உலகிலேயே இந்தியாவில்தான் தற்கொலைகள் அதிகம்!
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஏப்ரலில்அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை விகிதம் 1,00,000-க்கு 12.4 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு உலகத்திலேயே இந்தியாவில் தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பேசும் மனநல நிபுணர்கள், வாழ்க்கையில் ஏற்படும் வேலை அழுத்தங்கள், நிதி, உறவுப் பிரச்னைகள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. அப்போது மன அழுத்தம் தீவிரமடைந்து கவலை மற்றும் மனச்சோர்வாக மாறும். இது தற்கொலைக்கு வழிவகுக்கும். தற்கொலையால் இறக்கும் நபர்களில் 50 முதல் 90 சதவீதம் பேர் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் இருமுனைக் கோளாறு போன்ற மன நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், “உலகத்திலேயே சமூக பொருளாதார நெருக்கடி இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது. 70 ஆண்டுகளில் இதுபோல் நெருக்கடி ஏற்பட்டதில்லை. இந்தியாவில் இருக்கும் முக்கிய பணக்காரர்கள் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அபகரித்து வைத்துள்ளனர். இதனால் பணம் வைத்திருப்பவர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள்.
லஞ்ச, லாவண்யம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கிறது. உயர்கல்வியில் சரியான பாடங்களை தேர்வு செய்ய முடியவில்லை. விவசாயிகளுக்கும் அதீத நெருக்கடி இருக்கிறது. உலகிலேயே அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியாதான். இதேபோல் ஆண்டுதோறும் 6 கோடி பேர் மருத்துவ செலவுக்கு செலவு செய்தே வறுமை கோட்டுக்கு கீழ் சென்று விடுகிறார்கள். இதனால்தான் தற்கொலை அதிகமாக நடக்கிறது. எனவே பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். அடித்தட்டு மக்களிடன் வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.