‘சர்க்கரை அட்டை’ வைத்திருப்போருக்கும் நிவாரணம் வேண்டும்!
இந்த மழை வெள்ளத்தில் சென்னையிலும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் பாதிக்கப்படாதவர்கள் மிகமிகக் குறைவு. அப்படியிருந்தும் ரேஷனில் ‘அரிசி அட்டை’ வைத்திருப்போருக்கு மட்டுமே வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறதென்பது அநியாயத்திலும் அநியாயம்.’சர்க்கரை அட்டை’ வைத்திருப்போரும் நிறையவே பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
சர்க்கரை அட்டைதாரர்கள்தான் வசதியானவர்களாயிற்றே... அவர்களுக்கு எதற்கு நிவாரணம் என்று கேட்கலாம்; அதில் நியாயம் இருப்பதும் உண்மைதான். ஆனாலும் ஒரு கேள்வி… அரிசி அட்டை வைத்திருப்போர் அனைவரும் உண்மையிலேயே ஏழைகள்தானா? அவர்களெல்லாம் ரேஷனில் அரிசி வாங்கி, அந்த அரிசியைத்தான் சமைத்துச் சாப்பிடுகிறார்களா? இதைக் கணக்கெடுக்கும் துணிச்சல் அரசுக்கு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. எடுத்தால் ஓட்டு போய்விடும் என்பது ஸ்டாலினுக்கு மட்டுமல்ல; எடப்பாடியிலிருந்து அத்தனை பேருக்கும் தெரியும்.
ரேஷன் அரிசியில் சமைத்துச் சாப்பிடும் ஏழை மக்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். என்றாலும் நிறையப் பேர் ரேஷனில் வாங்கும் அரிசியை தோசை மாவு விற்போருக்குத்தான் குறைந்த விலைக்கு விற்றுக் காசாக்குகிறார்கள்.
இப்படி அரசாசாங்கத்தை ஏமாற்றாமல், ‘நாங்கள் ரேஷன் அரிசியில் சமைக்கப் போவதில்லை. அதனால் எங்களுக்கு அரிசி வேண்டாம; சர்க்கரை அட்டையே கொடுத்து விடுங்கள்’ என்று நேர்மையான முறையில் வாழ்வோருக்குப் பொங்கல் இனாம் கொடுக்காவிட்டாலும் வெள்ள நிவாரணமாவது கொடுக்க வேண்டாமா? நேர்மையாக நடந்து கொள்வோரை அரசாங்கம் நடத்தும் விதம் இதுதானா?
இதையெல்லாம் பார்க்கும்போது...
இன்று பாதிக்கப்பட்டு ஏமாந்து நிற்பவர்கள் அனைவரும்…
‘வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’ என்று அன்று கண்ணகி கேட்டதுபோல் கேட்க வேண்டியதுதான் போலிருக்கிறது.
அன்று கண்ணகி கேட்டாள்; நீதியும் பெற்றாள்.
ஆனால் இன்று?