் பட்டையை கிளப்புகிறார்கள். ஆனால் அந்த மாற்றத்தை இந்திய சமூகம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. பெண் அடக்குமுறை என்றால் நமக்கெல்லாம் உடன்கட்டை, விதவைக் கோலம், வரதட்சிணை போன்றவைதான் நினைவுக்கும் வரும். ஆனால் இந்தியக் கலாச்சாரம் இன்று வரை பெண்களின் மீது நிகழ்த்தி வரும் அநீதிகள், அடக்குமுறைகளின் பட்டியல் மிக நீளமானது.

தனது கேரியரின் உச்சத்தில் ஜோதிகா திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகினார். அதனை அப்போது யாரும் குறிப்பிட்டு அங்கலாய்க்கவில்லை. ஆனால் இன்று ஜோதிகாவின் தேவைகளுக்காக சூரியா ஊர் மாறி மும்பை குடிபுகுவது நடிப்பாகத் தோன்றுகிறது.அதே பேட்டியில் தனக்கு வந்த அந்தத் தெளிவு தாமதமானது என்றும் அவர் ஒப்புக்கொள்கிறார். அதற்காக கொஞ்சம் வெட்கப்படவும் செய்கிறார். அந்த வெட்கம் எனக்குப் பிடித்திருந்தது. காரணம் நம்மில் நிறைய பேருக்கு இந்தத் தெளிவு தாமதமாகவே வருகிறது. காரணம் அப்படி மனைவியின் தேவைகளை கருத்தில் கொள்ளும் கணவனை அவமதிப்பதுதான் இங்கே சமூக சூழலாக இருக்கிறது. இன்றைய நவீன பெண்ணியவாதிகளுக்குப் பிறக்கும் ஆண்கள் ஒருவேளை இயல்பிலேயே இந்தத் தெளிவுடன் வளரலாம். ஆனால் மீதிப் பேர் ஏதோ ஒரு கட்டத்தில் தெளிவு பெறுவதுதான் நடக்கிறது. அப்போதாவது நடக்கிறதே என்று நிம்மதி கொள்ள வேண்டியதுதான்.

சூரியாவுக்கு அந்தத் தெளிவு சமீபத்தில் கிடைத்திருக்கிறது என்பதும் அதை ஒப்புக் கொள்ளும் மற்றும் செயல்படுத்தும் துணிச்சலும் உள்ளது என்பதும் நல்ல விஷயம். அதற்காக அவருக்குப் பாராட்டுகள். அந்தத் தெளிவின் மூலம் கிடைத்திருக்கும் புதிய வாழ்வுக்காக ஜோதிகாவுக்கு வாழ்த்துகள். You got back your space, parents, friends, financial independence, and your gym time! Enjoy!

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
FamilyjyothikalifeMumbaiOpens UpSuriyawomenசூர்யாஜோதிகாமும்பை வாழ்க்கை
Advertisement
Next Article