For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 0.2% உயா்வு: மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!

12:17 PM Dec 30, 2023 IST | admin
செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 0 2  உயா்வு  மத்திய நிதியமைச்சகம் உத்தரவு
Advertisement

செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு நடத்தி வரும் ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமாகும். உங்களுக்கு 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தை இருந்தால் அவளின் எதிர்காலம் கருதி இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவீர்கள். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். மேலும் இத்திட்டமானது 21 வருடங்களில் மெச்சூரிட்டி ஆகும்.

Advertisement

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 முதலீடு செய்தால் கூட ஒரு நல்ல அளவிலான தொகையை கட்டாயமாக நீங்கள் ரிட்டனாக பெற்றுக் கொள்ளலாம். அந்த பணத்தை உங்கள் பெண்பிள்ளை சம்பந்தப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். தற்போது இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது.நீங்கள் ஒவ்வொரு மாதமும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 5000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இப்படி இருக்க ஒரு ஆண்டுக்கு நீங்கள் 60,000 ரூபாயை முதலீடு செய்வீர்கள். இவ்வாறாக நீங்கள் 15 வருடங்களில் 9 லட்சம் ரூபாயை மொத்தமாக முதலீடு செய்திருப்பீர்கள்

Advertisement

15 முதல் 21 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் எந்த ஒரு முதலீடும் செய்ய தேவையில்லை. எனினும் உங்களுக்கான வட்டி ஒவ்வொரு வருடத்திற்கும் 8 சதவீதமாக கணக்கிடப்பட்டு வரும். இதனை கணக்கீடு செய்யும் பொழுது நீங்கள் முதலீடு செய்த 9 லட்சம் ரூபாய்க்கு உங்களுக்கு 17,93,814 ரூபாய் வட்டியாக கிடைக்கும். அதாவது உங்களது மொத்த முதலீடும் கிட்டத்தட்ட இரட்டிப்பாக கிடைக்கிறது. இறுதியாக உங்களுக்கு 26,93,814 ரூபாய் மெச்சூரிட்டியின் போது கிடைக்கும். தோராயமாக 27 லட்சம் ரூபாய் உங்கள் கைக்கு கிடைக்கும். நீங்கள் 2023 ஆம் ஆண்டில் முதலீடு செய்ய துவங்கினால் உங்களுக்கான மெச்சூரிட்டி தொகை 2044 ஆம் ஆண்டில் கிடைக்கும். இந்த பணத்தை உங்கள் பிள்ளையின் படிப்பு அல்லது திருமணம் போன்ற செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C -இன் கீழ் இந்த திட்டத்திற்கு நீங்கள் டேக்ஸ் எக்ஸ்சம்ப்ஷனை பெற்றுக் கொள்ளலாம். அதாவது அதிகபட்சமாக நீங்கள் 1.50 லட்சம் ரூபாய் வரை வரி சலுகைகளை கோரலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே சேமிப்பு கணக்கை திறக்க முடியும்.

இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை முறையே 0.2 சதவீதம் மற்றும் 0.1 சதவீதம் உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்து 8.2 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 7சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 7.1 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித மாற்றம் வரும் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அமல்படுத்தப்படும். மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement