For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மணல் குவாரிகள் மீதான தடை நீக்கம் ...! - சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு

04:55 PM Feb 05, 2018 IST | admin
மணல் குவாரிகள் மீதான தடை நீக்கம்        சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு
Advertisement

“இன்னும் 600 ஆண்டுகளில் பூமி ஒரு எரிபந்துபோல ஆகிவிடும்” என்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டித்தான் ஐகோர்ட் நீதிபதி தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்துக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்ற பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Advertisement

நம் தமிழகத்தில் நடைபெற்ற மணல் கொள்ளை வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், பூமி எரிபந்தாவதற்கான முதல் கொள்ளி, தமிழகத்தில்தான் வைக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றும்.மனிதன் ‘மண்’ வீட்டில் இருந்து ‘காரை’ வீட்டுக்கு மாறிய காலத்தில் இருந்தே, ‘மணல்’ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனாலும் அது மணல் கொள்ளையாக உருவெடுத்தது 1990-களில்தான். தமிழகத்தில் உள்ள 17 பெரிய ஆறுகள், 34 சிறிய ஆறுகள், கிளை ஆறுகள் அனைத்திலும் மணல் கொள்ளை பூதாகரமானதாலும், அதனால் நிலத்தடி நீர் பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவை ஏற்பட்டதாலும் விவகாரம் நீதிமன்றப் படியேறியது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு முடிவு கட்டுமாறு 26.7.2002 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

Advertisement

இந்த உத்தரவை ஏற்று,1.10.2003 முதல் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் பொதுப்பணித்துறையே நேரடியாக ஏற்று நடத்தும் என்று அரசு ஆணையிட்டது. மணல் பயன்பாட்டை முறைப்படுத்த கிடைத்த வாய்ப்பை, மணல் கொள்ளையை சட்டப்பூர்வமாக்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் ஆளும் வர்க்கத்தினர். இதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பெயர் தான் ‘அரசு குவாரி’ என்று மாறியதே தவிர, குவாரிகளை பொதுப்பணித்துறையால் நேரடியாக கண்காணிக்க முடியவில்லை. மணல் எடுப்பது, விற்பது ஆகிய பணிகள் அனைத்தும் ‘மணல் அள்ளி ஏற்றும் ஒப்பந்தம்’ என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் சுட்டிக்காட்டிய நபர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக விலை உயராத ஒரே பொருள் மணல் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. 2003-ம் ஆண்டு ஒரு லோடு மணல் (2 யூனிட்) ரூ.1000 என்றும், வரி 50 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்தது தமிழக அரசு. அடுத்த ஆண்டே அது ரூ.650 என்று குறைக்கப்பட்டது. இப்போது வரையில் அதுதான் விலை. ஆனால், அந்த விலையில் யாரும் மணல் வாங்க முடியாது. திருச்சி போன்ற மத்திய மாவட்டங்களில் ஒரு லோடு ரூ.18 ஆயிரத்துக்கும், சென்னை, குமரி போன்ற விளிம்பு மாவட்டங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 15 ஆண்டுகளில் மணல் விற்பனை மூலம் அரசுக்கு வெறும் 2,000 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் மணல் மாபியா கும்பலுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் சென்றுள்ளது. இதுபற்றி சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பலரின் கருத்தாக உள்ளது.

மிகமிக அதிக லாபம் கிடைப்பதால், மணல் கொள்ளையர்கள் கொலை செய்யவும் துணிந்தார்கள். மணல் குவாரிகள் அரசின் பொறுப்பிற்குப் போகும் முன்பு, அந்தந்த பகுதி ரவுடிகள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகள்தான் மணல் திருட்டில் ஈடுபட்டனர். அப்போதெல்லாம் மக்கள் ஒன்றுதிரண்டு போலீஸ் மற்றும் அரசு துறைகளின் உதவியோடு அதனை ஓரளவுக்கேனும் தடுக்க முடிந்தது. ஆனால், அரசு கைக்கு மணல் குவாரிகள் போன பிறகு, மணல் கொள்ளையும் அரசு துறைகளில் ஒன்று என்று அங்கீகரிக்கப்பட்டது போலாகிவிட்டது.

இத்தனைக்கும் மலேசியா, பர்மா, இந்தோனேசியாவில் இருந்து எத்தனை லட்சம் மெட்ரிக் டன் அளவிலும் மணல் இறக்குமதி செய்யலாம்; ஒரு யூனிட் விலை 500 ரூபாய். போக்குவரத்து செலவு ஒரு யூனிட்டிற்கு 500 ரூபாய் என ஒரு யூனிட் மணலை 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். இதை கவனத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு வழக்கை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகா தேவன் விசாரித்தார்.முடிவில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று அவர் கடந்த 29-ந் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.மேலும், ‘சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் பொருட்டு ஜல்லியைத் தவிர மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் உள்ளிட்ட பிற கனிம குவாரிகளையும் மூட வேண்டும்’ என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

இதனால் படிப்படியாக மணல் குவாரிகள் மூடப்பட்டு, தமிழகத்தில் ஒரு சில மணல் குவாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இந்நிலையில், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து, மணல் குவாரிகளை ஏற்கெனவே உத்தரவிட்டபடி மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஆற்று மணலை நம்பியே நடைபெற்று வருகின்றன. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தடை அறிவிப்பால் அனைத்து கட்டுமானப் பணிகளும் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மணல் குவாரிகளை மூடுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது சமூக ஆர்வல்ர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement