தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஸ்டேட் பேங்க்-க்கு சுப்ரீம் கோர்ட் நெருக்கடியான உத்தரவு!

01:42 PM Mar 11, 2024 IST | admin
Advertisement

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது. அத்துடன் நாளை மார்ச் 12-ஆம் தேதி வணிக நேரம் முடிவதற்குள் அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. “எஸ்பிஐ தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதை வைத்து பார்த்தல் இந்த தகவல்கள் உடனடியாக கிடைக்க கூடியது தான் என்று தெரிகிறது. எனவே, ஜூன் 30 வரை கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய எஸ்பிஐயின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

நம் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு பதிலாக, தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுக்கும் திட்டதை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. 2018-ம் ஆண்டு முதல் அமலில் உள்ள இந்த திட்டத்தின் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரங்களை வெளியிட்ட்டது. திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை ரூ.16,000 கோடி நிதி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக போய்ச்சேர்ந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கான செலவு மற்றும் கமிஷன் போன்றவற்றுக்கான கட்டணமாக ரூ.13.50 கோடியை எஸ்.பி.ஐ பெற்றிருக்கிறது. இந்தத் தகவல்களை எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரான லோகேஷ் பத்ரா பெற்றிருக்கிறார். ஆனால், யார், எந்தக் கட்சிக்கு, எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற விவரங்களை யாரும் அறிந்துகொள்ள முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

இந்த நிலையில், பொது நல வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தேர்தல் பத்திரங்களை தடைசெய்தது. அத்துடன், இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் மாதம் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அத்துடன் அந்த தகவல்களை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் மார்ச் 13 -ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க 4 மாத கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ வங்கி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று மார்ச் 11-ம் தேதி நடந்தது.அப்போது, எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ``கோர் பேங்கிங் அமைப்புக்கு வெளியே தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த தகவல்களை தொகுக்க வங்கி ஒரு சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்திருக்கிறது. எனவே, எங்களுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை. நாங்கள் தகவல்களைத் தொகுக்க முயற்சி செய்கிறோம். முழு செயல்முறையையும் நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். ஒரு வங்கியாக இது ஒரு ரகசியமாக இருக்க வேண்டும் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது" என முறையிட்டார்.

அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சந்திரசூட், ``நன்கொடையாளர் விவரங்கள் வங்கியின் மும்பை கிளையில் சீல் வைக்கப்பட்ட கவரில் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததே..." எனக் கேள்வி எழுப்பினார்.அப்போது தலைமை நீதிபதி அமர்வு, ``தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மிக எளிமையான ஒரு உத்தரவை தான் எஸ்பிஐ வங்கிக்கு கொடுத்தோம். அதனை பின்பற்றுவதற்கு கால அவகாசம் கோருவது என்பதை எந்த வகையில் ஏற்பது” என கேள்வி எழுப்பியது.

“இந்தியா முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது அந்த தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது. இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத வேலையை ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை. ஏற்கெனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். அப்படி இருக்கும்பொழுது அந்த வேலையை செய்து முடிக்க தற்போது கால அவகாசம் கேட்பது ஏன்? அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்கக் கூடியது. அதை வெளியிட எஸ்பிஐ ஏன் கால அவகாசம் கேட்கிறது?” என்றார்.

மேலும் , தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வரும் ஜூன் 30-ம் தேதி வரை 4 மாதம் கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் “எஸ்பிஐ வங்கி நாளை மாலைக்குள் தேர்தல்பத்திர விவரங்களை வெளிவிட வேண்டும். மார்ச் 15-ம் தேதிக்குள் அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டது. அது மட்டுமின்றி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடும் உத்தரவை செயல்படுத்த தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

Tags :
SBISCstate bank of indiaSupreme Courtசுப்ரீம் கோர்ட்தேர்தல் நிதி பத்திரம்ஸ்டேட் பேங்க்
Advertisement
Next Article